Advertisement

முன்னோடியாக உள்ளதா பட்ஜெட்?

தமிழகத்தின், 2019 - 2020ம் ஆண்டு பட்ஜெட், கவர்ச்சிகளைக் கொண்டிருக்கவில்லை. என்றாலும், இன்றைய தமிழக பட்ஜெட், எதிர்காலத்திற்கு எந்தளவு முன்னோடியாக இருக்கும் என்பதை, சரியாக கணிக்கவில்லை.கடந்தாண்டை விட, நிதிப்பற்றாக்குறை சிறிது குறைந்து, அது, 14 ஆயிரத்து, 314 கோடி ரூபாயாக மாறியிருக்கிறது என்றாலும், சில அம்சங்களின் செலவுகள், அரசின் கணிப்புக்குள் முடிந்து விடுமா என்பதைக் கூற முடியாது.ஏனெனில், கடன் சுமை என்பது கிட்டத்தட்ட, 4 லட்சம் கோடி ரூபாய் என்பது, அடுத்த பட்ஜெட் போடும்போது, அதிக வளர்ச்சித் திட்ட செலவினங்களுக்கு தடையாக மாறலாம். அரசு வாங்கும் கடனுக்கு, வட்டி சதவீதம் மிகக்குறைவு என்றாலும், வருவாய் அளவு, 'ஓஹோ' என்று அமையும் காரணிகள் அதிகம் காணோம்.தமிழகத்திற்கு, மத்திய அரசு நிதிக் கமிஷன் தரவிருக்கும் நிதி ஆதாரம் குறைகிறது என்பதை சீராக்க, மத்திய அரசு சில முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது. ஏனெனில், வளர்ந்த மாநிலங்கள் என்ற பார்வை, குஜராத், மஹாராஷ்டிரா, தமிழகம் போன்ற சில மாநிலங்களுக்கு இடைஞ்சலாகும். ஆனால், நிதி ஆதாரப் பங்கீடுகளை, எப்படி வரிசைப்படுத்த வேண்டும் என்பதைப் பொறுத்து இனி, 'பெடரல் நிதி ஆளுமை' குறித்து, 'நிடி - ஆயோக்' வழிகாட்டலாம்.ஏனெனில், ஐந்தாண்டுகளுக்கான திட்டங்கள் என்றபோது, சில ஆண்டுகள் நிதிக்குறைவால், அமலாவதில் தேக்கம், அதற்குப் பின், அதன் பணிகளை நிறைவேற்றுவதால் ஏற்படும் அதிக செலவினம் குறித்த தகவல்களை, தமிழக அரசு ஆய்ந்தால் ஒழிய, பல பிரச்னைகள் அதிகரிக்கும்.விவசாயிகளுக்கு, 10 ஆயிரம் ரூபாய் பயிர்க்கடன், 1,361 கோடி ரூபாய் செலவில், 5 லட்சம் ஏக்கர் பரப்பளவிற்கு சொட்டு நீர்ப்பாசனம் என்பது மட்டுமின்றி, வேளாண் பொருட்கள் விற்க, சிறப்பு ஏற்றுமதி அலகு என்ற அமைப்பு வரவேற்கத்தக்கது. ஆனால், இவை தமிழகத்தின் பரந்த வேளாண் பரப்புகளுக்கு சென்றடைய, என்ன அணுகுமுறை என்பதை, அரசு விளக்க வேண்டும்.ஏற்கனவே, மத்திய அரசு அறிவித்த, 6,000 ரூபாய் உதவியை முறைப்படுத்த, வரி வருவாய்த் துறை அதிகாரிகள் மூலம் இறுதி செய்யும் பணி வந்திருப்பதால், அரசு செலவழிக்கும் பணம், விவசாயிகள் வங்கிக் கணக்கில் முறையாகச் செல்ல, நிர்வாக நடைமுறைகள் தேவை. அது, இப்போதிருக்கும் நடைமுறைகளுக்கு சுமையா அல்லது மாற்று ஏற்பாடு என்ன என்பதையும், அரசு விளக்க வேண்டும்.'நகர்ப்புற ஏழை மக்களுக்கான, தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் மேம்பாடு' என்ற திட்டம், 5.8 லட்சம் குடும்பங்களுக்கு வீடு தரும் திட்டத்தில் ஒரு பகுதி. சென்னை கூவம் உட்பட சில இடங்களின் கரையோரம் உள்ள வீடுகள், இப்போது குறைகின்றன. மறு குடியமர்த்தலுக்கு, உலக வங்கி உதவியாக, 4,674 கோடி ரூபாய் தருகிறது. சென்னை தவிர்த்த இதர நகரப் பகுதிகளில், புதிய திட்டம் அமலாக, 5,000 கோடி ரூபாய் கடனுதவியை, ஆசிய வங்கி வளர்ச்சி நிதியிடம், அரசு பெறப் போகிறது.இந்த வீடுகளில் முறையாக, ஏழைக் குடும்பங்கள், உரிய ஆவணங்களுடன் வாழ்கின்றனரா, அதில், 80 சதவீதம் பேர் வசிக்கின்றனரா அல்லது எடுத்த எடுப்பிலேயே, 'லீசுக்கு' போய்விடுகிறதா என்பதை கவனிக்க, அரசு இயந்திரம் தேவை. ஏனெனில், ஹவுசிங் போர்டு என்ற அமைப்பில் ஏற்பட்ட குளறுபடிகள், வேண்டியவர்களுக்கு சலுகை இல்லை என்றால், சிறிய நகரங்கள் உருவாவதில் சிறப்பு ஏற்படும்.தரமான வீட்டு வசதிக்காக, சமுதாயத்திற்கு பயன்தரக் கூடிய முதலீடுகளைச் செய்ய, உள்நாடு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களை கவர, 'உறைவிட நிதியம்' அமையும் போது, அது, 'செபி' என்ற அமைப்பில் பதியப்படுவதால், அந்த முதலீட்டாளர் சிலரும், திட்டத்தை கண்காணிப்பது தேவை.பட்ஜெட் உரை, நீண்டதாக உள்ளது. கல்விக்கும், ஆரோக்கியத்துக்கும் அதிக நிதி அவசியம். மேலும், ஜி.எஸ்.டி., மற்ற சில இன வருவாய், அரசுக்கு கூடுதலாக கிடைக்கும் என்பது நல்ல செய்தி. மதுபான வரவிலான முக்கியத்துவம் குறைந்த அறிகுறி காணப்பட்டாலும், ஏன் பெட்ரோல் உடன் சேர்க்கப்படும், 'எத்தனால் பற்றிய கொள்கை' தமிழகத்தில் முனைப்புடன் உருவாக்கப்படவில்லை என்று தெரியவில்லை. கரும்பு விவசாயிகளையும், சர்க்கரை ஆலைகளையும் வளப்படுத்தும் இத்திட்டம், மொத்தத்தில் வளர்ச்சிக்கானது.'கஜா' புயல் பாதிப்பு, பொங்கலுக்கு தாராளமாக ஒவ்வொரு ரேஷன் அட்டைக்கும், ௧,௦௦௦ ரூபாய் தந்தது, அரசு செலவினங்கள் அதிகரிக்க ஒரு காரணம் என்பதை, கூடுதல் தலைமைச் செயலர் சண்முகம் தெரிவித்தது, வெளிப்படையானது.அடுத்ததாக, விவசாயிகளுக்கு பணம் தரும் அறிவிப்பு, நிதிச்சுமையை அதிகரிக்கும். நிதி ஆதாரங்கள் வலுப்பெற, என்ன புதிய அணுகுமுறை என்பதை, அரசு விளக்கினால் நல்லது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement