Advertisement

நல்ல முடிவு வந்தது!

தமிழகத்தில், ஆசிரியர் - அரசு ஊழியர் போராட்டம், முடிவுக்கு வந்திருக்கிறது. இதில், ஆசிரியர்கள் போராட்டம், அரசு பள்ளிகள் சேர்க்கையில், நிச்சயம் இனி எதிரொலிக்கும்.ஏனெனில், அரசு ஊழியர் உட்படபாதுகாப்பாக பணிபுரிபவர்கள், 'பென்ஷன்' திட்டத்தில் உள்ளவர்கள் போராட்டம் நடத்துவது அல்லது சம்பள உயர்வை அதிகரிக்க வலியுறுத்துவது, காலத்தின் கட்டாயம் என்ற கருத்துடன்ஏற்கப்படுவதற்கு இல்லை.இன்றைய நிலையில், அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், நிரந்தரமானவர் என்ற பட்டியலில் இருக்கும் பட்சத்தில், அவர்கள் சம்பளம், பணிக்கொடை, அதற்குப் பின் பென்ஷன் என்று கணக்கை பார்த்தால், அது மற்ற துறைகளில் உள்ளவர்களை மிரள வைக்கும். இதுவரை, ஒவ்வொரு சம்பளக் கமிஷனும், அவர்கள் ஊதியத்தை அதிகரித்ததில், எதிர்கால அணுகுமுறையை பின்பற்றவில்லை. கல்வித் துறையில், தமிழகம் முன்னேற, இது சரி தான் என்ற வாதமும் பொருந்தாது.தற்காலிக பணிக்கு, பட்டதாரிகள் ஆயிரக்கணக்கில், மனு கொடுத்திருக்கின்றனர். மாதத்திற்கு மொத்தமாக, 10 ஆயிரம் ரூபாய் சம்பளம் வந்தால் போதும் என்ற கருத்தில், இவர்கள் பணிக்கு ஆயத்தமாகி இருப்பது, வேதனையான விஷயம். அரசு வேலை, பாதுகாப்பான பணி என்ற கண்ணோட்டம், மக்கள் மனதில் இருக்கிறது.போராட்டம் தொடர்பான வழக்கில், 'அதிகம் படித்த பலர், மாதச் சம்பளம், 7,000 ரூபாய் வந்தால் போதும் என்று பணிபுரிகின்றனர். அதிலும், கூரியர் சர்வீஸ், உணவு தயாரிப்பு நிறுவனங்களில் பணி புரிபவர் நிலை, எல்லாருக்கும் தெரியுமா...' என்ற, நீதிபதியின் கேள்விகள், 'ஸ்டிரைக்' செய்தவர்களுக்கு புரிந்திருக்கும்.அதற்காக, ஸ்டிரைக் நோட்டீஸ் தந்தால், இஷ்டப்படி அரசுப் பணிகளை முடக்கலாம் என்ற கருத்து, விபரீதமானது. ஸ்டிரைக் என்ற தத்துவம், ஏற்கத்தக்கது அல்ல என்ற கருத்தை, சுப்ரீம் கோர்ட் ஏற்கனவே வலியுறுத்தி இருக்கிறது.தமிழக அரசு இப்போது எடுத்த அணுகுமுறை, தவிர்க்க முடியாதது. ஏழாவது சம்பளக் கமிஷன், ஏற்கனவே அமலாகியிருக்கிறதுஎன்பதைச் சுட்டிக்காட்டி, தொழிற்சங்கங்களுடனான பேச்சில் பங்கேற்க, முதல்வர்பழனிசாமி மறுத்திருக்கிறார்.ஆனால், போராடுபவர் பக்கம் இருந்து, எதிர்க்கட்சிகள் ஓட்டு வங்கியை கணக்குப் பார்க்கின்றன. இதை விடுத்து, அரசு ஊழியர், ஆசிரியர் சம்பளம் மற்றும் புதிய ஓய்வூதியம் குறித்த தங்கள் அணுகுமுறையை, பொருளாதார அடிப்படையில், பிரதான எதிர்க்கட்சி விளக்க வேண்டும். சிறிய கட்சித் தலைவர்களுக்கு, போராட்டம் எல்லாமே சரி தான்.இன்றைய நிலையில், மாநில அரசு பட்ஜெட் தாக்கல் செய்யும் போது, அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கான சம்பளம் மற்றும் சலுகைகள், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு, எந்த அளவு நிதி பாதிப்பை ஏற்படுத்தும் என்றுஅறிவிக்க வேண்டும்.ஏனெனில், போராட்டம் நடத்தும் பல சங்கத் தலைவர்கள், 'எங்களுக்கு சம்பளம் குறைவு' என்று சொல்ல முன்வரவில்லை. மாறாக, ஊதியக் கமிஷன் பரிந்துரை, மற்ற டிரான்ஸ்பர் உத்தரவுகளில் பாதிப்பு, முக்கியமாக, ஓய்வூதியத்தில் புதிய அணுகுமுறைக்கு எதிர்ப்பு ஆகியவை தான், முக்கியத்துவம் பெற்றிருக்கின்றன. 'டிரான்ஸ்பர்' முறையில், சில ஒளிவு மறைவற்ற தகவல்கள் வருகின்றன.ஆசிரியர்கள் பலர் இன்றைய கல்வித் திட்டப்படி, திறனறியும் கல்வியை கற்பிக்க திறன் பெற்றவரா என்பதை கண்டறிய, நடைமுறை தேவை. தற்காலிக ஆசிரியர் அல்லது தற்காலிக ஊழியர், ஒப்பந்தத் தொழிலாளர் என்ற நடைமுறைகளை, அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டிய காலம் வந்திருக்கிறது. தற்காலிக ஊழியர் நியமனத்தில், புதிய அணுகுமுறை தேவை.மேலும், தற்போதுள்ள தலைமைச் செயலக அரசு ஊழியர் துவங்கி, அரசு பள்ளிகளில் பணியாற்றுவோர் உட்பட அனைவரது ஓய்வுக்காலம் முடியும் நேரத்தில், புதிய நியமனம், அந்தந்தப் பணிகளின் சரியான தேவைக்கு ஏற்ப நடக்க வேண்டும். 'டிஜிட்டல்' மயமாகும் காலம் என்பதால், அனைத்தையும் கையாளும் தகுதி, விடுமுறையில் செல்பவர்கள் பணியை கையாளும் நேர்த்தி ஆகிய அனைத்தும் இல்லாத அரசுப் பணிகள், இனி பெரும் சுமையாக மாறிவிடும்.சமூக வலைதளங்கள் மூலம் அல்லது தவறான பொருளாதார கணக்கு விபரங்களை தந்து, மக்களைக் குழப்பும் சக்திகளை கண்டறிந்து தடுக்காவிட்டால், தினமும் ஏதாவது ஒரு அரசுத் துறை போராட்டம் அமலாகும். அதற்கு முன், அனைத்துத் தொழிற்சங்கத்தினரும், புதிய கால நடைமுறைகளுக்கு ஏற்ப, தங்கள் தொழிலாளர் நல உத்திகளை வகுக்காமல், 'போராட்டம் செய்த நாட்களுக்கு சம்பளப் பிடித்தம் கூடாது' என்று கேட்பது நியாயமல்ல.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement