Advertisement

ஜல்லிக்கட்டு- தமிழர் கலாசாரத்தின் பெருமை!

ஓர் இனமக்களின் பெருமையை பறைசாற்றுவது அம்மக்களின் மொழியும், கலாசாரமும் தான்! ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய செம்மொழிகளில் தமிழ்மொழி மிகப்பழமையானது. அதைப்போல ச(ஜ)ல்லிக்கட்டும், மஞ்சு விரட்டும் தோன்றிய காலத்தை கணக்கிட இயலாது. இருப்பினும், சங்க இலக்கியங்களில் ஏறு தழுவுதல் பற்றிய பல பாடல்கள் இளைஞர்களின் வீரத்தைக் காட்டுகிறது. கலித்தொகை பாடல்களில் ஒருபகுதி ஏறு தழுவுதல் பற்றியும், காளைகளையும், பங்கெடுத்த வீரர்களையும் விவரிக்கிறது.''தொழுவினுள் புரிபு புரிபு புக்க பொதுவரைத்தெரிபு தெரிபு குத்தின ஏறு'' - கலித்தொகைகாளையை அடக்கும் கற்சிலைகள், கோயில் சிற்பங்கள் மற்றும் தொல்லியல் ஆராய்ச்சி மூலம் கிடைத்த சான்றுகளை பார்க்கும்போது காளை அடக்கும் விளையாட்டிற்கு சில ஆயிரம் ஆண்டுகள் வரலாறு உண்டு என அறியலாம்.
சங்க காலத்திலேயே ஏறு தழுவுதல்
தற்போது ஜல்லிக்கட்டு என்று சொல்வதை சங்க காலத்தில் ஏறு தழுவுதல் என்றார்கள். ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உண்டானதாக கருதப்படும் சிந்துச் சமவெளி நாகரிகத்தில் ஏறு தழுவுதல் முத்திரை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டிலும், சிந்துச் சமவெளி நாகரிகத்திலும் ஏறு தழுவுதல் இருப்பதை ஒப்பிடும் போது சிந்துச் சமவெளியில் வாழ்ந்த திராவிடர்களும், தமிழர்களும் ஒன்றே என்ற கருத்தும் எழுந்துஉள்ளது.ஏறுதழுவுதல் ஆயர் குடியிலிருந்து தான் தொடங்கியது என்பதற்கு கலித்தொகை பாடல்களே சான்று.கி.மு., மூன்றாம் நுாற்றாண்டை சேர்ந்த மன்னன் கொற்கைப்பாண்டியனின் நாணயத்தில் ஜல்லிக்கட்டுக்காளை இடம் பெற்றுள்ளது. இதன் மூலம் சங்க காலத்திலேயே தமிழர்கள் ஜல்லிக்கட்டு நடத்தினர் என்பதை அறியலாம்.போர்சுக்கல் நாட்டருகே உள்ள தெர்சீரா என்ற தீவில் காளை விரட்டு நடக்கிறது. துராத அகார்தா என்ற நிகழ்வில் ஒரு காளையை நீளமான கயிறுகளால் கட்டி இருவர் பிடித்துக் கொள்ள, சிலர் அதை சீண்டுவர். மாடு துரத்தினால் ஓடி தப்பித்துக் கொள்வார்கள்.ஸ்பெயின் நாட்டில் 'காளைச் சண்டை' பிரபலமானது. அங்கே காளையோடு 'மெட்டடோர்' சண்டையிடும் போது வாளால் காளையை வெட்டிக் கொன்றுவிடுவர். ஆனால் உலகிலேயே வெறும் கைகளால் காளைகளை அடக்குவது தமிழர்கள் தான்.மூன்றுவகைதமிழ்நாட்டில் மூன்று வகைகளில் காளைகளை அடக்கும் வீரவிளையாட்டுகள் நடைபெறுகின்றன. அவை ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, வடமாடு மஞ்சுவிரட்டாகும். வாடிவாசல் அமைத்து காளைகளை அடக்குவது ஜல்லிக்கட்டு. இதற்கு புகழ்பெற்ற ஊர்கள் மதுரை - அலங்காநல்லுார், பாலமேடு, அவனியாபுரம். பொட்டல் அல்லது பெரிய மைதானங்களில் அல்லது மஞ்சுவிரட்டு தொழுவிலிருந்து காளைகளை அவிழ்த்து விடுதல் மஞ்சுவிரட்டு. மஞ்சுவிரட்டுக்கு சிவகங்கை மாவட்டத்தில் சிறாவயல், கண்டிப்பட்டி, அரளிப்பாறை ஊர்கள் புகழ்பெற்றது. மூன்றாவது வகை, ஒரு திடலுக்குள்ளே வடம் (நீண்ட கயிறு) கட்டியுள்ள காளைகளை அடக்குவது- வடமாடு மஞ்சுவிரட்டு.காளைகளின் கொம்புகளில் சல்லிக்காசுகளை (பல ஆண்டுகளுக்கு முன்பு சல்லிக்காசுகளே பிரபலம்) கட்டி, காளைகளை அவிழ்த்து விடுவார்கள். வீரர்கள் காளைகளை அடக்கி சல்லிக்காசுகளைப் பரிசாகப் பெற்றுச் செல்வார்கள். 'சல்லிகட்டி விளையாட்டு' பின்பு சல்லிக்கட்டு என மருவியிருக்கலாம். சல்லிக்கட்டு என்பதற்கு பதில் ஜல்லிக்கட்டு என அழைக்கின்றனர். சல்லிக்கட்டு என்பதே சரியானது.மஞ்சுவிரட்டு மஞ்சு என்றால் அழகு, இளமை, வலிமை என பொருள்படும். திமில் அழகும் வலிமையும் நிறைந்த காளைகளை இளமையும் வலிமையும் கொண்ட இளைஞர்கள் அடக்குவதால் மஞ்சுவிரட்டு என பெயர் சூட்டியிருக்கிறார்கள் நம்முன்னோர்கள். மஞ்சுவிரட்டு என்ற பெயருக்கு வேறு ஒரு காரணமும் உண்டு. பல ஆண்டுகளுக்கு முன்பு கற்றாழை மஞ்சியில் (நார்) குஞ்சங்கள் செய்து அதை ஒரு சிறிய கம்பில் வடிவமைத்து காளைகளின் கழுத்தில் கட்டி விரட்டியதால், அதாவது மஞ்சிகட்டி விரட்டியதால் 'மஞ்சிவிரட்டு' என்றும் பிற்காலத்தில் 'மஞ்சுவிரட்டு' என்றும் மருவியிருக்கலாம். காளைகளின் கொம்புகளில் மங்களகரமான துணியில் சல்லிக்காசுகளைக் கட்டி விரட்டியதால் மஞ்சுவிரட்டு என்றும் சில தமிழறிஞர்கள் பெயர்க்காரணம் கூறுகின்றனர்.மஞ்சுவிரட்டு காளைகள் மூன்று வகைகளாக மைதானத்தில் பாயும் அல்லது ஓடும். முதல்வகை மிகவும் ஆபத்தானவை. நெற்றிப்பிறையோடு கழுத்தில் மணிகள் அடங்கிய மாலை மற்றும் துண்டுகளோடு அவிழ்த்துவிடப்படும். நெற்றிப்பிறை என்பது வெள்ளியில் செய்யப்பட்ட சங்கிலி, காளைகளின் கொம்புக்கடியில் (நெற்றியில்) அணிவிக்கப்படும். பிறை வடிவம் போல் அச்சங்கிலி காளைகளின் நெற்றியில் இருப்பதால் நெற்றிப்பிறை எனப்பெயர் வந்தது. நெற்றிப்பிறை அணிந்த காளைகள் சீறிப்பாய்ந்து பிடிப்போரைப் பந்தாடிவிடும்.இரண்டாவது வகை, நெற்றிப்பிறை இல்லாமல் மணிமாலை மற்றும் துண்டுகளோடு அவிழ்த்துவிடப்படும். இவ்வகை காளைகளும் சீறிப்பாயும், தனது கூரிய கொம்புகளால் அடக்கவருவோரை பதம்பார்த்து விடும். மாடுபிடி வீரர்கள் காளைகளை அடக்கியபின் நெற்றிப்பிறை மற்றும் மணி மாலைகளை கழற்றி வைத்துக்கொள்வார்கள். பின்னர் காளையின் உரிமையாளர்கள் பணம் (பரிசு) கொடுத்து அவைகளைத் திரும்பப் பெற்றுக் கொள்வார்கள். தற்போது மஞ்சுவிரட்டுகளில் நெற்றிப்பிறை அணிந்த காளைகளை காண்பது அரிதுதான் என்றாலும் மணி மாலை அணிந்த காளைகளை காணலாம்.மூன்றாவது வகை, காளைகளின் கழுத்தின் வெறும் துண்டுகள் மட்டுமே கட்டப்பட்டிருக்கும். இக்காளைகளில் பல ஆபத்தானவைகளாக இருக்காது. பெரும்பாலும் தொழுவத்திலிருந்து அவிழ்த்துவிடப்படும். தொழுவத்தில் காளைகளுக்கு மஞ்சுவிரட்டுக்குழு அல்லது ஊரார் சார்பாக துண்டுகள், வேட்டிகள் வழங்கப்படும். தொடக்கத்தில் மனிதனின் உடை கோவணமே. ஒரு முழம் துண்டு தான். வீரத்தை வெளிக்காட்டும் இளைஞர்களுக்கு மானம் காக்கும் உடையான ஒரு முழம் துண்டுதான் மிகச்சிறப்பான பரிசாக இருக்கும் என்பதால் மஞ்சுவிரட்டில் துண்டுகள் வழங்குவது கடைபிடிக்கப்பட்டது. ஜல்லிக்கட்டில் காளைகளை தனி ஒரு வீரராக அடக்கி பரிசு பெறுவர். ஆனால் மஞ்சுவிரட்டில் தனிவீரர் அல்லது குழுவாக இணைந்தோ காளைகளை அடக்குவார்கள்.வடமாடு மஞ்சுவிரட்டுவடமாடு மஞ்சுவிரட்டில் குழுவாகவே இணைந்து காளையை அடக்குவார்கள். குழுவிற்கு ஒன்பது அல்லது ஏழு மாடுபிடி வீரர்கள் களத்தில் இறங்குவர். முக்கால் அல்லது அரை மணி என்று காளையை அடக்க வடமாடு மஞ்சுவிரட்டுக்குழு சார்பாக நேரம் நிர்ணயிக்கப்படும். அந்த நேரத்திற்குள் காளையை அடக்கினால் வீரர் குழு, இயலாவிட்டால் காளைக்கும் பரிசு வழங்கப்படும்.தமிழர் கலாசாரத்தின் பெருமையாம் ஜல்லிக்கட்டினை காப்பது ஒவ்வொரு தமிழனின் தலையாய கடமை.-பேராசிரியர் ச.மரியரத்தினம்ஆறுமுகம் பிள்ளை சீதையம்மாள் கல்லுாரி திருப்பத்துார்95850 53476

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

    மேலும் செய்திகள் :

Advertisement