Advertisement

'சி' 'வா' என்ற உச்சரிப்புகள் சேர்வதால் என்ன நிகழ்கிறது?

Share

ஆச்சரியப்படத்தக்க பல்வேறு வரலாற்று ஆதாரங்களை எடுத்துக்கூறி, சிவா எனும் தன்மை உலகின் பல்வேறு பகுதிகளிலும் கலாச்சாரங்களிலும் உணர்ந்து வணங்கப்பட்டு வந்துள்ளதை சத்குரு இங்கே விளக்குகிறார். 'சிவா' என்ற உச்சரிப்பில் உள்ள ஆழமான தன்மை குறித்தும் சத்குருவின் விளக்கத்தை அறியமுடிகிறது!

கேள்வி: சிவன் இத்தனை பெரிய யோகியாய் இருந்தும், பிற கலாச்சாரங்கள் அவரைப் பற்றி பேசுவதில்லையே... ஏன்?

சத்குரு: ஞானம் பெற்ற எந்தவொரு ஜீவனும் சிவனைப் பற்றி பேசாமல் இல்லை. அளவற்ற ஒரு பரிமாணத்தை பற்றி அல்லது இயற்பியல் சாராத ஒரு தன்மையை பற்றி அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஒரே வித்தியாசம் - அவர்களது மொழியில், அவர்களது பகுதியை சார்ந்த குறியீட்டின் மூலம் இதை அவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.

“சிவா” என்ற வார்த்தைக்கான பொருள் “எது இல்லையோ அது”. ஒவ்வொரு பொருளும் ஏதும் இல்லாத நிலையில் தொடங்கி, அதிலேயே நிறைவுறுகிறது என்று இன்றைய நவீன விஞ்ஞானம் நிரூபிக்கிறது. படைத்தலின் மூலமும் பிரபஞ்சத்தின் அடிப்படை இயல்பும் பரந்து விரிந்த வெறுமையே; ஏதும் இல்லாத நிலை.

பால்வெளி மண்டலம் ஒரு சிறு நிகழ்வே. ஒரு தூறல் எனலாம். மீதம் இருப்பது பரந்த வெறுமை வெளி. அதுவே சிவா என்று குறிப்பிடப்படுகிறது. அனைத்தும் இந்த கருவில் இருந்தே தோன்றின; மறுபடியும் அனைத்தும் அங்கேயே கிரகிக்கப்படுகின்றன. அனைத்தும் சிவனில் தொடங்கி சிவனில் முடிகின்றன.

நீங்கள் சரியான முறையில் கிரகிக்கும் தன்மையில் இருந்தால் இந்த ஒலி உங்களை வெடிக்கச் செய்யும்.

சிவனின் மற்றொரு பரிமாணம் ஆதியோகி - மனித இனத்திற்கு யோக சூத்திரம் என்ற அளப்பரிய விஞ்ஞானத்தை அருளிய முதல் யோகி.

இது முரண்பாடான ஒன்றா? கண்டிப்பாக கிடையாது. ஏனெனில், யோகா அல்லது முடிவான ஐக்கியம் நிகழ்ந்தால், அதை உணர்பவர்களிடையே எந்த வித்தியாசமும் இருக்காது.
உயிரைப் பற்றிய ஒரு ஆழமான புரிதலின் மூலம் “சிவா” என்ற ஒலியை நாம் அடைந்தோம். வியக்கத்தக்க விஷயங்களை “சிவா” என்ற ஒலி உங்களுக்கு நல்கும் என நாம் அறிந்திருந்தோம். நீங்கள் சரியான முறையில் கிரகிக்கும் தன்மையில் இருந்தால் இந்த ஒலி உங்களை வெடிக்கச் செய்யும். ஒருமுறை இந்த வார்த்தையை உதிர்த்தாலே ஆற்றல்மிக்க வகையில் உங்களுக்குள் தகர்க்கப்படுவீர்கள்.

“சிவா”வில் ஒரு பகுதி சக்தியூட்டக் கூடியது; மறுபகுதி அதை சமநிலை அல்லது கட்டுப்படுத்தக் கூடியது.

அடிப்படையில் “சி” என்ற ஒலி ஆற்றலை அல்லது சக்தியை குறிக்கும். இந்திய வாழ்க்கை-முறையில் நாம் பெண்தன்மையை சக்தி என்று குறிப்பிட்டுள்ளோம். எவ்வாறோ ஆங்கில மொழியும் பெண் தன்மையை குறிக்க “சி” (she) என்ற வார்த்தையையே கொண்டுள்ளது. அடிப்படையில் “சி” என்றால் சக்தி. ஆனால், தொடர்ந்து மிகையாக “சி”யையே செய்து கொண்டிருந்தால் நிலை தடுமாறிவிடுவீர்கள். எனவே, “வா” என்ற மந்திரம் இணைக்கப்பட்டதால் அதன் வேகம் குறைக்கப்பட்டு ஒரு சமநிலை உருவாக்கப்பட்டது.
“வாமா” என்றால் ஆளுமை; அதிலிருந்து “வா” பிறந்தது. எனவே “சிவா”வில் ஒரு பகுதி சக்தியூட்டக் கூடியது; மறுபகுதி அதை சமநிலை அல்லது கட்டுப்படுத்தக் கூடியது. கட்டுப்படுத்தப்படாத ஆற்றலால் பலன் இல்லை; அது பேரழிவை உருவாக்கலாம். எனவே, நாம் “சிவா” என்று கூறுவது, சக்தியை ஒரு நிச்சயமான முறையில் ஒரு நிச்சயமான திசையில் இயக்கும் விதத்தைத்தான்.

முழுமையான ஒலி அமைப்புகளை கொண்ட அறிவியல் பூர்வமான மொழியை உருவாக்கும் சூழல் நமக்கு இந்தியாவில் இருந்தது. இந்த கலாச்சாரத்தில் நாம் அர்த்தத்திற்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்ததில்லை; மாறாக அந்த ஒலி எழுப்பும் அதிர்வுகளுக்கே முக்கியத்துவம் கொடுத்தோம்.

வார்த்தையின் அர்த்தம் மனித மனங்களில் வாழும்; ஆனால் அதன் ஒலி பிரபஞ்சத்தில் வாழும். இதன் காரணமாகவே, நாம் உருவாக்கிய மொழி ஒலி சார்ந்ததாய் உள்ளது. அதன் பின்பே, அந்த ஒலிக்கு ஒரு அர்த்தத்தை இணைத்தோம். சரியான ஒலிகளை அமைத்து அதனை உள்ளவாறே நாம் விவரித்துள்ளோம். ஆனால், மற்ற கலாச்சாரங்களிலும் இத்தகைய விஷயங்களை பற்றி குறிப்பிட்டுள்ளனர்.

மறைந்துபோன மெய்ஞான உலகங்கள்

எனினும், கடந்த 1500 வருடங்களில் வலிமையான ஆக்கிரமிப்புகளால் மதங்களை பரப்பும் செயல்கள் இந்த உலகில் நிகழ்ந்ததால் பல உயர்ந்த கலாச்சாரங்கள் - பழமையான மெசபட்டோமியா நாகரிகம், மத்திய ஆசிய நாகரிகங்கள் மற்றும் வட ஆப்பிரிக்க நாகரிகங்கள் அழிந்துவிட்டன. இதனால், எந்த இடத்திலும் தென்படவில்லை. ஆனால் அவர்களின் வரலாற்றை கூர்ந்து நோக்கினால் இது எங்கும் இருந்தது தெரியவரும். உதாரணமாக, ரூமி தன் இறுதி நாட்களை கழித்து, மறைந்த துருக்கியில் உள்ள கொன்யா என்னும் இடத்தில் அவரின் சமாதி உள்ளது. நான் அங்கு சென்றபோது அங்கே ஒரு பெரிய லிங்கம் வெளியில் கிடத்தப்பட்டிருப்பதை கண்டேன்.

ஒருபுறத்தில் அது அழிந்து இருந்தது. ஆனால், மறுபுறம் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருந்தது - சுமார் 2,500 அல்லது 3,000 ஆண்டுகள் கழித்தும். உலகின் தொப்புள் என அறியப்படும் கிரேக்கத்தில் உள்ள டெஃல்பி இன்னுமொரு உதாரணம். அங்கு மணிப்பூரக லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டதால், அதனை உலகின் தொப்புள் என்கின்றனர்.

4,200 ஆண்டுகளுக்கு முன்னால் அந்த லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது. இந்த லிங்கத்தின் மைய பாகத்தில் பாதரசம் இருந்திருக்கிறது. அங்கு நிகழ்ந்த பல கொடிய விஷயங்களினால் அந்த பாதரசம் சிதறடிக்கப்பட்டிருக்கிறது. எனவே, ஒரு வகையில் மெய்ஞான அறிவியல் ஒவ்வொரு கலாச்சாரத்திலும் இருந்து வந்தது. ஆனால், கடந்த 1,500 வருடங்களில் உலகின் மற்ற பகுதிகளில் பெரும்பாலும் அவை அழிக்கப்பட்டுவிட்டன.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement