Advertisement

பேச்சு, பேட்டி, அறிக்கை

'செவிடன் காதில் ஊதிய சங்காகப் போகிறது நீங்கள் சொல்வது... 'குட் மார்னிங்'குக்கு பதில், 'இனிய காலை வணக்கம்' என்று சொன்னால், 'எலுமிச்சையை தலையில் தேய்க்கணும் உனக்கு' என, கிண்டலடிக்கும் காலம் இது...' எனச் சொல்லத் தோன்றும் வகையில், வட மாநிலத்தைச் சேர்ந்தவரும், பா.ஜ., முன்னாள், எம்.பி.,யுமான தருண் விஜய் அறிக்கை: இந்திய மொழிகளில், தமிழுக்கென தனித்தன்மை உள்ளது... இதை, தேசிய அளவில் கொண்டு செல்ல வேண்டும். தமிழ் சகோதர - சகோதரியர், தங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள், பெற்றோர் உட்பட அனைத்து குடும்ப உறுப்பினர்களுடனும், தமிழிலேயே உரையாடுவோம் என, உறுதியேற்க வேண்டும். வீடுகளிலேயே தமிழுக்கு மரியாதை தரவில்லை என்றால், மற்றவர்கள் எப்படி, தமிழ் மொழியின் பெருமைக்கு மரியாதை தருவர் என, எதிர்பார்க்க முடியும்!

அ.ம.மு.க., துணை பொதுச்செயலர், தினகரன் பேட்டி: கோடநாடு விவகாரத்தில், முதல்வர் மீது குற்றம் சாட்டப்பட்டு உள்ளதால், நியாயமான விசாரணைக்கு, அவர் வழிவிட வேண்டும். இதில், நிபந்தனை ஜாமினில் உள்ள இருவரை, தமிழக போலீசார், உடனடியாக கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன? இவ்விவகாரத்தில், உயர் நீதிமன்ற மூத்த நீதிபதியின் நேரடி கண்காணிப்பில், தமிழக போலீஸ், சி.பி.ஐ., விசாரணை நடந்தால் மட்டுமே, உண்மை வெளிவரும்.

அ.தி.மு.க., அவைத் தலைவர், மதுசூதனன் பேட்டி: கோடநாடு கொலை வழக்கில், அசல் குற்றவாளி தினகரன் தான். இவர் எப்படி, முதல்வர் பழனிசாமியை, குற்றம் சாட்ட முடியும்... ஒரு விரலை நீட்டி குற்றம் சாட்டும் தினகரன், மாபியா கும்பலின் தலைவன். ஜெ.,வை சாகடித்ததும், இந்த கும்பல் தான். 'என் குடும்பத்தில் உள்ள சிலர், உங்கள் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் செயல்களில் ஈடுபடுகின்றனர்; அவர்களை ஒதுக்கி வைத்து விட்டேன்' என, ஜெ.,க்கு கடிதம் எழுதி விட்டு தான், அவரது வீட்டிற்குள், சசிகலா மீண்டும் சென்றார் என்பதை, யாரும் மறுக்க முடியாது.

காங்., செய்தி தொடர்பாளர், ஆர்.பி.என்.சிங் பேட்டி: லோக்சபா தேர்தலில், முக்கியத்துவம் வாய்ந்த, உ.பி., மாநிலத்தில், மதச்சார்பற்ற கட்சிகள் பிளவுப்பட்டு, தனித்தனியே போட்டியிட வேண்டும் என்றும், அப்போது தான், அவற்றின் ஓட்டுகள் சிதறும் என்றும், பா.ஜ., வியூகம் வகுத்திருந்தது. தற்போது, எங்களை புறக்கணித்து, கூட்டணி அமைத்ததன் மூலம், சமாஜ்வாதியும், பகுஜன் சமாஜும், பா.ஜ.,வின் அந்த வியூகத்தை நிஜமாக்கி விட்டன.

தமிழக, பா.ஜ., தலைவர், தமிழிசை பேட்டி: லோக்சபா தேர்தலில், தி.மு.க., - காங்., அணியில் அங்கம் வகிக்காத, நல்லாட்சியை விரும்பும், மோடியை பிரதமராக ஏற்றுக் கொள்ளும் எந்தக் கட்சிகளுடனும், கூட்டணி பேச்சு நடத்துவோம். எதிர்க்கட்சிகளின் பொய் பிரசாரங்களை, நல்ல திட்டங்கள் மூலம் முறியடிப்போம்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement