Advertisement

புதிய சூழல் சாதகமா?

Share

தமிழகம் முழுவதும் கிட்டத்தட்ட, ஆறு கோடி வாக்காளர்கள் இருக்கின்றனர் என்பதும், அதில் பெண் வாக்காளர்கள் பல மாவட்டங்களில் அதிகமாக இருப்பதும், வளர்ந்து வரும் சமுதாயத்தைப் பற்றி அறிய, பல வழிகள் காட்டுவதாகும்.தமிழகத்தின் மக்கள் தொகை, எட்டு கோடியை நெருங்குவதும், சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டில், 1 கோடிக்கும் அதிகமானோர் வசிப்பதும், பொருளாதார அடிப்படையில் முக்கியத்துவம் பெற்றது.தமிழகத்தில், 2.92 கோடி ஆண் வாக்காளர்கள், பெண்கள், 2.98 கோடி பேர். அதிக வாக்காளர்களை கொண்டது, சோழிங்கநல்லுார் தொகுதி. இப்பகுதியில், அதிகமாக தகவல் தொடர்பு தொழில்கள் உள்ளன என்பதும், அவற்றில் நாடு முழுவதும் உள்ள, பல சமூகத்தினர் பணியாற்றுகின்றனர் என்பதும், அனைவரும் அறிந்ததே.அதேபோல், அதிக வாக்காளர்கள் சென்னையிலும், அதற்கடுத்ததாக காஞ்சியிலும் உள்ளனர். இதைப் பார்க்கும்போது, காஞ்சி, திருவள்ளூர் பகுதியில், தொழில் ஆதாரங்கள் அதிகம் உள்ளன. அதனால், சிற்றுார்களை விட்டு வரும் பலர், இங்கு குடிபெயர்கின்றனர் என்பது தெளிவாகிறது.வெளிநாடுவாழ் வாக்காளர்கள், 97 பேர் இருப்பதாக வந்த தகவல், இனி அடுத்தடுத்த வாக்காளர் பட்டியலில் அதிகரிக்கலாம்.லோக்சபாவுக்கான, 2019ம் ஆண்டு தேர்தல் தேதி, இன்னும் இரு மாதங்களில் முடிவாகும் போது, தமிழகத்தில் காலியாக காத்திருக்கும், 20 சட்டசபை தொகுதிகள் சேர வாய்ப்பிருக்கிறது.பொதுத்தேர்தலில், மீண்டும் மோடி ஆட்சியா என்பதை, 'மீடியாக்கள்' அலசினாலும், எந்த அளவு அத்தேர்தலில், அதிக சதவீத ஓட்டு பதிவாகும் என்பது, முக்கிய விஷயம். அதேபோல், தமிழகத்தின், 'மினி பொதுத்தேர்தல்' ஆக கருதப்படும், 20 தொகுதி தேர்தல், நிச்சயம் அரசியலில், சில திருப்பங்களை கொண்டு வரலாம்.இது ஒருபுறம் இருக்க, முதலில் ஓட்டளிக்கும் வாக்காளர், 18 வயது நிரம்பியவர்கள். இவர்கள், 8.9 லட்சம் பேர். அதிலிருந்து அடுத்ததாக, 20 முதல், 30 வயது நிரம்பிய, ஏற்கனவே ஓட்டளித்த இளைய தலைமுறையினர் மொத்தம், 2.56 கோடி பேர். ஆகவே, 18 வயது முதல், 30 வயது வரை உள்ள வாக்காளர்கள், மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கையில், மூன்றில் ஒரு பங்காகும். இதில் பாதிப் பேர், பெண்கள் என்பது முக்கியமானது.இது எதற்காக என்றால், இன்றைய நிலையில், மாறிவரும் பொருளாதார அணுகுமுறைகள், வேலைவாய்ப்புக்கான வழிகள், கல்வி மற்றும் மருத்துவ வசதிகள் என்ற அடிப்படைக் காரணிகளை கருதும் சமூகம் அதிகரித்திருப்பதைக் காட்டுகிறது.மேலும், 70 வயது முதல், 80 வயதிற்கு மேல் உள்ளவர்கள், 40 லட்சத்து, 65 ஆயிரம் பேர். இவர்களில் எத்தனை பேர், 'ஆக்டிவ் லைவ்' என்பதில் உள்ளனர்? இவர்கள் சார்ந்திருக்கும் குடும்பப் பின்னணி, மருத்துவ செலவினம் ஆகியவை, நிச்சயம் கண்காணிக்கப்பட வேண்டும்.தவிரவும், தமிழகம் போன்ற வளர்ந்த மாநிலங்களில், அடுத்த, ௧௫ ஆண்டுகளில், இந்த வயதுடையவர்கள் எண்ணிக்கை, மொத்த மக்கள் தொகையில், 7 - 8 சதவீதம் வரை அதிகரிக்க லாம். கடந்த, 60 ஆண்டுகளில் உள்ள சராசரி ஆயுளைக் கருதும்போது, தமிழகத்தில் வயது முதிர்ந்தோர் கூட்டம் அதிகரித்திருக்கிறது.இவர்கள், 'கன்சர்வேடிவ்' அல்லது புதிய உலக அளவிலான பார்வையில் இருந்து மாறுபட்ட போக்கில் இருப்பதால், வளரும் நகரங்களில் இவர்கள் வாழ முடியுமா என்ற கேள்வியும் இனி வரலாம். தனியாக வாழும் ஆண், பெண் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும்.ஆகவே, தமிழகத்தில், கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி, தொழில் நகரங்களான திருப்பூர், துாத்துக்குடி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில், மக்கள் எண்ணிக்கை அதிகமாக சரியாமல் இருப்பதற்கு வழிகாண, அரசுத் திட்டங்கள் உதவ வேண்டும்.ஏனெனில், ஒரு இடத்தில் இருந்து, சில குறிப்பிட்ட பகுதிகளுக்கு, மக்கள் தொகை கணிசமாக இடம் பெயர்வது, பொருளாதார வளம் சேர்க்க பயன்படும் என்ற வாதம் சரியானதே. ஆனால், 18 வயதிற்கு குறைவான ஆண், பெண்கள், அடுத்த 10 ஆண்டில் எப்படி, சிறப்பான தனி நபர் வருமானத்தைக் கொண்டு வாழ முடியும் என்பதற்கான, 'மக்கள் தொகை கோட்பாடு' குறித்த ஆய்வும், அணுகுமுறையும் தேவை.வாக்காளர் சரிபார்ப்பு, வாக்காளர் பட்டியலில் தொடர்ச்சியாக திருத்தும் நடைமுறை சீராக இருக்கும் என்ற தலைமைத் தேர்தல் அதிகாரி, சத்ய பிரதா சாகு தெரிவித்த கருத்து வரவேற்கத்தக்கது. இனி, அதிக அளவு, 'டிஜிட்டல்' நடைமுறை பின்பற்றப்படும் போது, இப்பணியில் அதிக தவறுகள் இன்றி அமைய வாய்ப்பும் உண்டு.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement