Advertisement

கேள்விகளுக்கு விடை தருகிறது பட்ஜெட்

மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட், மாற்றங்களுக்கான வழிகளை காட்டுகிறது. 'இது, பிரதமர் மோடி அரசின், கடைசி பட்ஜெட்' என, எதிர்க்கட்சிகள் வர்ணித்தாலும், அதில் உள்ள தகவல்கள், இதுவரை எழுந்த பல்வேறு கேள்விகளுக்கு, விடை தரும் வகையில் உள்ளன.விவசாயிகள், மத்திய தர வகுப்பினர், அடிப்படை கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டுள்ள, பலரது கைகளில், ஆண்டுக்கு சில ஆயிரம் ரூபாய்கள் சேமிக்க வழிகாட்டும் வகையில் உள்ளது.நிதியமைச்சக பொறுப்பில் உள்ள, பியுஷ் கோயல் தாக்கல் செய்த பட்ஜெட், 2019 - 2020 நடப்பாண்டில், இம்மாதிரி செலவினங்களுக்கு, 80 ஆயிரம் கோடி ரூபாய்களை செலவழிக்க முன்வந்திருக்கிறது. இதைத் தவிர, ஏற்கனவே பிரதமர் அறிவித்த நலத்திட்டமான, 'ஆயுஷ்மான்' திட்டத்தை வலுவூட்ட, அதிக நிதி தரும் வகையில், அறிவிப்புகள் அமைந்திருக்கின்றன.மேலும், ரயில்வே துறையிலும், அத்துறையைக் கவனிக்கும், பியுஷ் கோயல், இப்பட்ஜெட்டில் அதிகம் கவனம் செலுத்தியிருப்பது சிறப்பு. ரயில் கட்டணமும் அதிகரிக்காது.மத்திய இடைக்கால பட்ஜெட் மற்றும் 2019 - 2020 பட்ஜெட் தாக்கல் குறித்து, ஏராளமான குழப்பங்கள் நீடித்தன. பொதுவாக, தேர்தல் நடக்கும்போது, அந்த அரசின் தேர்தல் முடியும் வரையிலான இரு மாதங்களுக்கான செலவினங்களை காட்டும் பட்ஜெட், 'இடைக்கால பட்ஜெட்' எனப்படுகிறது.நிதியமைச்சர் அருண் ஜெட்லி, இந்த அரசின் பட்ஜெட்டுகளை, இதுவரை தாக்கல் செய்தவர். இப்போது, அவர் உடல்நிலை சீரின்றி, அமெரிக்காவில் சிகிச்சை பெறுவதால், பியுஷ் கோயல் தாக்கல் செய்தார்.முன்பு, 'பொது பட்ஜெட்' மற்றும், 'ரயில்வே பட்ஜெட்' தனித் தனியாக இருந்ததால், அதை வேறுபடுத்த உதவியது. இன்று, இடைக்கால பட்ஜெட் கூட, சில பொருளாதார அறிஞர்கள் பார்வையில், புதிய கோணத்துடன் பேசப்படுகிறது.ஒரு அரசு பதவியில் இருக்கும், ஐந்து ஆண்டு களில், அடிக்கடி ஏதாவது ஒரு மாநில தேர்தல்வருவதால், அரசு வளர்ச்சி திட்டங்கள் குறித்த ஒட்டு மொத்த அணுகுமுறையை, அந்தந்த சமயத்தில் அறிவிக்க முடியாமல் போகிறது.சமயத்தில், பார்லிமென்ட் முடக்கமும், முக்கிய மசோதாக்கள் காலவரம்பின்றி, காத்துக் கிடக்கும் நிலையும் ஏற்படுகிறது. ஆகவே, ஏன் முழு பட்ஜெட்டை கூட தாக்கல் செய்தால், என்ன என்ற கேள்வி எழுகிறது.எப்படியும் புதிய வரிகளை அறிவிப்பது, தேர்தல் ஆண்டு பட்ஜெட்டில் இருக்காது என்பதற்கேற்ப, அறிவித்த சில வரிச்சலுகையை, அடுத்து வரும் அரசு அதை அமல்படுத்தும் என்ற வாசகம் இருக்கிறது. மேலும், இந்த ஆண்டில் வழக்கமாக, பட்ஜெட்டிற்கு முன் தரப்படும் பொருளாதார சர்வேயும் இல்லை.இப்பட்ஜெட்டில், தனி நபர் வருமான வரி வரம்பு, ஆண்டுக்கு, 5 லட்சம் ரூபாய் வரை உயர்வு, வீடுகள் வைத்திருப்போருக்கு கிடைக்கும் வாடகையில் சலுகைகள், பென்ஷன் சலுகை என்ற அறிவிப்புகளால் ஆண்டுக்கு, 18 ஆயிரத்து, 500 கோடி ரூபாய் வரை, அரசுக்கு வருவாய் இழப்பு.ஆனால், 5 ஏக்கர் நிலம் வைத்திருக்கும் சிறு விவசாயிகள், ஆண்டுக்கு, 6,000 ரூபாய் வரை, நிதி உதவி பெறுவர். ஏற்கனவே மாநில அரசுகள், இம்மாதிரி நிலங்கள் குறித்த விபரங்களை, 'டிஜிட்டல்' தொகுப்பாக்கி இருப்பதால், அவர்களைக் கண்டறிவது சுலபம்.தவிரவும், அவர்களுக்கு, ஆண்டில், மூன்று தவணையாக, இத்தொகை வங்கிக் கணக்கில் சேரும். திடீரென விதை கொள்முதல் அல்லது விவசாய நலன் சம்பந்தப்பட்ட செலவுகளுக்கு, இது நிச்சயம் பயன் தரும். இத்திட்டத்தில், 12 கோடி விவசாயிகள் பயன் பெறுவர்.ராணுவ செலவினம், சில நலத்திட்டங்களுக்கு முன்னுரிமை என்பதால், கூடுதலாக செலவினம் ஏற்பட்ட போதும், அரசின் மொத்த நிதிப் பற்றாக்குறை, 3.4 சதவீதமாக நீடிக்கும் என்பதும், பணவீக்கத்தை அதிகரிக்காத மோடி ஆட்சியின் செயலையும், பட்ஜெட் பிரதிபலிக்கிறது.பட்ஜெட் உரையை கேட்க, காங்கிரஸ் தலைவர் சோனியா, சபையில் இல்லை. காங்கிரஸ் தலைவர்ராகுல், பாதியில் எழுந்து சென்று, திரும்பி இருக்கிறார்.இந்த இடைக்கால பட்ஜெட், வரன்முறைகளை மீறியதாக, அக்கட்சியின் தலைவர்கள் பரப்புரை செய்திருப்பதும் முக்கியமானது. அதில், சிலரது குடும்பத்தினர் மீது, வரித்துறை வழக்குகள் உள்ளன. மாறாக, அக்கட்சி தனியாக ஆட்சிக்கு வந்தால், இப்பட்ஜெட்டை முழுவதும் நிராகரிக்குமா என்பதை, தேர்தல் பிரசாரத்தில், காங்., தலைவர் ராகுல் சொன்னால் பொருளாதார விவாதம் சூடுபிடிக்கும்.ஒட்டுமொத்தமாக, அதிகளவு பணம் வைத்திருக்காத, அதே சமயம், ஊழல் கறையின்றி வாழ முயலும், 35 முதல், 40 கோடி பேருக்கு, இப்பட்ஜெட் பயன்கள் சென்றடையும்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement