Advertisement

புதிய வருகை... புதுமை தருமா?

காங்கிரஸ் கட்சியில், நீண்ட நாள் தலைமையை வலுவாக்கும் திட்டத்தின் அடிப்படையில், பிரியங்கா வாத்ரா வந்திருப்பது, வரவேற்கத்தக்கது. முன்னாள் பிரதமர் இந்திராவின் மகன், ராஜிவின் வாரிசுகளில், ஆண், பெண் என்ற பாகுபாடு இன்றி, தலைமை ஏற்றிருக்கின்றனர்.உ.பி.,யில், எந்தக்கட்சி அதிக இடங்களைப் பெறுகிறதோ, அதுவே, பிரதமரைக் காட்டும் அடையாளம் என்ற, அரசியல் கருத்து உண்டு. ஆனால், தேவகவுடா, குஜ்ரால் போன்றவர்கள், இந்தக்கணக்கில் இல்லை. மன்மோகன் முற்றிலும் வித்தியாசமாக, பிரதமர் பதவியை அலங்கரித்தவர்.பா.ஜ.,வில், வாஜ்பாய், உ.பி., மாநிலத்தவராகவே கருதப்பட்டவர். மோடியின், வாரணாசி, எம்.பி., பதவி, அவரையும் பிரதமர் ஆக்கியது என்று, இன்று கூறினாலும் தவறில்லை. ஆனால், ராகுல் தலைவரான பின், அவர் பரபரப்பு அரசியல், ம.பி., உட்பட மூன்று மாநிலங்களில், காங்கிரசுக்கு வெற்றியை ஈட்டித் தந்திருக்கிறது.அவரும், பிரதமர் மோடியும், 2019ம் ஆண்டு லோக்சபா தேர்தலில், எதிர் துருவங்களாக வர்ணிக்கப்பட்ட நிலையில், பிரியங்காவிற்கு அளித்த முக்கியத்துவம் சிறப்பானது. ஏனெனில், 10 ஆண்டுகளுக்கு மேலாக, மத்திய ஐக்கிய முற்போக்கு கூட்டணியை, எந்த ஆட்சிப் பொறுப்பும் இன்றி இயக்கிய சோனியாவின் சாமர்த்தியம், அவரின் அனுபவத்தை காட்டுகிறது.அதேசமயம், இப்போது அவர் ராகுலை, காங்கிரசின் தலைமைப் பதவிக்கு கொண்டு வந்திருப்பது, அக்கட்சியின் மீட்சிக்கு வழி சேர்க்கும் பெரிய முயற்சி என்றே கருதலாம்.இருந்த போதும், ராஜிவ் மறைவுக்குப் பின் சில ஆண்டுகளில், பிரியங்கா வாத்ரா என்ற பிரியங்கா காந்திக்கு, ஏன் முக்கியத்துவம் தரவில்லை என்ற கேள்வி அர்த்தமற்றது. அவர் தன் பொறுப்பில், சோனியாவும், ராகுலும் போட்டியிடும், ரேபரேலி மற்றும் அமேதியில், அதிக பிரசாரம் செய்திருக்கிறார். அவருக்கு, பிரசார உத்திகள் அத்துபடி.கடந்த, 2012 தேர்தலில், உ.பி.,யில் பிரசாரம் செய்தபோது, அவர் அணிந்திருந்த புடவை மற்றும் அணுகுமுறைகளை, இந்திராவுடன் ஒப்பிட்டவர்கள் உண்டு. ஆனால், அவரைத் தாண்டி மாநிலத்தில், பா.ஜ., அலை வீசியது.இப்போதும், பிரியங்காவின் அழகு பற்றி, பா.ஜ., தலைவர் ஒருவர் குறிப்பிட்டது, அன்றைய சோஷியலிஸ்ட் தலைவர் லோகியா பாணியில் அமைந்த, அரைகுறை விமர்சனம்.அக்காலத்தில், அரசியலில் இந்திரா முக்கியத்துவம் பெற்றதும், 'நாம் தினசரி பத்திரிகை ஒன்றில், அவர் அழகு முகத்தைப் இனிப் பார்க்கலாம்' என்றார். அதை இந்திரா, சாமர்த்தியமாக ஒதுக்கி, 'லோகியாவும், என் தந்தையும், சுதந்திரப் போராட்டத்தில் சிறை சென்றபோது, அவர்களை சந்திக்க செல்லும் நான், வீட்டு உணவை அவர்களுக்குத் தந்தது உண்டு' என்று கூறி, நாசுக்காக பதிலடி தந்தது உண்டு.சமாஜ்வாதி கட்சி தலைவர், அகிலேஷ் அல்லது பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி ஆகியோர் அளவுக்கு, அம்மாநிலத்தில் ஓட்டுகளை அள்ளிக் குவித்த வரலாறு, அவரிடம் இல்லை. அவர் கணவர், ராபர்ட் வாத்ராவும், அவரை அரசியலில் அதிகம் ஈடுபட, முனைப்புக் காட்டவில்லை. அது, அவர்கள் குடும்ப சம்பந்தப்பட்ட விஷயம் என்பதை, பலரும் அறிவர்.இன்றைய சூழ்நிலையில், வரி தொடர்பான வழக்குகள் சில, வாத்ராவின் மீது பாய்ந்திருக்கின்றன. இதை உடனே, பா.ஜ., கிளப்பாது. ஏனெனில், அதனால் ஏற்படும், 'அனுதாப அலை' கிழக்கு, உ.பி.,யின் பொதுச்செயலரான, பிரியங்காவுக்கு சாதகம் ஆகலாம். இப்பகுதியில், மோடி வென்ற வாரணாசி தொகுதியும் அடங்கும்.அதேபோல், மேற்கு, உ.பி.,யில், குவாலியர் அரசு வம்சத்தைச் சேர்ந்த, மாதவராவ் சிந்தியாவை நியமித்ததன் மூலம், கட்சி பாரபட்சமின்றி இருப்பதைக் காட்டியுள்ளனர். வாத்ரா மீது, தேர்தல் முடிவதற்குள், வரி தொடர்பான அதிக நடவடிக்கைகள் வரும் பட்சத்தில், 'அது, பிரியங்கா நியமனத்தில் அதிருப்தி கொண்டு, அரசு செய்யும் செயல்' என்று கூட, ராகுல் கூறத் தயங்கமாட்டார்.இன்றைய நிலையில், பா.ஜ., - சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் என்பவைகளுக்கு அடுத்ததாக, நான்காம் இடத்தில், காங்கிரஸ் நிற்கிறது. உ.பி.,யில், 20 சீட்டுகளை, காங்கிரஸ் பிடிக்கும் என்றால், அது பிரமாண்ட முயற்சி. அதற்கு முன், கிழக்கு, உ.பி.,யில், 10 சீட்டுகள் கூட, தங்கள் கட்சி போட்டியிடாது எனக் கூறும் அகிலேஷ், பிரியங்கா வருகையை வரவேற்றிருப்பது, குறிப்பிடத்தக்கது. அவருடன் அணி சேர்ந்தாலும், வியப்பதற்கு இல்லை.ஒரு வேளை பிரியங்கா வருகையால், காங்கிரஸ் கட்சி அதிக இடங்களைக் கைப்பற்றும் பட்சத்தில், அது ராகுல் முக்கியத்துவத்தை குறைக்கலாம். அதற்கு முன், இந்த இரண்டு மாதங்களில், 'பூத்' அளவில், காங்., தொண்டர்களை எப்படி குவித்து, காங்கிரஸ் தோல்வி முகத்தை மாற்றப் போகிறார் பிரியங்கா என்பதே, அடுத்தடுத்த திருப்பமாகும்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement