Advertisement

பேச்சு, பேட்டி, அறிக்கை

'ரொம்ப தாமதமா வெளியே வந்திருக்கீங்க...' எனச் சொல்லத் தோன்றும் வகையில், அ.ம.மு.க.,வில் இருந்து விலகியுள்ள, அதன் செய்தி தொடர்பாளரும், வழக்கறிஞருமான, அக்னீஸ்வரன் பேட்டி: கட்சி துவங்கியபோது இருந்தது போல், இன்று தினகரன் இல்லை. கட்சியில் உரிய மரியாதை இல்லை. தொண்டர்கள் மற்றும் தலைவர்களை அலட்சியமாக நடத்தியதால் தான், செந்தில் பாலாஜி, நாஞ்சில் சம்பத் ஆகியோர், கட்சியில் இருந்து விலகினர். தினகரனின் பேச்சு, வெறும் பேச்சாக மட்டுமே உள்ளது. மக்களுக்காக எந்தத் திட்டமும், அவரிடம் இல்லை. தினகரனுக்கு ஆதரவு கொடுத்தவர்களின், எம்.எல்.ஏ., பதவி பறிபோய் உள்ளது. ஆனால், அவர் மட்டும், எம்.எல்.ஏ., பதவியில் உள்ளார். ஜாதியை முன்னிலைப்படுத்தி, தினகரன் கட்சியை நடத்துகிறார்.

'சும்மா அடிச்சு விடுங்க... உங்களோட காசா... இல்லையே...' எனச் சொல்லத் தோன்றும் வகையில், தமிழக, காங்., தலைவர், திருநாவுக்கரசர், பேட்டி: 'மத்தியில், பா.ஜ., ஆட்சிக்கு வந்தால், ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும், 15 லட்சம் ரூபாய் போடுவேன்' என, மோடி எந்த அடிப்படையில் சொன்னாரோ, அதன்படியே, 'காங்., ஆட்சிக்கு வந்தால், ஏழைகளின் வங்கிக் கணக்கில், பணம் போடப்படும்' என, ராகுல் கூறியுள்ளார். ஆனால், மோடி நிறைவேற்றாததை, ராகுல் நடைமுறைப்படுத்திக் காட்டுவார்.


பா.ஜ., தேசிய தலைவர், அமித்ஷா பேச்சு: நாட்டில் இன்று, 16 மாநிலங்களில், பா.ஜ., ஆட்சியில் இருக்கிறது. ஆனால், எங்கள் ஆட்சிக் காலத்தில், பெரிய அளவிலான கலவரம் ஒன்று கூட நடக்கவில்லை என்பதை, பா.ஜ., தலைவர் என்ற முறையில், பெருமையோடு குறிப்பிடுகிறேன். இம்மாநிலங்களில், இதற்கு முன் ஆட்சி செய்த, காங்., - சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் போன்ற கட்சிகளின் ஆட்சி முடிவுக்கு வந்ததும், அது போன்ற கலவரங்களும் முடிவுக்கு வந்து விட்டன.


'சட்டியில் இருந்தா தானே, அகப்பையில் கிடைப்பதற்கு...' எனச் சொல்லத் தோன்றும் வகையில், தமிழக கூட்டுறவு துறை அமைச்சர், ராஜு பேட்டி: கடந்த எட்டு ஆண்டுகளாக, கூட்டுறவு வங்கியில், எந்த ஒரு கொள்ளை சம்பவமும் நடக்கவில்லை. கொள்ளை முயற்சி சம்பவம் மட்டுமே நடந்துள்ளது. தனியார் வங்கிகளில் மட்டுமே, கொள்ளை சம்பவம் நடந்திருக்கிறது.


தி.மு.க., தலைவர் ஸ்டாலின் அறிக்கை: தமிழகத்தில், இ.பி.எஸ்., ஆட்சியில், வேலைவாய்ப்பு அலுவலகங்களில் மட்டும், 80 லட்சம் பேர் பதிவு செய்துவிட்டு, என்றைக்கு வேலை கிடைக்கும் என்ற ஏக்கத்தில் காத்துள்ளனர். அதில், 24 முதல், 35 வயதுஉள்ள இளைஞர்கள் மட்டும், 30 லட்சம் பேர் என்ற அதிர்ச்சி தகவலை, அரசின் இணையதளத்திலேயே காண முடிகிறது. இந்த நேரத்தில், இரண்டாவது முதலீட்டாளர் மாநாடு என்ற, மீண்டும் ஒரு கானல் நீர் மாநாடு நடத்தி, இளைஞர்களை மேலும் மேலும், அ.தி.மு.க., அரசு ஏமாற்றி வருகிறது.


தமிழக கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர், ராதாகிருஷ்ணன் பேட்டி:தமிழகம் முழுவதும், கால்நடைகளை பராமரிக்க புதிதாக, 800 கால்நடை மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். நாட்டில் முதல்முறையாக, கால்நடைகளைப் பராமரிக்க, 'அம்மா ஆம்புலன்ஸ்' வசதி, தமிழகம் முழுவதும் ஏற்படுத்தப்பட உள்ளது. கால்நடைகளுக்குப் பிரச்னை ஏற்பட்டால், அதை தெரிவிக்க, இலவச தொலைபேசி எண்ணும் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement