Advertisement

பேச்சு, பேட்டி, அறிக்கை

'தமிழக இளைஞர்களின் தகுதியை வளர்ப்பதற்கான ஆலோசனைகளைக் கூறுவதை விட்டு, அவர்களை வைத்து அரசியல் செய்வதையே தொழிலாக கொள்வது நியாயமே இல்லை...' எனச் சொல்லத் தோன்றும் வகையில், தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனர், வேல்முருகன் பேட்டி: மத்திய அரசு அலுவலக பணிகளுக்கு, 2006ம் ஆண்டு வரை, மாநிலம், மண்டலம் வாரியாக, இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டனர். 2011க்குப் பின், தேசிய அளவில் தேர்வு செய்யப்படுவதால், தமிழக இளைஞர்கள், புறக்கணிக்கப்படுகின்றனர். கடந்த எட்டு ஆண்டுகளில், மத்திய அரசு பணிக்கு தேர்வு செய்யப்பட்ட, 60 ஆயிரம் பணியிடங்களில், மிகக் குறைந்த அளவில் தான், தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்திய ஜனநாயகக் கட்சி நிறுவன தலைவர், பாரிவேந்தர் பேட்டி: பா.ஜ., கூட்டணியில், நாங்கள் பல ஆண்டுகளாக இருக்கிறோம். தற்போதும் கூட, பிரதமர் மோடி, கட்சித் தலைவர் அமித் ஷாவுடன், நேரடி தொடர்பில் உள்ளோம். அப்படி இருந்தும், மாநில, பா.ஜ., தலைவர்கள், எங்களை மதிப்பது இல்லை. இப்போது கூட, கூட்டணி குறித்து எங்களை அழைத்துப் பேசவில்லை. இதே நிலை தொடர்ந்தால், பா.ஜ., கூட்டணியை நாங்கள், மறுபரிசீலனை செய்ய வேண்டியிருக்கும்.

'உங்களைத் தொடர்பு கொண்டால், சரியான தகவலை, வெளிப்படையா சொல்லிடவா போறீங்க...' எனக் கேட்கத் தோன்றும் வகையில், பா.ம.க., இளைஞரணி தலைவர், அன்புமணி பேட்டி: தேர்தல்கூட்டணி குறித்து, பா.ம.க., பேச்சு நடத்தி வருகிறது. ஆனால், சில நாளிதழ்கள், ஊடகங்கள், வார இதழ்கள், அரசியல் கட்சிகளின் தரகர்களாக செயல்பட்டு, கூட்டணி குறித்து தாங்களாக செய்தி வெளியிடுகின்றன. கூட்டணி பற்றி செய்தி வெளியிடும் முன், எங்களை தொடர்பு கொள்ள வேண்டும் என, கேட்டுக் கொள்கிறேன்.

'இதை யாருக்காக சொல்ல வர்றீங்க... வெளிப்படையா பேசுங்களேன்...' எனக் கேட்கத் தோன்றும் வகையில், மத்திய, கப்பல் மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர், நிதின் கட்கரி பேச்சு: தன் குடும்பத்தை, யாரால் சரியாக நிர்வகிக்க முடியவில்லையோ, அவரால் நாட்டையும், நிர்வகிக்க முடியாது. குடும்ப பராமரிப்பிற்கும், குழந்தைகளை நன்றாக வளர்க்கவும், முதலில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதன்பின், கட்சிக்காகவும், நாட்டுக்காகவும் பணியாற்றலாம்.

இந்திய, கம்யூ., பொதுச்செயலர், சுதாகர் ரெட்டி பேச்சு: பா.ஜ., அரசு தெரிவித்த பிற வாக்குறுதிகளைப் போல், பட்ஜெட்டும் ஏமாற்று வித்தை தான். நாட்டில் உள்ள அனைத்து அரசமைப்புகளையும், மோடி அரசு சீர்குலைத்து வருகிறது. பார்லிமென்ட் கூட, முறையாக இயங்கவில்லை. மக்கள் பிரச்னை குறித்து, பார்லிமென்டிற்கு உள்ளே பேச முடிவதில்லை. மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகளுக்கு, பலத்த எதிர்ப்பு நிலவுகிறது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement