Advertisement

பேச்சு, பேட்டி, அறிக்கை

'கட்சிக்கு ஆணி வேரான கொள்கைகளை, பதவி ஆசைக்காக விட்டுக் கொடுப்பது தவறில்லை' என்பதை, சொல்லாமல் சொல்லும், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர், திருமாவளவன் பேட்டி: தேர்தலுக்கான சில விட்டுக் கொடுத்தல்களை, கொள்கை நிலைப்பாடுகளாகப் பார்க்க தேவையில்லை. பா.ஜ., என்ற சனாதன சக்தி வந்துவிடக் கூடாது; அதை வீழ்த்த வேண்டும் என்ற ஒற்றைப் புள்ளியில், தி.மு.க., - காங்., - கம்யூ., கட்சிகளுடன், விடுதலை சிறுத்தைகளும் ஒன்றுபட்டு நிற்கிறோம். மதச்சார்பற்ற அணிகள் சிதறி விடக் கூடாது என்பது தான் முக்கியமே தவிர, சில விட்டுக் கொடுத்தல்கள் தவறில்லை.

காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின், தஞ்சாவூர் மாவட்ட செயலர், சுவாமிமலை விமலநாதன் பேட்டி: மத்திய, பா.ஜ., அரசின், ஐந்தாவது பட்ஜெட்டிலும், விவசாயிகள் ஏமாற்றப்பட்டு உள்ளனர். கடந்த நான்கு ஆண்டுகளைப் போல், இந்த ஆண்டும், விவசாயிகளுக்கு பலன் தரக்கூடிய திட்டங்கள் ஏதும் இல்லை. விவசாயிகளால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கடன் தள்ளுபடி அறிவிப்பு இல்லாதது, பெரும் ஏமாற்றமாக உள்ளது.

இந்திய, கம்யூ., மூத்த தலைவர், நல்லகண்ணு பேட்டி: 'ஸ்டெர்லைட்' ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் எனக் கூறி, கடந்த ஆண்டு ஏப்ரலில், காவல் துறையின் அனுமதியுடன், ஆர்ப்பாட்டம் நடத்தினோம். அதற்காக தற்போது, தமிழக காவல் துறை எங்கள் மீது, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த அரசு மீது, பல குற்றச்சாட்டுகள் எழுகின்றன. அதற்கு முறையாக பதில் சொல்ல வேண்டியது, அரசின் கடமை.

'யாரைச் சொல்றீங்க... தெளிவா சொல்லுங்களேன்...' எனக் கேட்கத் தோன்றும் வகையில், தமிழக காங்., முன்னாள் தலைவர், இளங்கோவன் பேட்டி: சினிமா நடிகர்கள், அரசியலுக்கு வரலாம். ஆனால், விபரத்தோடு பேச வேண்டும். கமல் மட்டுமே, கொஞ்சம் விபரமாக பேசுகிறார். ஆரம்பத்தில், அவர் பேசுவது புரியாமல் இருந்தது. ஆனால், இப்போது கொஞ்சம் புரிகிறது. விபரத்தோடு வருபவர்களை, நான் வரவேற்கிறேன; விளம்பரத்திற்காக வருபவர்களின் அரசியல், தமிழகத்தில் எடுபடாது.

'மேற்கு வங்கத்தில் உங்கள் கட்சி செய்த அரசியலும், ஆண்டதும் போதும், உங்களைப் பற்றிப் புரிந்து கொள்ள...' எனச் சொல்லத் தோன்றும் வகையில், மார்க்.கம்யூ., தமிழக ராஜ்யசபா எம்.பி., - டி.கே.ரங்கராஜன் பேட்டி: எங்களைப் பற்றிய ஒவ்வொருவரின் கருத்திற்கும், நாங்கள் பதில் சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது. 'கம்யூனிஸ்ட்கள் நல்லவர்கள்; நல்லவர்கள் இல்லை' என, பலவிதமான கருத்துக்களை, பலரும் கூறுகின்றனர். அது, அவரவர் தனிப்பட்ட உரிமை. வரலாறு தான், இவற்றுக்கெல்லாம் பதில் சொல்லும்.
மத்திய கப்பல் மற்றும் நெடுஞ்சாலை துறை இணை அமைச்சர், பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி: தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, காய்ச்சல் வருவது போல், மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டை பார்த்து, காங்கிரஸ்காரர்களுக்கு காய்ச்சல் வந்து விட்டது. இது, தேர்தலுக்கான பட்ஜெட் அல்ல; ஆனால், எதிர்க்கட்சியினர் தான் அப்படி நினைக்கின்றனர். அவர்கள் தோல்வி பயத்தில் உள்ளனர்.
'தட்டு தடுமாறி ஏதோ சொல்ல வருகிறாரோ' என நினைக்கத் தோன்றும் வகையில், அ.தி.மு.க.,வைச் சேர்ந்த, லோக்சபா துணை சபாநாயகர், தம்பிதுரை பேட்டி: தேர்தலை மனதில் கொண்ட பட்ஜெட் இது. நீண்ட காலத்திற்குப் பின், நடுத்தர குடும்பத்தைப் பற்றியும், விவசாயிகள் பற்றியும் ஓரளவு சிந்தித்துள்ளது, வரவேற்கத்தக்கது தான். இன்னும் அவர்கள், சிந்தித்திருக்க வேண்டும்.

மத்திய உணவுத்துறை அமைச்சர், ராம்விலாஸ் பஸ்வான் பேட்டி: இடைக்கால பட்ஜெட் மூலம், எதிர்க்கட்சிகள் மீது துல்லியத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மத்திய அரசு நடத்திய, இரண்டாவது துல்லியத் தாக்குதல் இது. முதலாவது தாக்குதல், எதிரி நாட்டு வீரர்கள் மீது நடத்தப்பட்டது. தற்போது, எதிர்க்கட்சிகள் மீது தொடுக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்குப் பயனளிக்கும் வகையில், பட்ஜெட் உருவாக்கப்பட்டுள்ளது.

அ.ம.மு.க., துணை பொதுச்செயலர், தினகரன் அறிக்கை: கடந்த நான்கே முக்கால் ஆண்டுகளாக, அனைத்து தரப்பு மக்களையும், தன் நடவடிக்கைகள் மூலம், கசக்கிப் பிழிந்து வந்த மத்திய அரசு, முழுக்க முழுக்க தேர்தலை மனதில் வைத்து, இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது. ஆனாலும், வருமான வரிவிலக்கு போன்ற நடவடிக்கைகள், வரவேற்புக்கு உரியவை. கடந்த பட்ஜெட்களைப் போன்றே, தமிழகத்திற்கு என, தனித்துவமான திட்டங்கள் ஏதும் இல்லை.

பா.ம.க., நிறுவனர், ராமதாஸ் அறிக்கை: வேலைவாய்ப்பையும், வளர்ச்சியையும் ஊக்குவிக்கும் பெரிய திட்டங்கள் பட்ஜெட்டில் இடம் பெறாததால், பெரும் ஏமாற்றம் அளிக்கிறது. வருமான வரி உச்சவரம்பு உயர்த்தப்பட்டிருப்பது, மகிழ்ச்சி அளிக்கிறது. வரவேற்கத்தக்க அம்சங்களையும், ஏமாற்றத்தக்க அம்சங்களையும் ஒருசேர, நிதிநிலை அறிக்கை கொண்டுள்ளது.
'மத்திய பட்ஜெட்டால், காங்கிரசுக்கு பின்னடைவு ஏற்படும் என்பதை கரெக்டா சொல்றாரு' என, சொல்லத் தோன்றும் வகையில், காங்.,கைச் சேர்ந்த, முன்னாள் பிரதமர், மன்மோகன் சிங் பேட்டி: மத்திய அரசின் பட்ஜெட், லோக்சபா தேர்தலை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இது, நடுத்தர மக்கள், சிறு விவசாயிகள், நகர்ப்புற மக்களுக்கு, சலுகைகளை வாரி வழங்கும் வகையில் உள்ளது. இதன் விளைவுகள், வரும் தேர்தலில், நிச்சயம் பிரதிபலிக்கும். செலவினத்தை பற்றி கணக்கிடாமல், மத்திய அரசு பட்ஜெட்டை தயாரித்துள்ளது, வேடிக்கையானது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement