Advertisement

பேச்சு, பேட்டி, அறிக்கை

'கூட்டணின்னு வந்துட்டா, தன்மானம், சுயகவுரவம் எல்லாத்தையும் விட்டுக் கொடுத்தா தான், காரியம் கைகூடும் என்பதை, நன்றாக புரிந்து வைத்திருப்பவர் போல பேசும்' மத்திய கப்பல் போக்குவரத்து துறை, இணை அமைச்சர், பொன். ராதாகிருஷ்ணன் பேட்டி: லோக்சபா தேர்தல் கூட்டணி பேச்சு துவங்கி உள்ளது. அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணிக்கு, தம்பிதுரை முட்டுக்கட்டையாக உள்ளார் என்பது தவறு. சில கருத்துக்களில், எங்களுக்குள் வேறுபாடு இருந்தாலும், பேசி தீர்த்துக் கொள்வோம். தமிழக பட்ஜெட்டில், விவசாயிகளுக்கு ஏராளமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. புயலால் பாதிக்கப்பட்டோருக்கு, புதிய வீடுகள் கட்ட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது, மக்களுக்கு புதிய நம்பிக்கைய ஏற்படுத்தி உள்ளது.

அ.ம.மு.க., துணை பொது செயலர் தினகரன் அறிக்கை: தேசியமும், தெய்வீகமும் இரு கண்கள் என, முழங்கி, சமுதாய சமநிலை; உயர்ந்தவர் - தாழ்ந்தவர் என்ற வேற்றுமை களையவும், தன் வாழ்க்கையை அர்ப்பணித்தவர் முத்துராமலிங்க தேவர். அவர் வாழ்க்கை, வரும் தலைமுறை அறிய வேண்டியது. வரும் கல்வியாண்டுக்கான, ஏழாம் வகுப்பு புதிய பாடத்தில் சேர்க்க தயாரிக்கப்பட்டுள்ள, முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கை வரலாற்றில், உ.முத்துராமலிங்கர் என, அச்சிட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. இது, அவரின் புகழையும், அடையாளத்தையும் மறைக்கும் முயற்சி. இதை, உடனடியாக மாற்றியமைக்க வேண்டும்.

'கூட்டணியில், சிதம்பரம் தொகுதியை, எனக்கு ஸ்டாலின் பட்டயம் போட்டு தந்து விட்டார். அந்த தொகுதி, தி.மு.க.,வினர் ஒதுங்கி கொள்ளுங்கள்' என, எச்சரிக்கும் வகையில், வி.சி., தலைவர் திருமாவளவன் பேட்டி: லோக்சபா தேர்தலில், 1999 முதல், என் சொந்த தொகுதியான சிதம்பரத்தில் போட்டியிடுகிறேன்; வரும் தேர்தலிலும் போட்டியிடுவேன். தேர்தலுக்கான கூட்டணியை, தி.மு.க., தான், முதலில் அமைத்தது. அதில், 11 கட்சிகள் உள்ளன. தமிழக காங்., தலைவர் அழகிரி, புதிய கட்சிகள் வந்தால் வரவேற்பதாக கூறி உள்ளார். பா.ஜ., கூட்டணியை வீழ்த்த நினைக்கும் கட்சிகள், சேர்ந்தால் வலுவாக இருக்கும்.

தமிழக செய்தி விளம்பரத் துறை அமைச்சர் ராஜு பேட்டி: தி.மு.க., - அ.தி.மு.க., குறித்து, நடிகர் கமல் சில கருத்துகளை கூறி உள்ளார். தேர்தல் முடிவின்போது, யார் நிலைத்து நிற்பர்; யார் ஊரை விட்டு, நாட்டை விட்டு போவார்கள் என்பது தெரியும். ஒரு படம் வெளியிடுவதில் வரும் பிரச்னையைக் கூட தாங்கிக் கொள்ள முடியாமல், நாட்டை விட்டு வெளியேறுவதாக கூறியவர் கமல். எந்த கட்சி நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்பதை, தேர்தலில் மக்கள் முடிவு செய்வர். 50 ஆண்டு கால திராவிட இயக்க ஆட்சியில், 30 ஆண்டுகள், அ.தி.மு.க., ஆட்சி செய்துள்ளது. இது, எப்போதும் நிலைத்து, நீடித்து நிற்கும்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement