Advertisement

பேச்சு, பேட்டி, அறிக்கை

'தி.மு.க., தலைவர் ஸ்டாலின், உங்களை கண்டுக்கிட்டா மாதிரி தெரியலியே...' எனச் சொல்லத் தோன்றும் வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர், திருமாவளவன் பேட்டி: தி.மு.க., கூட்டணியில் இடம் பெறுவது என, தீர்க்கமான முடிவை எடுத்துள்ளோம். அதிகாரபூர்வமாக, தி.மு.க., தலைமை அழைப்பு விடுக்கும். அப்போது நடக்கும் பேச்சின் போது, தொகுதிகளை உறுதி செய்வோம். கொள்கை அடிப்படையில், பா.ஜ., - பா.ம.க., இருக்கும் கூட்டணியில் இடம் பெறுவதில்லை என்பதை, தொடர்ந்து சொல்லி வருகிறோம். இப்போதும், எங்கள் நிலைப்பாடு, அதுதான்.
தலைமை தேர்தல் கமிஷன் முன்னாள் ஆணையர், நவீன் சாவ்லா பேட்டி: மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், இரு பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் தயாரிக்கப்படுகின்றன. வெளிநாடுகளைப் போல், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடக்கலாம் என்பது தவறு. அவை, தேர்தல் கமிஷனால் பயன்படுத்தப்படும் இயந்திரங்கள் அல்ல. மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களிலிருந்து, தொழில் நுட்பத்தையோ, தகவல்களையோ திருட முடியாது.
வரும் லோக்சபா தேர்தலில், கர்நாடக மாநிலம், மத்திய பெங்களூரு தொகுதியில், சுயேச்சையாக போட்டியிட உள்ள, நடிகர் பிரகாஷ்ராஜ் பேட்டி: இப்போதைக்கு எனக்கு, பட வாய்ப்புகள் இல்லை. ஆறு மாதம் முழுவதும் என் கவனம், அரசியலில் தான் இருக்கும். பணத் தேவை ஏற்பட்டால் மட்டும் நடிப்பேன். ஒருவேளை, அரசியலில் ஜெயித்த பின், எனக்கு பண தேவை ஏற்பட்டாலும், மக்கள் நிதியில் கை வைக்க மாட்டேன். எனக்கு சூடு, சொரணை இருக்கிறது.
தமிழக தொழில் துறை அமைச்சர், சம்பத் பேட்டி: மறைந்த முன்னாள் முதல்வர், ஜெயலலிதா, தேர்தல் கூட்டணி குறித்து, தலைமைக் கழக நிர்வாகிகள், மூத்த அமைச்சர்களை அழைத்து, ஆலோசனை நடத்துவார். அந்த வகையில், கழக நிர்வாகிகள் சிலர், கூட்டணி குறித்து தங்கள் கருத்துக்களை, ஜனநாயக ரீதியில் தெரிவிக்கின்றனர். எனினும், பா.ஜ.,வுடன் கூட்டணி அமைப்பது குறித்து, கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தலைமையிலான உயர்மட்டக்குழு தான் முடிவு செய்யும்.
பா.ஜ., தேசிய செயலர், எச்.ராஜா பேட்டி:தி.மு.க., தலைவருடன், ஒரு போலீஸ் உயர் அதிகாரி, தொலைபேசியில் பேசி உள்ளார். அது, சமூக வலைதளத்தில் வெளிவந்துள்ளது. மேலும், சாதிக் பாட்ஷா கொலையில், தி.மு.க., பெண் தலைவருடன் தொலைபேசியில் பேசியவருக்கு, தொடர்பு உள்ளது என்ற செய்தியும், சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அவர்கள் மீது, முதல்வர் கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது.

'பா.ம.க., போல, ஒரு நிழல் பட்ஜெட்டைப் போட்ட பின், இது போல, 'கமென்ட்' கொடுத்தால், ஏற்றுக் கொள்ளலாம்... ஆனால், அதற்கெல்லாம் சாமர்த்தியம் வேண்டும்...' என, கோபப்படத் தோன்றும் வகையில், மார்க்.கம்யூ., மாநில செயலர், பாலகிருஷ்ணன் பேட்டி: தமிழக அரசு, ஒரு வெத்து வேட்டு பட்ஜெட்டை, தாக்கல் செய்துள்ளது. 4 லட்சம் கோடி ரூபாய் கடனில் தத்தளித்து, ஆண்டுதோறும், 33 ஆயிரம் கோடி ரூபாய் வட்டி கட்டுகிறது. இந்நிலையில், வருமானத்தை பெருக்க, பட்ஜெட்டில் ஒரு அறிவிப்பும் இல்லை; புதிய திட்டங்கள் எதுவும் கிடையாது.
'ஏன் கமலோடு சேர்ந்தால் தான், ஓரிரு தொகுதியிலாவது வெல்ல முடியும்ங்கிற முடிவுக்கு வந்துட்டீங்களா...' என கேட்கத் தோன்றும் வகையில், தமிழக, காங்., தலைவர், கே.எஸ்.அழகிரி பேட்டி: நாட்டின் இறையாண்மையையும், மதச்சார்பின்மையையும் காப்பாற்றுவது தான், எங்கள் கூட்டணியின் முதன்மை நோக்கம். இதற்காக, மதச்சார்பற்ற கட்சிகள் ஒருங்கிணைந்துள்ளோம். கூட்டணியில் உள்ள சில கட்சிகள், மகத்தான சாதனைகளைப் புரிந்துள்ளன; ஒரு சில தவறுகளையும், கட்சிகள் செய்திருக்கலாம். அதைப் பார்க்க வேண்டிய நேரம் இதுவல்ல. நடிகர் கமல் எங்களோடு சேர்ந்து, மதச்சார்பற்ற கூட்டணியை வலுப்படுத்துவதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும்.
த.மா.கா., கட்சி தலைவர், வாசன் அறிக்கை: தமிழக அரசின் பட்ஜெட், வருங்கால வளர்ச்சிக்கான திட்டங்கள், மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு இல்லை. எனினும், நிதிநிலை அறிக்கையில், பல துறைகளில் அளிக்கப்பட்டிருக்கும் சலுகைகள், மக்களுக்கு முழுமையாக சென்றடைய, அரசு கவனம் செலுத்த வேண்டும்.
ம.தி.மு.க., பொதுச்செயலர், வைகோ அறிக்கை: தமிழக பட்ஜெட்டில், புதிய அறிவிப்புகள் எதுவும் இல்லை. வேலை வாய்ப்புக்கான புதிய திட்டங்கள், ஏதும் இல்லை. தண்ணீர் பற்றாக்குறை நிலவும் சூழலில், பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவதற்கு, செயல் திட்டம் இல்லை. 'ஸ்டெர்லைட்' ஆலையை நிரந்தரமாக மூட, கொள்கை அறிவிப்பு வெளியிடாதது, கண்டனத்திற்குரியது.
மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, சமூக வலைதளம் ஒன்றில் கருத்து பதிவு: தேர்தலில், மக்களின் ஆதரவு தேவை தான். ஆனால், அதில் ஒரு நியாயம் இருக்க வேண்டும். அரசியல் ஆதாயம் தேடுபவர்கள், தான் கூறுவது, அடுத்த நாள் காலையில், தலைப்புச் செய்தியாக வந்தால் போதும் என, எண்ணுவர். ஆனால், ஒரு நாட்டை கட்டமைப்பவர்கள், அடுத்த சந்ததியினரையும் மனதில் வைத்து முடிவெடுப்பர்.
துாத்துக்குடி வடக்கு மாவட்ட, தி.மு.க., பொறுப்பாளர், பெ.கீதா ஜீவன், 'ஜிங்சாக்' பேச்சு: துாத்துக்குடி லோக்சபா தொகுதியில், தி.மு.க., சார்பில், கனிமொழி, எம்.பி., போட்டியிட உள்ளார். ஏற்கனவே, 10 ஆண்டுகளாக, பார்லிமென்டில் உறுப்பினராக இருக்கும் அவர், ஆங்கிலத்தில் சரளமாக பேசக் கூடியவர். மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, காங்., ஆட்சி அமைக்கும்போது, அவர் மத்திய அமைச்சராக கூட வரலாம்.

'அதுக்காக, 'டாஸ்மாக்'கை வளர்த்து விட்டு, சொதப்பிட்டீங்களே...' எனச் சொல்லத் தோன்றும் வகையில், தமிழக நிதித்துறை செயலர், சண்முகம் பேட்டி: தமிழக அரசின் வருவாயை உயர்த்த, நாங்கள் தலையை பிய்த்துக் கொள்கிறோம். எல்லா அரசுகளுமே, கடன் பெற்றுத் தான் செலவு செய்கின்றன. கடந்த நான்கு ஆண்டுகளாக, வரி வருவாய் குறைந்து காணப்பட்டது. அதை சரி செய்யும் முயற்சிகள், நடந்து வருகின்றன.

தமிழக கைத்தறி துறை அமைச்சர், மணியன் பேட்டி: தேர்தல் கூட்டணியைப் பொறுத்தவரை, ஜெ., எடுத்த முடிவே, அவர் வகுத்த பாதையே, எங்களுக்கு உரிய பாதை. எதில் மத்திய அரசை ஆதரிப்பது, எதில் எதிர்ப்பது என்பதில், ஜெ., வழியில், எங்களுக்குள் சரியான பாதையை வகுத்து, செயலாற்றி வருகிறோம். மத்தியில் ஆளும், பா.ஜ.,வுடனான எங்களின் உறவு, ஒருவழிப்பாதை அல்ல, திரும்பிச் செல்ல முடியாததற்கு; அது, இருவழிப் பாதை தான்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement