Advertisement

பேச்சு, பேட்டி, அறிக்கை

கட்சி உள்குத்துச் சண்டையின்போது, தான் ஆசைப்பட்ட முதல்வர் பதவி, கைநழுவிப் போச்சே என்ற ஆதங்கத்தில், அ.ம.மு.க., துணை பொதுச் செயலர், தினகரன் பேச்சு: காமராஜர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர், தியாகம் செய்து தான், ஆட்சியை பிடித்தனர். ஆனால், இ.பி.எஸ்., - ஓ.பி.எஸ்., இருவரும், துரோகம் செய்து, ஆட்சியை நடத்தி வருகின்றனர். இதனால், தமிழகத்தில், அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். வேலை வாய்ப்பின்மை அதிகரித்துள்ளது. இந்நிலை மாற, இந்தியாவிலேயே ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். லோக்சபா தேர்தலில், இதற்கெல்லாம் ஒரு முடிவு கட்டுவோம்.


'என்ன கொள்ளை என, சற்று விளக்கினால் நன்று...' எனக் கேட்கத் தோன்றும் வகையில், மார்க்.கம்யூ., பொதுச் செயலர், சீதாராம் யெச்சூரி பேச்சு: கடந்த ஐந்து ஆண்டுகளாக, நாட்டை கொள்ளை அடித்து, தற்போது சலுகைகளை வாரி வழங்குகிறது, பா.ஜ., அரசு. இதை வரும் தேர்தலில் வீழ்த்தினால் தான், கொள்கைகளில் மாற்றம் கொண்டு வர முடியும். இடைக்கால பட்ஜெட், ஒரு ஏமாற்று வேலை. பொய்யான வாக்குறுதிகளை அளித்து, மக்களை இனி முட்டாளாக்க முடியாது.


தமிழக துணை முதல்வர், பன்னீர்செல்வம் பேட்டி: 'ஸ்டெர்லைட்' ஆலை விவகாரத்தில், தமிழக அரசின் நிலைப்பாடு, சரியாகவே உள்ளது. இதில், ம.தி.மு.க., பொதுச்செயலர், வைகோ தான், இரட்டை வேடம் போடுகிறார்.


'காங்கிரஸ்காரங்க ஒட்டுமொத்தமா, மம்தா சார்புல பேசுறதைப் பார்த்தா, 'சாரதா சிட் பண்ட்' ஊழலில், அவங்களும், 'உள் கை' ஆகிட்டாங்களோ என, நினைக்கத் தோன்றுகிறது...' எனச் சொல்லத் தோன்றும் வகையில், புதுச்சேரி முதல்வர், நாராயணசாமி பேட்டி: மத்தியில் ஆட்சி செய்யும், பா.ஜ., அரசு, எதிர்க்கட்சியினரை பழிவாங்கும் நடவடிக்கைக்காக, சி.பி.ஐ., வருமான வரித்துறை, அமலாக்கத்துறை போன்ற அமைப்புகளை பயன்படுத்தி வருகிறது. இதன் காரணமாக, மேற்கு வங்கத்தில், மாநில முதல்வர், வீதியில் இறங்கி போராட வேண்டிய சூழல் உருவாகி விட்டது.


மனதில் தோன்றும் பயத்தை, வெளிக்காட்டும் வகையில், இந்திய, கம்யூ., மாநில செயலர், முத்தரசன் பேட்டி: பா.ஜ., - அ.தி.மு.க., இரு கட்சிகளும், ஓட்டுக்கு பணம் கொடுக்க, பல்வேறு வழிகளை மேற்கொண்டு வருகின்றன. பொங்கலுக்கு கொடுத்த, 1,௦௦௦ ரூபாய், தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது, முதல்வர், இ.பி.எஸ்.,சின் எதிர்பார்ப்பு; ஆனால், மக்களிடம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. மக்களின் வங்கி கணக்கில், 15 லட்சம் ரூபாய் போடுவதாகச் சொன்னவர்கள், இன்று அப்படிக் கூறவே இல்லை என்கின்றனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement