Advertisement

ஓங்கி குரலெழுப்பும் பெரிய பெண் தலைவர்

அதிகளவு சர்ச்சைகளும், குழப்பங்களும் நடந்த போதும், எந்தப் புதிய காரணங்களுக்காகவும், மேற்கு வங்கத்தில் உள்ள மம்தா தலைமையிலான, திரிணமுல் காங்கிரஸ் அரசு வீழாது.
ஆனால், சட்டம் - ஒழுங்கு சீர்குலைவு என்பதை விட, தன் மாநிலத்தில் நடந்த மிகப்பெரிய ஊழலை விசாரிக்க, சி.பி.ஐ., முன்வரக் கூடாது என்ற அவரது கருத்து முரண்பாடானது.பிரதமர் மோடியை, வரும் லோக்சபா தேர்தலில் களம் காண்பது சிரமம் என்று கருதும் பல எதிர்க்கட்சித் தலைவர்கள், இப்போது அடுத்த கட்டமாக, தாங்கள் ஆளும் மாநிலங்களில், சி.பி.ஐ., வந்து விசாரணை செய்வதை ஆட்சேபிக்கின்றனர்.

ஆனால், டில்லி சிறப்பு காவல் துறை நிறுவனச் சட்டத்தில் இருந்து, சி.பி.ஐ., பெற்ற அதிகாரங்களின் படி, தம் விசாரணையை, மாநில அரசின் ஒத்துழைப்போடு நடத்தும். அதே சமயம், சில நேரங்களில், மாநில அரசுக்கு இத்துறை, முன்கூட்டியே தகவல் தெரிவிப்பதும் உண்டு.இதுவரை, 50 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கும், சி.பி.ஐ., தம் செயலால், பெடரல் தத்துவத்தை சிதைத்தது இல்லை; அது நடக்காத ஒன்று.

ஆனால், தி.மு.க., தெலுங்கு தேசம் உள்ளிட்ட பல கட்சிகள், தங்களுக்கு எதிரியாக கருதும் அரசியல் தலைவர்கள், சி.பி.ஐ., வளையத்தில் இருந்தால், அதை ஆதரிக்கின்றனர். மாநில போலீசார், சிறப்பு போலீசார் என்பதைத் தாண்டி, சி.பி.ஐ., தேசிய அளவில் செயல்படும் அமைப்பு.அதிலும், புதிதாக சி.பி.ஐ., தலைவராக, ரிஷி குமார் கவுசல் என்பவர் பதவியேற்ற நாளில், அவர் துறையைச் சேர்ந்த அதிகாரிகளை கோல்கட்டாவில், கையைப் பிடித்து முறுக்கி, செயல்படவிடாமல் உள்ளூர் போலீசார் நடந்தது, அரசியல் சட்ட அமைப்பு சீர்குலைவு தானே...

மேலும், உயர் போலீஸ் அதிகாரிகள், மத்திய உள்துறை சர்வீஸ் கட்டமைப்பில் உள்ளவர்கள் என்பது, அடிப்படை உண்மையாகும்.மம்தா ஆட்சிக்கு வந்த போது, கம்யூனிஸ்ட் அரசை, 'கேடர் ராஜ்' என்று வர்ணித்தார். 'சாரதா சிட்பண்ட் மோசடி மற்றும் ரோஸ் வேலி முறைகேடு' ஆகியவற்றில் புழங்கிய பணம், 40 ஆயிரம் கோடி ரூபாய். கடைக்கோடி பீஹார், ஒடிசா மற்றும் மேற்குவங்கத்தில் இருந்து பலர், இதில் லட்சக்கணக்கான பணம் கட்டி ஏமாந்தனர்.

ஏற்கனவே பல ஆண்டுகளாக நடக்கும் விசாரணையில் சிக்கிய, மேற்குவங்க அமைச்சர் மதன் மித்ரா, மற்றும் சுதீப் பந்தோபாத்யா போன்றோர் கைதாகி உள்ளனர்.இப்போது, கோல்கட்டா போலீஸ் கமிஷனர் ராஜிவ் குமார், தகவல்களை மறைப்பதால், அதை விசாரிக்க, சி.பி.ஐ., முயன்ற போது, அவரை சந்திக்க விடாமல், சி.பி.ஐ., அதிகாரிகளை தடுத்த உள்ளூர் போலீசார் செயல் மிகவும் வித்தியாசமானது.
ராஜிவ்குமாரை விசாரிக்க, முதல்வர் மம்தா அனுமதிப்பதை தடுக்கும் விதத்தில், தர்ணா அரங்கில் அவருடன், ராஜிவ் குமாரும் இருந்திருக்கிறார். 'அரசமைப்பு சட்டத்தை' பாதுகாக்க விரும்பி செயல்பட்ட மம்தாவுக்கு, சந்திரபாபு தொடங்கி, தி.மு.க.,வின் கனிமொழி வரை, நேரடியாக ஆதரவு தந்துள்ளனர்.ராஜிவ்குமார் என்ற உயர் போலீஸ் அதிகாரி, இந்த மோசடி வழக்குகள் குறித்த தடயங்களை அழித்திருந்தாலும், அவற்றை மீட்க வழி இருப்பதாக, சி.பி.ஐ., கூறுகிறது.

அதே சமயம், சி.பி.ஐ., விசாரணையில் நேரடியாக ஆஜராகி, ராஜிவ்குமார் ஒத்துழைக்க வேண்டும் என்ற, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு, மம்தாவின் குரலை முடக்கும் மந்திர வார்த்தைகள்; ஜனநாயக நடைமுறைகளை தகர்க்கும் அரசியல் முயற்சிகளை தடுக்கும் நல்ல தகவல்.மாநில கவர்னர் கேசரிநாத் திரிபாதி, மத்திய அரசுக்கு அனுப்பிய அறிக்கை, மம்தாவை ஒரு மன்னர் ஆட்சி நடத்துவது போல் சித்தரிக்கிறது என்பதை, லோக்சபாவில் உள்துறை அமைச்சர் தெரிவித்தது, வித்தியாசமான தகவல்.

ஊழல் பாதிப்பு அற்ற முதல்வர் நிதிஷ் குமார், 'என்னிடம், ராஜிவ்குமார் போன்ற அதிகாரி இல்லை; ஆகவே, அப்படி ஒரு நிலை வந்தால், என் முடிவு என்ன என்ற யூகம் வேண்டாம்' என்கிறார். தமிழகத்திலும், குட்கா மோசடி வழக்கில், போலீஸ் அதிகாரிகள் மீதான விசாரணை நடந்தது. மற்ற மாநிலங்களிலும், சி.பி.ஐ., விசாரணைகள் நடக்கின்றன.மம்தா நடத்தியது, 'டிராமா' என்பதை விட, ஊழல் நிறைந்த சில கட்சித் தலைவர்களைத் தாண்டி, மாபெரும் பெண் அரசியல் தலைவர் என்ற அடுத்த பெயரை, அவர் பெற்று விடுவார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement