Advertisement

பேச்சு, பேட்டி, அறிக்கை

'ஓ... அப்படீங்களா...' எனக் கேட்டுச் சிரிக்கத் தோன்றும் வகையில், தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவன தலைவர், வேல்முருகன் பேட்டி: அ.தி.மு.க.,வைச் சேர்ந்த, இரு மூத்த அமைச்சர்கள், என்னை தொடர்பு கொண்டு, 'தி.மு.க.,விடம், ராமதாஸ் பேரம் பேசுகிறார்; அவரை நம்ப முடியாது. உன் நிலைப்பாடு என்ன?' என, கேட்கின்றனர். தி.மு.க., - அ.தி.மு.க., - அ.ம.மு.க., போன்ற கட்சிகளில் இருந்து, அழைப்பு வருகிறது. தமிழகத்தில், தாமரை மலர வாய்ப்பில்லை.

தமிழக மீன்வளத் துறை அமைச்சர், ஜெயகுமார் பேட்டி: பல சந்தர்ப்பங்களில் தேர்தலில், அ.தி.மு.க., தனித்து போட்டியிட்டுள்ளது. தி.மு.க., யார் முதுகிலாவது, சவாரி செய்வதே வழக்கம். அ.தி.மு.க., பலமாக இருந்தாலும் கூட, மற்ற கட்சிகள் எங்களை மதித்து வரும்போது, அவர்களுக்கு மதிப்பளித்து, அரவணைத்து செல்வோம். கூட்டணி குறித்து, பேசி வருகிறோம். உரிய நேரத்தில், அதுபற்றி அறிவிக்கப்படும். அ.ம.மு.க., இணைவதற்கு, வாய்ப்பே இல்லை.

த.மா.கா., தலைவர், வாசன் அறிக்கை: ரேஷன் கடை ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக, ஆய்வு செய்ய, தமிழக அரசால் அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கை, டிசம்பரில், அரசுக்கு அளிக்கப்பட்டுள்ளது. அந்த ஆய்வறிக்கையின் படியும், ரேஷன் கடை ஊழியர்களின் நியாயமான எதிர்பார்ப்புகளையும், அரசு கவனத்தில் எடுக்க வேண்டும்.

லோக்சபா துணை சபாநாயகர், தம்பிதுரை பேட்டி: தமிழகத்திற்கு யார் நல்லது செய்கின்றனரோ, அவர்களுடன் தான் கூட்டணி என, முதல்வர், இ.பி.எஸ்., பேசி இருக்கிறார்; அது, வரவேற்கத்தக்கது. மத்திய அரசு, தற்போதைய இடைக்கால பட்ஜெட்டில் சொன்னதை எல்லாம், அவர்கள் ஐந்து ஆண்டு கால ஆட்சியில் இருந்தபோதே சொல்லி, செயல்படுத்தி இருக்க வேண்டும். அப்போது, கோட்டை விட்டு, இப்போது சொல்கின்றனர். இந்த கருத்தை, லோக்சபாவில், நான் தொடர்ந்து வலியுறுத்துவேன்.

தமிழக ஊரக தொழில் துறை அமைச்சர், பெஞ்சமின் பேச்சு: எந்த கட்சியைப் பார்த்தும், அ.தி.மு.க., பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. தமிழகத்தில், அதிக ஆண்டுகள் ஆட்சி செய்த கட்சி இது. மறைந்த முன்னாள் முதல்வர், ஜெயலலிதா நடத்தியதை போல், தமிழகத்தில், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை, முதல்வர், இ.பி.எஸ்., வெற்றிக்கரமாக நடத்தி காட்டியுள்ளார்.

தமிழக போக்குவரத்து துறை அமைச்சர், விஜயபாஸ்கர் பேச்சு: தமிழகத்தில், ஒரு மணி நேரத்தில், டிரைவிங் லைசென்ஸ், எல்.எல்.ஆர்., வழங்க, போக்குவரத்து துறை ஏற்பாடுகளை செய்து வருகிறது. மூன்று ஆண்டுகளில், 2,000 பேட்டரி பஸ்களும், 10 ஆயிரம் சுற்றுச்சூழல் மாசு இல்லாத பஸ்கள் இயக்கப்படும். விபத்தில்லா தமிழகத்தை உருவாக்குவதற்கு, மேலை நாடுகளில் இருப்பது போல், சாலை விதிகளை மீறுபவர்கள் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்கும் திட்டம், நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

தலைமை தேர்தல் கமிஷன், முன்னாள் ஆணையர், நவீன் சாவ்லா பேட்டி: மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், இரு பொதுத் துறை நிறுவனங்கள் மூலம் தயாரிக்கப்படுகின்றன. வெளிநாடுகளில் கூறுவது போல, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடக்கலாம் எனக் கூறுவது தவறு. அவை, தேர்தல் கமிஷனால் பயன்படுத்தப்படும் இயந்திரங்கள் அல்ல. மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களிலிருந்து, தொழில் நுட்பத்தையோ, தகவல்களையோ திருட முடியாது.

'தி.மு.க., ஸ்டாலின் உங்களை கண்டுக்கிட்டா மாதிரி தெரியலியே...' எனச் சொல்லத் தோன்றும் வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர், திருமாவளவன் பேட்டி:தி.மு.க., கூட்டணியில், இடம் பெறுவது என, தீர்க்கமான முடிவை எடுத்துள்ளோம். அதிகாரபூர்வமாக, தி.மு.க., தலைமை அழைப்பு விடுக்கும். அப்போது நடக்கும் பேச்சின் போது, தொகுதிகளை உறுதி செய்வோம். கொள்கை அடிப்படையில், பா.ஜ., - பா.ம.க., இருக்கும் கூட்டணியில் இடம் பெறுவதில்லை என்பதை, தொடர்ந்து சொல்லி வருகிறோம். இப்போதும், எங்கள் நிலைபாடு, இது தான்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement