Advertisement

கிருமிகளைதடுக்கும்கலைப் பொருட்கள்!

நாட்டு மாட்டுச் சாணத்தில், புதுமை யான முறையில் கலைப்பொருட்கள் செய்து லாபம் ஈட்டி வரும், மதுரை அடுத்த செல்லுாரைச் சேர்ந்த, இயற்கை விவசாயி, கணேசன்: மூன்று ஆண்டுகளாக, இயற்கை விவசாயம் செய்து வருகிறேன். விளை நிலங்களுக்கு உயிரே, இயற்கையாக நமக்கு கிடைக்கும் நாட்டு மாட்டுச் சாணம் தான்.இந்த நாட்டு மாட்டுச் சாணத்தையும், கோமியத்தையும் மட்டுமே மூலப்பொருளாக வைத்து, அலங்கார தாம்பூல தட்டு, கோவில், மாவிலை தோரணம், பேனா ஸ்டாண்டு உள்ளிட்ட, 80க்கும் மேற்பட்ட கலையழகுப் பொருட்களை செய்து வருகிறேன். அது மட்டுமின்றி, சாணம், கோமியம், முல்தானி மிட்டி, சந்தனப்பொடி எனச் சேர்த்து, இயற்கை முறையில் குளியல் சோப்பு, அழகுச்சாதன பொருட்களையும் செய்கிறேன்.மாட்டுச்சாணம், அருமையான கிருமிநாசினி. அந்தக் காலத்தில் வாசல் தெளிக்க சாணத்தைத்தான் பயன்படுத்தினர். அறிவியல் ரீதியாகப் பார்த்தால், வீட்டுக்குள் சாண கலைப் பொருட்கள் இருந்தால், கிருமிகளைத் தடுக்கும். எங்கள் கிராமத்தில், 12 ஆண்டுகளுக்கு முன், சாணத்தில் செய்து வைத்த
பிள்ளையாரை, இன்றும் கும்பிட்டு வருகின்றனர்.

தற்போது, மதுரை சுற்று வட்டாரத்தில் மட்டுமே கலைப்பொருட்களை விற்பனை செய்கிறேன். இதைத்தவிர, சுற்றுச்சூழல் கண்காட்சிகளில் வைத்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன். சூழல் ஆர்வலர்கள் தான் என் வாடிக்கையாளர்கள். நாட்டு மாட்டின் அருமைகளைத் தெரிந்து, கலைப்பொருட்களை வாங்கி பயன்படுத்துகின்றனர்.
தொடர்புக்கு: 99420 85413.

விழுந்தாலும்எழ தெரிய வேண்டும்!பீனிக்ஸ் மனுஷியாக எழுந்து நின்றிருக்கும், சுனிதா அடினஸ்: அம்மா, அப்பாவுக்கு பூர்வீகம், கேரளா. நான் பிறந்து வளர்ந்தது, திருப்பூரில். மருத்துவம் படிக்க ஆசைப்பட்டேன்.
வீட்டில், வசதியின்மை, பல நிறுவனங்களில் வேலை என, என் மருத்துவக் கனவு காணாமல் போக, 'பிசியோதெரபி' சேர்ந்தேன். வேலை நேரம் போக, மீதி நேரத்தில், குறிப்பாக, குழந்தை இல்லாதவர்களுக்கான, சிறப்பு பிசியோதெரபி சிகிச்சை செய்து வந்தேன்.
கடந்த, 2011-ல், நணபர் மூவருடன், காரில், பெங்களூரில் இருந்து, கோயம்புத்துார் வந்து கொண்டிருந்தோம். காரை ஓட்டி வந்த நண்பர் கண் அயர, நாங்கள் வந்த கார், மூன்று முறை பல்டியடித்து, சாலை தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. என் முகம், கார் கதவுக்கு வெளியே சிக்கி, முழுவதும் சிதைந்து போனது.மருத்துவமனையில், 65 நாட்கள் இருந்தேன். என் முகத்தை சுத்தம் செய்யவே, இரு வாரம் ஆனதாம். கன்னத்துக்குள் புதைந்திருந்த கருவிழியை கண்டுபிடித்து, மறுபடி பொருத்தியுள்ளனர். மேல்தாடை, கீழ்த்தாடை, பல் எல்லாம் நொறுங்கி, கழுத்துக்கு மேல் உணர்வில்லாத நிலை. சாப்பாடு, சுவாசம் எல்லாமே, 'டியூப்' வழியாகத் தான்.உருவமில்லாத என் முகத்தை, தொட்டு பார்க்காமல் இருக்க, கைகளை கட்டி வைத்திருந்தனர். மாதக்கணக்கில் கண்ணாடியே பார்க்க விடவில்லை. நான்கு ஆண்டுகளில், 27 அறுவை சிகிச்சை, காலில் இருந்து எலும்பு எடுத்து மேல்தாடை, இடுப்பில் இருந்து எலும்பு எடுத்து மூக்கில் வைத்துள்ளனர். எட்டு ஆண்டுகளுக்கு பிறகும், மூச்சு விட, அடிக்கடி சிரமம் வரும். கண்ணிலிருந்து கண்ணீர் வந்தபடி இருக்கும்.என்னுடன் படித்த ஜெயப்ரகாஷ், விபத்து குறித்து அறிந்து வந்து, என்னைப் பார்த்து கண் கலங்கினார். அன்று இரவு, 2:00 மணிக்கு, 'திருமணம் செய்து கொள்ளலாமா?' என, அவரிடமிருந்து, 'புரபோசல் மெசேஜ்!'நான் மறுக்க, பொம்மலாட்டக் கலைஞர் மற்றும் டான்சரான அவர், உறுதியான முடிவுடன் இருக்க, கொஞ்ச நாள் கழித்து திருமணம் செய்து கொண்டோம்.'ஹெலனோ ஓ கிராடி இன்டர்நேஷனல்' என்ற கம்பெனியை, இருவரும் சேர்ந்து பார்த்துக் கொள்கிறோம். எங்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். மருத்துவமனையில் என்னைப் பார்க்க வந்த பலர், சகிக்க முடியாமல் அழுதும், மயக்கம் போட்டும் விழுந்தனர். என்னைச் சுற்றி, 'நெகட்டிவிட்டி' இல்லாமல் பார்த்துக் கொள்கிறேன்.அன்பு மட்டும் தான் என் ஆயுதம். சந்தோஷமாக இருங்கள்; அடுத்தவர்களையும் அப்படியே இருக்க விடுங்கள். யாரையும் காயப்படுத்தாதீர்கள். அதையும் மீறி மனது வலித்தால், ஒரு டம்ளர் தண்ணீர் குடியுங்கள்.
ஏதோ ஒன்று நடந்தால், அதை மாற்ற முடியாது. அதையே நினைத்து உடலை, உயிரை, உணர்வை, ஆன்மாவைக் கெடுக்க வேண்டாம். கீழே விழுந்தால், எழுந்திருக்கத் தெரிய வேண்டும். அதுதான் வாழ்க்கை!

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement