Advertisement

நல்ல மாற்றம் தேவை...

நாட்டிலுள்ள பெரும்பான்மையான மக்கள், வறுமையின்றி, சிறந்த கல்வி அறிவுடன், திறமையான முடிவுகளை எடுக்கும் ஜனநாயக உணர்வுகளைப் பெற்றிருப்பதே, அந்த நாடு குடியரசு ஆனதன் அர்த்தமாகும்.இந்திய அரசியல் சட்டமானது, நாடு சுதந்திரம் பெற்று, இரு ஆண்டுகளுக்குப் பின், மாபெரும் முயற்சியில் உருவானது. நம் அரசியல் சட்ட விதிகள் உருவாக்கத்தில், பிரிட்டிஷ் அரசியல் சட்ட பாணியை பின்பற்றினாலும், அதற்காக, மாதக்கணக்கில் நடத்தப்பட்ட விவாதங்கள் ஏராளம்.அம்பேத்கரை, காங்கிரஸ் கட்சி அதிகம் ஏற்காவிட்டாலும், அவரால் அரசியல் சட்ட விதிகளை சிறப்பாக உருவாக்க முடியும் என, டாக்டர் ராஜேந்திர பிரசாத், வல்லபாய் படேல் போன்ற, சட்டம் படித்த பலர் வலியுறுத்தினர். அதன் காரணமாகவே, சட்ட நடைமுறைகளை உருவாக்கும், வரைவு கமிட்டி கூட்டத்திற்கு, அம்பேத்கர் தலைமையேற்க வந்த போது, அனைவரும் அவரை கைதட்டி வரவேற்றனர் என்கிறது, வரலாறு.நம் அரசியல் சட்டத்தில், இன்று, 100க்கும் மேற்பட்ட திருத்தங்கள் வந்து விட்டன. இருப்பினும், முதல் திருத்தமே, கருத்து சுதந்திரம் மற்றும் பேச்சு சுதந்திரம் பற்றியதாகும். இந்தத் திருத்தம், நாட்டின் நன்மைக்கு குந்தகமானது என்றால், அதை ஏற்க முடியாது என, அன்றே முதல் பிரதமரான நேரு வலியுறுத்தியது உண்டு. பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் என்பது, ஜனநாயக எல்லைக்குள் அமைய வேண்டும்; இல்லையெனில், சுதந்திரம் பெற்ற நாடு முன்னேற முடியாது என்ற, கருத்து நிலவிய காலம் அது.அவசரநிலை பிரகடன காலம் முடிந்து, நாடு மீண்டும் ஜனநாயக நடைமுறைக்கு திரும்பிய போது, அன்றைய மாபெரும் தலைவர், ஜெயப்பிரகாஷ் நாராயணன், 'சோறும் வேண்டும்; சுதந்திரமும் வேண்டும்' என்றார். அதன் அர்த்தம், சுதந்திரம் வந்ததும் எல்லாம் முடிந்து விடாது; சோறும் கிடைக்க வேண்டும் என்பதாகும்.நம் நாட்டில் விவசாய பொருட்கள் உற்பத்தியில், அதிக பின்னடைவு இல்லை. ஆனாலும், பல பொருட்களுக்கான ஆதரவு விலையை, மத்திய அரசு உயர்த்திய பிறகும், விவசாயிகள், தங்கள் கடன் சுமை அதிகரிப்பதாகவே கூறுகின்றனர். அதற்கு காரணம், அவர்கள் உற்பத்தி செய்த பொருட்களை சேமிக்க, உரிய சேமிப்பு கிடங்குகள் இல்லாததே. மேலும், பொருட்களை கொண்டு செல்ல உரிய வாகன வசதிகள் இல்லாததும் காரணமாகும். இதனால், விவசாயிகள் தங்கள் உற்பத்தி பொருட்களை, குறைந்த விலையில் விற்க நேரிடுகிறது.இந்த அடிப்படை குளறுபடிகளை தீர்க்க, விவசாயிகளுக்கு ஓய்வூதியம் தருவது உதவிடுமா என்றால், அதனால், மிக குறைவான நிலம் வைத்திருப்பவர்கள் பயன் பெறுவரா என்பதும், சந்தேகமே.எனவே, பால் பொருட்கள், கால்நடை வளர்ப்பு, திசுக்கள் மூலம் புதிய வகையில், அதிக விளைச்சல் காண்பது போன்ற புத்தாக்க செயல்களுடன், சந்தைப்படுத்துதலில் இடைத்தரகர்கள் அல்லது அரசு ஏஜன்சிகளின் ஆதிக்கத்தை குறைக்க வேண்டும். அப்போது தான், விவசாயிகள் முன்னேற்றத்தில் மாற்றம் நிகழும்.கடந்த, 1980ம் ஆண்டுகளில், கல்வியறிவு முன்னேற்றத்தில், சீனா முந்துகிறது என்ற கருத்து நிலவியது. அதனால், கல்வி அமைப்புகள் அதிக ஊக்கம் பெற்றன; அதற்கான, பட்ஜெட் ஒதுக்கீடும் அதிகரித்தது. ஆனால், இன்று அடிப்படைக் கல்வி முதல், உயர் கல்வி வரை, திறன் அறி கல்வியாக மாற்ற வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. கூட்டல், கழித்தல் முறைகளில், மூன்றாம் வகுப்பு வரை முன்னேற்றம் வந்தாலும், கடந்த இரு ஆண்டுகளில், அதில், அதிக முன்னேற்றம் காணப்படுவது திருப்பமே.மொத்தத்தில், விவசாயம், கல்வி மற்றும் சுகாதாரம் போன்றவற்றில், சிறப்பு திட்டங்கள் உடைய நாடாக, இந்திய மாற வேண்டும். இல்லையெனில், இந்திய இறையாண்மை என்பது, செறிவு கொண்டதாக மாறுவது சிரமமாகும்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement