Advertisement

இன்றைய முக்கிய கேள்வி!

மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, 'மகாபெரிய கூட்டணி' என்ற கருத்தை வலியுறுத்தாவிட்டாலும், நாட்டில் உள்ள, 20க்கும் மேற்பட்ட கட்சிகளின் தலைவர்களுடன், கோல்கட்டாவில் பிரமாண்ட பேரணி நடத்தி விட்டார்.அதில் பங்கேற்ற தலைவர்கள் பலரும், ஒவ்வொரு மாநில கட்சிகளை நடத்தி தலைவர்களாக இருப்பதுடன், சாமர்த்தியமாக தங்கள் வாரிசுகளை களமிறக்கி விட்டவர்கள். ஆந்திராவின் முதல்வர் சந்திரபாபு, டில்லி முதல்வர் கெஜ்ரிவால், கர்நாடாக முதல்வர் குமாரசாமி ஆகியோர், மாநில முதல்வர்கள்.ஆனால், இந்த, 22 தலைவர்களில், முன்னாள் மத்திய அமைச்சர்கள் யஷ்வந்த் சின்கா, அருண்ஷோரி ஆகியோர், பா.ஜ., வட்டத்தில் இருந்து, தற்போது தனியாக, அதிருப்தி குரல் எழுப்பும் தலைவர்கள். மேலும், யஷ்வந்த் சின்கா, பிரதமர் மோடி மட்டும் அல்ல, ஜெட்லி மற்றும் ஆர்.எஸ்.எஸ்., தலைமையை ஆதரிக்காதவர். வரும் லோக்சபா தேர்தல் வரை இவர், பா.ஜ.,வில் இருப்பதை, அக்கட்சி கண்டுகொள்ளாமல் விட்டுவிடும்.ஆனால், பிரதமராக வர ஆசைப்படும், பகுஜன் சமாஜ்வாடி கட்சி, மாயாவதி வரவில்லை. 'தமிழக மக்கள் பிரதமராக வர விரும்பும் ராகுல்' என்ற, தி.மு.க., தலைவர் ஸ்டாலினால், வர்ணிக்கப்பட்ட ராகுல் வரவில்லை. பதிலாக, லோக்சபாவில் எதிர் அணியில் உள்ள, மல்லிகார்ஜுன கார்கே, மேடையில், 21 தலைவர்களுடன் கைகோர்த்து போஸ் கொடுத்தார்.அவர், 'இத்தலைவர்கள் கருத்துடன், எங்கள் இதயம் சேரவில்லை; ஆனால், கைகோர்ப்பதில் ஆர்வம் காட்டுகிறன்' என்கிறார். அக்கட்சியில் உள்ள அனைவரும், இதை ஊன்றிக் கவனித்திருப்பர்.உ.பி.,யின், சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ், 'அடுத்த பிரதமர் யார் என்பதை, மக்கள் நிர்ணயிப்பர்' என்கிறார். இக்கூட்டத்தில் பங்கேற்ற, முன்னாள் பிரதமர் கவுடா, 'அனைவரும் ஒரு பொதுத்திட்டத்தை, முதலில் அறிவிக்க வேண்டும்' என்ற கருத்தை, மற்றவர்கள் கண்டு கொண்டதாக தெரியவில்லை. தெலுங்கானா ராஷ்டிரீய சமிதி தலைவர், முதல்வருமான சந்திர சேகர் ராவ் மற்றும் மம்தாவை விரும்பாத இடதுசாரி தலைவர்கள் யாரும் பங்கேற்கவில்லை.முன்பு, வாஜ்பாய் கூட்டணியில், அவருக்கு பல்வேறு தொல்லைகள் தந்தவர்களை, அவர் சாமர்த்தியமாக, நகைச்சுவையாக, 'மம்தா, சமதா, ஜெயலலிதா' என்று வர்ணிப்பார். மம்தா எப்போதுமே, கூட்டம் சேர்ப்பதில் வல்லவர். அதை, அந்தக் காலத்தில் ராஜிவ் தலைமைக்கு காட்டி, தனியாக மாநில கட்சியை உருவாக்கியவர்.'சமதா' என்பது, லோகியா கருத்துக் கொண்ட சோஷலிச தலைவர்கள். அதிலும், அந்தக்கால அரசியலில், இந்திராவை வென்ற, ராஜ் நாராயணன் ஓர் உதாரணம். சமதா என்ற அணி, ஜனதா தளம் என்ற பல வகைகளில் உருமாறி நிற்கிறது. இன்று ஜெயலலிதா இல்லை.இப்போது, பிரதமர் மோடியின் ஐந்தாண்டு கால ஆட்சி நிறைவடைய உத்தேசமாக, 100 நாட்கள் உள்ளன. அவர் தலைமை, 'சர்வாதிகாரம் மற்றும் அடக்குமுறையை கொண்டதாகக் கூறும் இக்கூட்டணித் தலைவர்கள் பலர், தங்கள் கட்சிகளில் எப்படி, குடும்பத் தலைவர்களை மட்டும் முன்னிறுத்தினர் என்பதைக் கூற மறுக்கின்றனர்.ஆகவே, மாநில அளவில் கட்சிகளில், புதிய தலைமை அதிகம் இருப்பதால், தேசிய அளவில் என்ன மாற்றம் வரும்?அதனால், கோல்கட்டா பேரணியில், 'மகா கட்பந்தன்' என்ற வார்த்தைப் பிரயோகம் சுருங்கி விட்டது. காங்கிரஸ் பெரிய கட்சி என்றாலும், அதில் ராகுல் தலைமையை ஏற்கும் சுபாவம், அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் எந்த அளவு ஏற்றிருக்கின்றனர் என்று தெரியாது. கோல்கட்டா பேரணியை பார்த்தபின், தி.மு.க., தலைவர் ஸ்டாலினும், அக்கருத்தை வேறு விதமாக பிரதிபலிக்கிறார்.ஆனால், அவசர நிலையை அமல் செய்த இந்திராவை ஆதரித்த தமிழக காலம் போல், தேர்தலில் ராகுலைப் பிரதமராக்க, தமிழக மக்கள் கருத்தோட்டம் இருப்பதாக வர்ணித்து சமாளிக்கிறார்.'பிரதமர் மோடி தேவையில்லை' என, மக்கள் முழுவதுமாக ஓட்டளிக்கும் போது, அக்கட்சி ஒரேயடியாக, 150 எம்.பி.,க்கள் சீட்டுக்கும் குறைவாகப் பெறுமா என்பதை, இன்னமும் எந்த முன்னணிக் கருத்துக் கணிப்பும் காட்டவில்லை.இருந்தாலும், இந்திய ஜனநாயகம் மீண்டும், மாநிலக் கட்சிகள் கூட்டணியைக் கொண்ட மத்திய அரசை உருவாக்க, இளைய வாக்காளர்கள் சிந்திக்க மாட்டார்களா என்பதே, இன்றைய முக்கிய கேள்வியாகும்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement