Advertisement

கறுக்கிறது தேர்தல் மேகம்...

தமிழகத்தில், தேர்தல் மேகம் கறுக்கத் துவங்கியதன் அடையாளமாக, கட்சிகள் தங்கள் அணி யாருடன் என்பதை, சூசகமாக தெரிவிக்க துவங்கி விட்டன.
இன்றுள்ள நிலையில், 2019ம் ஆண்டு லோக்சபா தேர்தல், மோடிக்கும், மற்ற எதிர்க்கட்சித் தலைவர்களுக்கும் இடையே ஏற்பட்டுள்ள போராகக் கூட வர்ணித்தால் தவறில்லை. ஏனெனில், கடந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ., தனி, 'மெஜாரிட்டி' பெறும் என்றும், அதன் கூட்டணிக் கட்சிகள் சேர்ந்த எண்ணிக்கை, லோக்சபாவில், 310ஐத் தாண்டும் என்றும், யாரும் யூகிக்கவில்லை.
ஐந்தாண்டுகளாக அங்கீகரிக்கப்பட்ட எதிர்க்கட்சியாக, 50 இடங்களைக் கூட பெற முடியாத நிலையில், காங்கிரஸ் வேறு வழியின்றி, எதிர்க்கட்சி என்ற பெயரளவில் செயல்பட்டது, முடியப் போகிறது. இனி, காங்கிரஸ் தன் மீட்சியை, அரசியலில் கொண்டு வந்தால், அது சோஷலிச பொருளாதார கோட்பாடுக்கும், 'இந்துத்துவா' அடிப்படையில் கொள்கைகளைக் கொண்ட சக்திகளுக்கும் இடையே ஏற்பட்ட, பெரிய மோதலாக வர்ணிக்கப்படும்.
இந்தச் சூழ்நிலையில், தமிழகம், புதுவை ஆகியவற்றிற்கு மொத்தம் உள்ள, 40 எம்.பி., சீட்டுகள், எந்த மாதிரி முடிவுகளை கொண்டிருக்கும், எப்படி கூட்டணி உத்திகள் அமையும் என்ற பேச்சு எழுந்திருக்கிறது.
இன்றைய நிதர்சன நிலையில், அ.தி.மு.க., அதிக அளவில், எம்.பி.,க்களை கொண்டிருக்கும் கட்சி. தி.மு.க., முக்கிய எதிர்க்கட்சி. இவை இரண்டு தவிர, தேசிய அளவில், பா.ஜ., மற்றும் காங்கிரஸ் உள்ளன. காங்கிரஸ் தமிழகத்தில், சில சதவீத ஓட்டுகளைப் பெற்றிருப்பதுடன், சட்டசபையிலும் எண்ணிக்கை கொண்டது. பா.ஜ.,வில் உள்ள ஒரே ஒரு, எம்.பி.,யான, பொன்.ராதாகிருஷ்ணன், மத்திய இணை நிதியமைச்சராக இருக்கிறார்.
இன்றுள்ள சூழ்நிலையில், அ.தி.மு.க., மற்றும் பா.ஜ., ஆகிய இரண்டும், ஆளும் கட்சிகள். மத்தியில் ஆளும், பா.ஜ., மீது, லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை மற்றும் சிலர், அதிருப்தி கொண்டிருக்கலாம். ஆனால், தேர்தலுக்கு தயாராகும் விதத்தில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களிடம் விண்ணப்பங்களை பெற, அ.தி.மு.க.,வின் முக்கியப் பொறுப்பில் இருக்கும் முதல்வரும், துணை முதல்வரும், நடவடிக்கையை துவங்கி விட்டனர்.
அதில், 400க்கும் மேற்பட்டோர், இதுவரை விண்ணப்பித்துள்ளனர். துணை முதல்வர் பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத், கட்சியில் தொடர்ந்து நீடிப்பதால், தேனி லோக்சபா தொகுதிக்கு விண்ணப்பித்துள்ளார்.
அ.தி.மு.க., தலைமையில் அமையும் கூட்டணியில், பா.ஜ.,வுக்கு ஓரளவு இடம் ஒதுக்கலாம். அது, இரட்டை இலக்கத்தை தாண்டியிருக்க வாய்ப்பில்லை. ஏனெனில், இத்தேர்தலுக்குப் பின், கூட்டணி அரசு என்ற நிலை வந்தால், அதில், அ.தி.மு.க., இடம் பெற நினைக்கலாம். தவிரவும், அ.ம.மு.க., தலைவர் தினகரன், ஒவ்வொரு தொகுதியிலும் ஓட்டுகளை கணிசமாக பிரிப்பார் என்பதெல்லாம், கருத்துக் கணிப்புகள் தரும் தகவல். அவர் இனி, தன் அணியை மாநிலக் கட்சி அந்தஸ்திற்கு உயர்த்த முடியுமா என்பதற்கு, இத்தேர்தல் ஒரு சவால்.
இன்றைய நிலையில், விஜயகாந்த் கட்சி போன்ற சில கட்சிகள், பா.ஜ.,வுடன் அணி சேரலாம். இல்லாவிட்டால், அக்கட்சிகளின் எதிர்காலம் சுருங்கி விடும்.
தி.மு.க.,வுடன், காங்கிரஸ் கூட்டணி நிச்சயம் என்றாலும், காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் அழகிரி, இத்தேர்தல் உத்தியை, கட்சித் தலைவர் ராகுலுடன் சேர்ந்து, எப்படி வகுப்பார் என்பதை, எளிதில் முடிவு செய்ய முடியாது.
இரண்டரை ஆண்டுகள், திருநாவுக்கரசர் தலைவராக இருந்த போது, கட்சியை எந்த அளவு வளர்த்திருக்கிறார் என்பதை, இனி வேட்பாளர் விண்ணப்பங்களில், அவர் கோஷ்டி கேட்கும் தொகுதிகளை வைத்துக் கண்டறியலாம். ஆனால், கட்சிக்கு ஏற்கனவே, அதிக செயல் தலைவர்கள், மற்ற பணிப் பொறுப்பாளர்கள் என, எல்லா கோஷ்டிகளும் திருப்தி அடைந்திருக்கலாம். இது, தி.மு.க., கூட்டணியில் எளிதாக, 'சீட்' பெறும் முயற்சிகளுக்கு பெரும் சவால்.
தி.மு.க.,வுக்கு இத்தேர்தல், அதன் எதிர்காலத்தைச் சுட்டிக் காட்டும் தேர்தல். ஏனெனில், லோக்சபா பிரதிநிதித்துவம் அதிகமின்றி, ராகுல் பிரதமராக தமிழகம் வழிகாட்டியாக இருப்பதற்காக, அதிக வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை, தி.மு.க., இழக்காது. அக்கட்சியின் தேர்தல் பொறுப்பாளர், துரைமுருகன் மூலம், சீராகக் காய் நகர்த்தக் கூடும்.
நடிகர் கமல் தனித்துப் போட்டி, நடிகர் ரஜினி என்ன முடிவெடுப்பார் என்பது எல்லாம், தேர்தல் ஓட்டுப் பதிவிற்குப் பின் தெரியும். ஆனால், இம்முறை, ஜாதி, மதம் அல்லது சினிமாப் பின்னணி ஆகியவை மட்டும், தமிழக வாக்காளர்களை அதிகம் ஈர்க்க வாய்ப்பில்லை.
தமிழகம் செல்லும் பாதையை நிர்ணயிக்கும் தேர்தலாக, லோக்சபா தேர்தல் அமைவதுடன், ஜாதிப் பின்னணி அற்ற சில அரசியல் நெடுநோக்கு கொண்ட இளைய தலைவர்களை, இத்தேர்தல் காட்டும் வாய்ப்பும் இருக்கிறது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement