Advertisement

சொல்கிறார்கள்

சருமமும், கூந்தலும் பொலிவு பெற வேண்டுமா?

'டூ இன் ஒன்' அழகு குறிப்புகளை வழங்கும், அழகுக்கலை நிபுணர், ஷீபா தேவி: ஒரே பொருளை வெளிப்பூச்சுக்கும் பயன்படுத்தலாம், அதையேஉள்ளுக்கும் எடுத்துக் கொள்ளலாம். அப்படிப்பட்ட, 'டூ இன் ஒன்' சிகிச்சை தான் இவை. தினம் ஒரு சிகிச்சையாக, 10 நாட்களுக்கு பின்பற்றினால், உங்கள் சருமமும், கூந்தலும் பொலிவு பெறுவதை உணரலாம்.கடலை மாவு, தயிர் மற்றும் ஆரஞ்சுப் பழ சாறு, இவற்றை கலக்கி, 5 நிமிடம், முகத்தில், 'மசாஜ்' செய்து, 15 நிமிடம் கழித்துக் கழுவ வேண்டும்; அந்த நேரத்தில், ஒரு டம்ளர் ஆரஞ்சுச்சாறில், தேன் கலந்து குடிக்கலாம்.தயிர், புதினா இலை, தேன் கலந்து முகத்தில் தடவி, 20 நிமிடம் கழித்துக் கழுவலாம்; தயிர், பாகற்காய் ஒரு துண்டு, உப்பு ஒரு சிட்டிகை, ஒன்றரை டம்ளர் தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டி, தேன் சேர்த்து குடிக்கலாம்.கேரட் சாறு, அரிசி மாவு, எலுமிச்சையின் சாறு மூன்றையும் கலந்து, முகம் மற்றும் முழங்கையில் கறுப்பான பகுதிகளில் தடவி, 20 நிமிடம் கழித்துக் கழுவலாம்; அதேசமயம், இரண்டு கேரட்டை, அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டி, எலுமிச்சை சாறு, உப்பு, புதினா இலை, தேன் சேர்த்து குடிக்கலாம்.தேன், வெள்ளரிச்சாறு, தக்காளி, முட்டையின் வெள்ளை கரு, சர்க்கரை ஆகியவற்றை ஒன்றாக கலக்கி, முகம், கழுத்தில் தடவி, 20 நிமிடம் கழித்துக் கழுவலாம்; வெள்ளரிக்காயுடன், எலுமிச்சை சாறு, தோல் சீவிய இஞ்சி சேர்த்து, இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு அரைத்து வடிகட்டி, தேன் சேர்த்து குடிக்கலாம்.தக்காளி, முல்தானி மட்டி பவுடர் சேர்த்து குழைத்து, முகத்தில் மசாஜ் செய்து, 30 நிமிடம் கழித்து கழுவலாம்; தக்காளி, கேரட், பீட்ரூட் சேர்த்து அரைத்து, அதில், எலுமிச்சை சாறு, தேன் சேர்த்து குடிக்கலாம்.ஆப்பிள் மற்றும் வெள்ளரிக்காய் துண்டு, தயிர் சேர்த்து அரைத்து முகத்தில் பூசி, விரல்களால் வட்டமாக மேல்நோக்கி மசாஜ் செய்து கழுவலாம்; ஆப்பிளை, ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து அரைத்து, தேன், எலுமிச்சைச்சாறு சேர்த்து குடிக்கலாம்.மாதுளை சாறு, பால், பாதாம் விழுது கலந்து முகத்தில் தடவி, 15 நிமிடம் கழித்து கழுவலாம்; மாதுளை, பாதாம், பால், குங்குமப்பூ சேர்த்து அரைத்து குடிக்கலாம்.-பால், எலுமிச்சைச்சாறு, கடலை மாவு, கஸ்துாரி மஞ்சளை கலந்து, முகத்தில் தடவி, 20 நிமிடம் கழித்து கழுவலாம். எலுமிச்சை, புதினா இலை, உப்பு, சர்க்கரை சேர்த்து அரைத்து, வடிகட்டி குடிக்கலாம்.வாழைப்பழம், பேரீச்சையை அரைத்து, முகத்தில் தடவி, 20 நிமிடம் கழித்து கழுவலாம். வாழைப்பழம், பேரீச்சை, பால் சேர்த்து அரைத்து குடிக்கலாம்.பப்பாளி, கற்றாழை ஜெல், பால், சர்க்கரை கலந்து, முகத்தில் தடவி, 10 நிமிடம், 'மசாஜ்' செய்து கழுவலாம். பப்பாளி, தேன் அரைத்து குடிக்கலாம்.இவற்றில் ஏதாவது ஒன்றிரண்டைப் பின்பற்றினால், முகமும், சருமமும், கூந்தலும் பளபளக்கும்.

விழுந்தாலும்எழ தெரிய வேண்டும்!

பீனிக்ஸ் மனுஷியாக எழுந்து நின்றிருக்கும், சுனிதா அடினஸ்: அம்மா, அப்பாவுக்கு பூர்வீகம், கேரளா. நான் பிறந்து வளர்ந்தது, திருப்பூரில். மருத்துவம் படிக்க ஆசைப்பட்டேன்.
வீட்டில், வசதியின்மை, பல நிறுவனங்களில் வேலை என, என் மருத்துவக் கனவு காணாமல் போக, 'பிசியோதெரபி' சேர்ந்தேன். வேலை நேரம் போக, மீதி நேரத்தில், குறிப்பாக, குழந்தை இல்லாதவர்களுக்கான, சிறப்பு பிசியோதெரபி சிகிச்சை செய்து வந்தேன்.
கடந்த, 2011-ல், நணபர் மூவருடன், காரில், பெங்களூரில் இருந்து, கோயம்புத்துார் வந்து கொண்டிருந்தோம்.
காரை ஓட்டி வந்த நண்பர் கண் அயர, நாங்கள் வந்த கார், மூன்று முறை பல்டியடித்து, சாலை தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. என் முகம், கார் கதவுக்கு வெளியே சிக்கி, முழுவதும் சிதைந்து போனது.
மருத்துவமனையில், 65 நாட்கள் இருந்தேன். என் முகத்தை சுத்தம் செய்யவே, இரு வாரம் ஆனதாம்.
கன்னத்துக்குள் புதைந்திருந்த கருவிழியை கண்டுபிடித்து, மறுபடி பொருத்தியுள்ளனர். மேல்தாடை, கீழ்த்தாடை, பல் எல்லாம் நொறுங்கி, கழுத்துக்கு மேல் உணர்வில்லாத நிலை. சாப்பாடு, சுவாசம் எல்லாமே, 'டியூப்' வழியாகத் தான்.
உருவமில்லாத என் முகத்தை, தொட்டு பார்க்காமல் இருக்க, கைகளை கட்டி வைத்திருந்தனர். மாதக்கணக்கில் கண்ணாடியே பார்க்க விடவில்லை.
நான்கு ஆண்டுகளில், 27 அறுவை சிகிச்சை, காலில் இருந்து எலும்பு எடுத்து மேல்தாடை, இடுப்பில் இருந்து எலும்பு எடுத்து மூக்கில் வைத்துள்ளனர். எட்டு ஆண்டுகளுக்கு பிறகும், மூச்சு விட, அடிக்கடி சிரமம் வரும். கண்ணிலிருந்து கண்ணீர் வந்தபடி இருக்கும்.
என்னுடன் படித்த ஜெயப்ரகாஷ், விபத்து குறித்து அறிந்து வந்து, என்னைப் பார்த்து கண் கலங்கினார். அன்று இரவு, 2:00 மணிக்கு, 'திருமணம் செய்து கொள்ளலாமா?' என, அவரிடமிருந்து, 'புரபோசல் மெசேஜ்!'
நான் மறுக்க, பொம்மலாட்டக் கலைஞர் மற்றும் டான்சரான அவர், உறுதியான முடிவுடன் இருக்க, கொஞ்ச நாள் கழித்து திருமணம் செய்து கொண்டோம்.
'ஹெலனோ ஓ கிராடி இன்டர்நேஷனல்' என்ற கம்பெனியை, இருவரும் சேர்ந்து பார்த்துக் கொள்கிறோம்.
எங்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். மருத்துவமனையில் என்னைப் பார்க்க வந்த பலர், சகிக்க முடியாமல் அழுதும், மயக்கம் போட்டும் விழுந்தனர். என்னைச் சுற்றி, 'நெகட்டிவிட்டி' இல்லாமல் பார்த்துக் கொள்கிறேன்.
அன்பு மட்டும் தான் என் ஆயுதம். சந்தோஷமாக இருங்கள்; அடுத்தவர்களையும் அப்படியே இருக்க விடுங்கள். யாரையும் காயப்படுத்தாதீர்கள். அதையும் மீறி மனது வலித்தால், ஒரு டம்ளர் தண்ணீர் குடியுங்கள்.
ஏதோ ஒன்று நடந்தால், அதை மாற்ற முடியாது. அதையே நினைத்து உடலை, உயிரை, உணர்வை, ஆன்மாவைக் கெடுக்க வேண்டாம். கீழே விழுந்தால், எழுந்திருக்கத் தெரிய வேண்டும். அதுதான் வாழ்க்கை!

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement