Advertisement

இடதுசாரிகள் மண்ணை கவ்வ போவது உறுதி!

முனைவர் மீனாட்சி பட்டாபிராமன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு பின், சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் நுழைய முற்படும் பெண்களின் பட்டியலை பார்த்தால், அவர்களில் யாரும் உண்மையான பக்தியுடன் வந்ததாக தெரியவில்லை. மீடியாக்களுக்கு அவர்கள் அளிக்கும் பேட்டிகளை பார்த்தால், அது புரியும். காவல் துறை உதவியுடன், 50 வயதுக்குட்பட்ட பெண்கள் இருவர், சன்னிதானம் வரை சென்று, வரலாற்று சாதனை படைத்து விட்டனர். பக்தியை பகல் வேஷமாய் ஆக்கி விட்ட கேரள அரசும், திரை மறைவில் இருந்து, மேலும் பெண்களை சன்னிதானத்திற்குள் அனுமதிக்க முனைப்பு காட்டுகிறது. நாட்டில், இடதுசாரிகள் ஆளும் ஒரே மாநிலம், கேரளா. அதுவும், இனி இருக்காது என்பதை, அம்மாநில முதல்வர், பினராயி விஜயன் மறைமுகமாக அறிவிக்கிறார் போலும்.சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு என, ஆகம விதிகள் உள்ளன. அதை தகர்த்தெறிய, கேரள அரசு முழுவீச்சுடன் இறங்கியுள்ளது. 'சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம்' என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பு, தெய்வ பக்தி இல்லாதவர்களுக்கு கூட பக்தியை வரவழைத்து விட்டது. 'கடவுளே கிடையாது; கடவுளை வணங்குபவன் முட்டாள்' என்றெல்லாம் முழக்கமிடும், தி.க., போன்ற கட்சிகள், கேரள அரசை வாழ்த்துகின்றன. 'சபரிமலைக்கு, அனைத்து வயது பெண்களும் செல்வதால் என்ன தப்பு?' எனவும், கேட்கின்றன. கடவுளை இல்லை என்போருக்கு, யார் போனால் என்ன, போகாவிட்டால் என்ன? ஹிந்துக்கள் என்றால், இளிச்சவாயர்கள் என, எல்லாரும் நினைத்து விட்டனர் போலும். மற்ற மதங்களின் உரிமைகளில் தலையிடாத, கேரள அரசு, ஹிந்துக்களின் புனித இடமான, சபரிமலை விவகாரத்தில், அரசியல் சதுரங்கத்தை விளையாடுகிறது! வரும், 2019 லோக்சபா தேர்தல், அடுத்து கேரளாவில் நடக்கவுள்ள சட்டசபை தேர்தலில், அதற்கான விலையை இடதுசாரிகள் சந்திக்கும். இனி எந்த தேர்தல் நடந்தாலும், கம்யூனிஸ்ட்டுகள் மண்ணை கவ்வ போவது உறுதி!
நாகரிகத்துடன் பேச கற்று கொள்ளுங்கள் ஸ்டாலின்!
எஸ்.ராதாகிருஷ்ணன், திருப்பூரிலிருந்து எழுதுகிறார்: அன்று, மதுரையில் காங்கிரசார் நடத்திய ஊர்வலத்தில், அப்போதைய, காங்கிரஸ் தலைவர் இந்திரா மீது, தி.மு.க.,வினர் வீசினர். அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டு, உடல் முழுக்க ரத்தம் வடிந்தது. அந்த சம்பவத்தை, அப்போதைய, தி.மு.க., தலைவர் கருணாநிதி, 'இது கற்கள் வீசப்பட்டு வந்த ரத்தமா, வேறு காரணத்தால் வந்த ரத்தமா' என ஏளனமாக பேசினார். 'அந்த பரம்பரையில் வந்தவன் தான் நான்' என நிரூபிக்கும் வகையில், தி.மு.க.,வின் தற்போதைய தலைவர், ஸ்டாலினும் பேசி வருகிறார். அவரது தந்தை கருணாநிதி சிலை திறப்பு விழாவில், சோனியாவையும், ராகுலையும் மேடையில் வைத்து, பிரதமர் மோடியை, 'அவர் ஒரு சாடிஸ்ட்' என, கீழ்த்தரமாக, ஸ்டாலின் பேசியுள்ளார். மோடியை பற்றி கொஞ்சமாவது தெரிந்து தான், அவர் பேசினாரா என தெரியவில்லை.குஜராத்தின் முதல்வராக, ௨௦௦௧ அக்.,௭ல் தேர்ந்தெடுக்கப்பட்ட உடன், தன் தாயை சந்தித்து ஆசி பெற்றார், மோடி. அப்போது, 'மகனே... ஒரு போதும் லஞ்சம் வாங்காதே...' எனக் கூறினார், அவரது தாய். அவரது சொல்லை மந்திரமாக ஏற்று, நிர்வாகத்தை மிக நேர்த்தியாக செயல்படுத்தி, குஜராத் மாநிலத்தை, மிகவும் முன்னேறிய மாநிலமாகவும் மாற்றிக் காட்டினார். தன் உறவுகளுக்கோ, நண்பர்களுக்கோ எந்த பதவியும் கொடுக்கவில்லை. தன் நிர்வாகத்தில் தலையிட, எப்போதும் அவர் யாரையும் அனுமதிக்கவில்லை. முதல்வராக இருந்த போதும் சரி, பிரதமராக இருக்கும் போதும் சரி, அவர் மீது, ஊழல் மற்றும் லஞ்சம் குறித்து, சிறு துளி அளவு கூட புகார் இல்லை. அவர் பிரதமரான பின், வெளிநாடுகளில், இந்தியாவின் மதிப்பு பல மடங்கு உயர்ந்துள்ளது. ராணுவம் மற்றும் தொழில் துறைக்கு தேவையான பொருட்களை, இறக்குமதி செய்த காலம் போய், அவற்றை, உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யும் அளவிற்கு, நாட்டை உயர்த்தி, சாதித்து காட்டியுள்ளார். மோடி, ரூபாய் நோட்டை மட்டும் மாற்றவில்லை; நாட்டின் கவுரவத்தையே உயர்த்தி காட்டியுள்ளார். மிஸ்டர் ஸ்டாலின்... உங்கள் தந்தை போன்று பேசி, நீங்களும் உங்களை தரம் தாழ்த்திக் கொள்ளாதீர். இனியாவது பண்புடனும், நாகரிகத்துடனும் பேசக் கற்றுக் கொள்ளுங்கள்!
இடைநிலை ஆசிரியர்கள் முன் உதாரணம்!
வி.எஸ்.ராமு, செம்பட்டி, திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: தங்கள் ஊதிய முரண்பாட்டை களையக் கோரி, இடைநிலை ஆசிரியர்கள், பள்ளி விடுமுறை நாளில் போராட்டத்தை துவக்கினர்; இது வரவேற்கத்தக்கது. சென்னையில் நடந்த ஆசிரியர்களின் போராட்ட களத்திற்கு, தி.மு.க., தலைவர், ஸ்டாலின் உள்ளிட்ட, பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் நேரில் ஆதரவு தெரிவித்துள்ளனர். அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான பாதிப்புக்கள், தி.மு.க., - அ.தி.மு.க., என திராவிட கட்சிகளின் ஆட்சியில், தொடர்ந்தபடி தான் இருக்கிறது. எதிர்க்கட்சியாக இருக்கும் போது ஒரு மாதிரியான பேச்சும், ஆளும் கட்சியான பின், வேறுநிலைப்பாடான பேச்சும், அ.தி.மு.க.,விடம் உள்ளது. இதை, அரசு பணியாளர்கள், ஆசிரியர்கள் நன்கு அறிவர். 'பள்ளி திறப்பு, மாணவர்கள் கல்வி பாதிக்கக் கூடாது' என்பதை முன்னிறுத்தி, இடை நிலை ஆசிரியர்கள் போராடுவதால், மற்ற ஆசிரிய சங்கங்கள் செம கடுப்பில் உள்ளன. சங்கங்களுடன் இணைந்துக் கொள்ளாமல், தனியாக போராட்ட களம் கண்டுள்ள, இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம், மற்றவர்களுக்கு முன்உதாரணமாக உள்ளது. மாநிலத்தில் அதிக எண்ணிக்கையில் இடைநிலை ஆசிரியர்கள் உள்ளனர். அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றாமல், அரசு காலம் கடத்துவது, அதிருப்தி அளிக்கிறது. மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையிலும், தங்களின் உடல்களை வருத்தியும், குடும்பத்தினருடன் போராடும் அவர்களது உரிமை குரல் ஏற்கத்தக்கது. நியாயமாக போராடும், இடைநிலை ஆசிரியர்களின் குறைகளை, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அருள் கூர்ந்து கவனிக்க வேண்டும்!

ஹிந்து ஆலய சொத்துக்களை மீட்பது யார்?
தி.சேஷாத்ரி, சென்னையிலிருந்து எழுதுகிறார்: 'தமிழகத்தில், ஹிந்து அறநிலையத் துறைக்கு பாத்தியப்பட்ட, 500 ஆயிரம் ஏக்கர் நிலங்களை காணவில்லை' என, மத்திய கப்பல் மற்றும் போக்குவரத்து துறையின் இணை அமைச்சர், பொன் ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.எல்லா ஹிந்து கோவிலிலும், மக்கள் பார்வையில் படும்படி, அறிவிப்பு பலகை வைக்கும்படி, அறநிலையத்துறையின் ஆணையர் சுற்றறிக்கை விடுத்தார். அதில், கோவிலுக்கு பாத்தியப்பட்ட நஞ்செய், புஞ்செய் நிலங்கள், தென்னை நிலங்கள், எந்த ஊரில் உள்ளன; நிலம் குத்தகைக்கு எடுத்துள்ளோர் பெயர், குத்தகை பாக்கி, கோவில் இடங்களில் உள்ள கடைகள் போன்றவை இடம் பெற வேண்டும் என, கூறப்பட்டிருந்தது. இன்று வரை, கோவில்களில் அதற்கான நடவடிக்கையே இல்லை. ஹிந்து அறநிலையத் துறையில், விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில், ஊழியர்கள் நேர்மையானவர்களாக உள்ளனர். பெரும்பாலான ஊழியர்கள், முறைகேடுகளில் நேரடியாக அல்லது மறைமுகமாக ஈடுபட்டு வருகின்றனர். கடந்த, 15 ஆண்டுகளில் அறநிலையத் துறையில், சாதாரண ஊழியர், இணை ஆணையர் வரை பதவி உயர்வு பெற்று உள்ளார்; அதுவெல்லாம் எப்படி சாத்தியம்? சினிமா படம் எடுக்கும் அளவிற்கு, அறநிலைய ஊழியருக்கு அரசு சம்பளம் தருகிறதா என்ற கேள்வியும் எழுகிறது. ஒருசில அறநிலைய ஊழியர்கள், சினிமா படம் எடுத்துள்ளனர் என்ற செய்தியும் வந்துள்ளது. அப்படியானால் அவர்களுக்கு, அவ்வளவு பணம் எங்கிருந்து கிடைத்தது? துாத்துக்குடி மாவட்டம், உடன்குடியில், கண்டு கொண்ட விநாயகர் கோவில், தெப்பக்குளத்தையே காணவில்லையாம்; அதை கண்டுபிடிக்க கோரி, ஒரு சமுதாய அமைப்பினர் போராடினார். ஆனால், இதுவரை பலன் இல்லை. அந்த தெப்பக் குளத்தை ஆக்கிரமித்து, மருத்துவ மனையை கட்டி விட்டனராம்! ஹிந்து அறநிலையத்துறையின் விபரங் களை, தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்டால், சரியான விளக்கம் தரப்படுவதில்லை. பல கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் அபகரிக்கப்பட்டுள்ளன; சிலைகள் திருடு போயுள்ளன. அவற்றை விசாரிக்க புறப்பட்ட, சிறப்பு அதிகாரி, பொன் மாணிக்கவேலுக்கு பல இடையூறுகள் தரப்படுகின்றன. ஹிந்து அறநிலையத் துறையில் படிந்துள்ள, முறைகேடு களை வெளிக் கொணர, அரசுக்கு சரியான சவுக்கடியை, நீதிமன்றங்கள் தர வேண்டும்!

அரசியலுக்கு நல்லவர்கள் வர வேண்டும்!
டி.நாச்சிமுத்து, திருப்பூர் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: நாட்டில், நீதி, நேர்மை, உண்மை செத்து போனதால், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள், அதிகாரிகள் மீது, 4,800க்கும் மேற்பட்ட, குற்ற பின்னணி வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவற்றை விசாரிப்பதற்கென, சிறப்பு தனி நீதிமன்றங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. இது தான், நாடு சுதந்திரம் அடைந்ததன் மூலம் கிடைத்த பலன்!இதில், குற்ற வழக்குகள் அதிகமான மாநில பட்டியலில், தமிழகம் மூன்றாம் இடம் பிடித்துள்ளது. அரசியலுக்கு வருவோரிடம், பொதுத் தொண்டு என்ற எண்ணம் வர வேண்டும். அதுவெல்லாம், 1967க்கு பின் மாறி விட்டது. அரசியலுக்கு வருவோர் எல்லாம், கோடிகளை குவித்து, தங்கள் சந்ததியினருக்கு சுகபோக வாழ்வளிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்து விட்டது.பொது வாழ்வுக்கு வருவோர், முன்னாள் முதல்வர்கள், காமராஜர், பக்தவத்சலம், அண்ணாதுரை போன்று, எளிமையாகவும், நேர்மையாகவும் இருக்க வேண்டும். நிர்வாகப் பணியில், சகாயம், ஐ.ஏ.எஸ்., - ஐ.ஜி., பொன் மாணிக்கவேல் போல் நேர்மையும், ஒழுக்கமும் கொண்டு, கபடமற்ற நல்லவர்களாக இருக்க வேண்டும். இன்று சினிமாவில் வாய்ப்பு இல்லாத நடிகர் -நடிகையர் எல்லாம், 'கல்லா' கட்ட அரசியலுக்கு வருகின்றனர். இவ்வளவு காலம், அரசியல் பக்கமே எட்டிப் பார்க்காத நடிகர் கமல், தமிழகத்தையும், தமிழர்களையும் காப்பாற்றப் போவதாக கூறி, அரசியல் கட்சி துவக்கி, களம் இறங்கியுள்ளார். ஏற்கனவே, கட்சி துவக்கிய, இயக்குனர்கள், பாக்யராஜ், டி.ராஜேந்தர் போன்றோர், அடையாளம் தெரியாமல் போய் விட்டனர்.ஜாதி, மதம் சார்ந்து சில கட்சிகள் உருவாக்கப்பட்டு, திராவிட கட்சிகளின் முதுகில் ஏறி, சிலர் சவாரி செய்கின்றனர். அரசியலை வியாபாரமாக்கிய பெருமை, முன்னாள் முதல்வர் கருணாநிதியை சாரும். குடும்ப அரசியலில், நாட்டிற்கே வழிகாட்டியாக, அவர் இருந்தார். அரசியலில், ஊழல், லஞ்சம் களைய வேண்டுமானால், நல்லோர் எல்லாம் அரசியலுக்கு வர வேண்டும். அவர்களை ஏற்றுக் கொள்ளக் கூடிய மனப்பக்குவம், மக்களுக்கும் ஏற்பட வேண்டும்.இந்த மாற்றங்கள் ஏற்படாவிடில், தமிழகத்தை ஒரு போதும், யாராலும் காப்பாற்றவே முடியாது!

பள்ளி சத்துணவு வினியோகத்தில் மாற்றம் தேவை!
வி.எஸ்.ராமு, திண்டுக்கல்லிலிருந்து எழுதுகிறார்: அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், 1 முதல், ௮ம் வகுப்பு வரை, மாணவ - மாணவியருக்கு மதிய உணவு அளிக்கப்படுகிறது. இதில், ஏராளமான முறைகேடு, நிர்வாக குறைபாடுகள் நிலவுகின்றன. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சத்துணவு பணியாளர்கள் அடிக்கடி போராட்டம் நடத்துகின்றனர். இது, சத்துணவு வினியோகத்தை பாதிக்கிறது. சத்துணவிற்காக வழங்கப்படும் முட்டை, காய்கறி, மளிகை சாமான்களின் தரம் குறித்து, சந்தேகமும் எழுகிறது. இவற்றை களைய, அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. விருப்பம் உள்ள மாணவர்களுக்கு மட்டுமே, சத்துணவு வழங்க, பள்ளி நிர்வாகங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும். முட்டை விரும்பாதோருக்கு, வாழைப்பழம், சிறுதானிய தின்பண்டம், உலர் பழங்கள் வழங்கலாம். வாரம், ஐந்து நாட்கள் முட்டை என்பதை மாற்றி, இரண்டு நாட்கள் வழங்கலாம். மற்ற நாட்களில், காலை, ௧௧:௦௦ மணிக்கு, ஆவின் பால் தரலாம். ஒவ்வொரு ஒன்றியத்துக்கும், குறைந்தது இரண்டு இடங்களில் நவீன சமையல் கூடம் அமைத்து, அதில், தேர்ந்த சமையல் கலைஞர், ஊட்டச்சத்து நிபுணர், உணவு தரக்கட்டுப்பாடு அலுவலர், நியமனம் செய்ய வேண்டும்.வாகனம் மூலம், பள்ளிகளுக்கு சூடாக உணவை வினியோகம் செய்ய, சோதனை முயற்சியில், அரசு இறங்கலாம். சத்துணவு திட்ட உபரிப் பணியாளர்களுக்கு, அந்த ஒன்றியங்களில் உள்ளாட்சித் துறை உட்பட, சில துறைகளில் பணி நியமனம் செய்தால், மிகவும் நல்லது.மதிய உணவை விரும்பும், மாணவர்களின் பட்டியலை புதிதாக தயாரிக்க வேண்டும். விருப்பமின்றி கட்டாயத்தில் உணவு, முட்டையை வாங்கி, வீணாக்கி வருவதை பல இடங்களில் பார்க்க முடிகிறது; அதை தடுத்தே ஆக வேண்டும். தினமும், அரிசியில் தயாரிக்கப்பட்ட உணவு என்பதை தாண்டி, சிறுதானிய உணவுக்கு முக்கியத்துவம் தர வேண்டும். சத்துணவு திட்டம், வெறும் சடங்கு போல் நடப்பதால், அரசு பணம் வீணாகிறது. சத்துணவு விஷயத்தில் மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தி, தமிழக அரசு பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்த வேண்டிய தருணம் வந்து விட்டது!

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (10)

 • SENTHIL NATHAN - DELHI,இந்தியா

  ஆசிரியர்கள் போராட்டம் நியாயமானதா ?? நம் குழந்தை படிக்கும் பள்ளியின் ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினால் இப்படி தான் சொல்வோமா ?? இந்த பாவப்பட்ட ஆசிரியர்களுக்கு வேறு பள்ளிகளில் அதிக சம்பளம் கிடைத்தால் அங்கே செல்லலாமே ??

 • karutthu - nainital,இந்தியா

  பினராயி விஜயன் ?

 • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

  'சிவன் soththu kulanaasam ' ponra madisanchip pazhamozhikalellaam yaarukku vendum? Mudinthaal kovilaiye part part aakap piriththu thankal maalikaikalukku vaasal padiyaakavo, thoonklaakavo kooda amaiththukkollath thayaar Theyvankalellaam 'kaiyaru nilaikku' poy veku kaalam aakivittathu

 • Darmavan - Chennai,இந்தியா

  ஒவ்வொரு கருத்தையும் தனி தனியாக தலைப்பை கோட்டை எழுத்தில் போடுங்கள்.எல்லாம் ஒரே பாராவில் இருப்பது சரியில்லை.

 • Bhaskaran - Chennai,இந்தியா

  போராடுவதில் இடைநிலை ஆசிரியர்களுக்கு இருக்கும் ஆர்வமும் வெறியும் கிராமப்புறப்பள்ளிகளில் மாணவர்களுக்கு பாடம் கற்பிப்பதில் இருந்தால் மாணவர் சேர்க்கையின்றி பலப்பள்ளிகள் மூடும் நிலைக்கு வந்திருக்காதே ஐயா ஊதியபாகுபாடு கூடாதுதான் ஆனால் பணியில் சேரும்போதே இம்மாதிரி பாகுபாடு இருக்கும் என்று தெரிந்ததுதானே சேர்கின்றனர்

 • Bhaskaran - Chennai,இந்தியா

  கோவில் நிலங்களை ஆட்டையைப் போடுவதில் இருக்கழகத்தினரும் ஒன்றுசேர்ந்து கொள்கின்றனர் இன்றுகூட வந்த செய்தியில் கோவில் நிலத்தை ஆட்டையைப் போட்டு கட்டிடம் கட்டியதை எதிர்த்தவர்களை இருகட்சியினரும் சேர்ந்து தாக்கியுள்ளார்கள் என்று படித்தேன் அதேபோல் மணப்பாறையில் கோவில் குளத்தில் ரேஷன் கடை கட்டியுள்ளனர் ஆனால் சிவன்சொத்து குலநாசம் என்பதை மறந்து இவர்கள்செய்கிறார்களோ

 • venkat Iyer - nagai,இந்தியா

  முனைவர் மீனாட்சி பட்டாபிராமன் சபரிமலை குறித்து கருத்துக்களை ஆதங்கத்துடன் தெரிவித்து இருந்தார்.இன்று பெண்கள்,பொதுவாகவே,ஆண்கள் செல்வது போல எங்காவது விரதம் இருந்து கோயிலுக்கு செல்ல வேண்டும் என்று மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர்.டெல்டா மாவட்டங்களில் பல இடங்களில் சக்தி பீடம் என்று அமைத்து சமயபுரம் மற்றும் மேல்மருவத்தூர் போன்ற கோயில்களுக்கு சென்றுவிட்டு மேலும் பல இடங்களுக்கு சுற்றிவிட்டு வருகின்றன.இது அவர்களுக்கு மன நிம்மதியை அளிக்கின்றன.இதனால் வீட்டில் உள்ள ஆம்பிளைகள் 48-நாட்களுக்கு மது அருந்தாமலும்,சண்டை போடாமலும்,மனத்தில் அவர்களும் கட்டுப்பாட்டை உருவாக்கி நடந்து கொள்கின்றார்கள். புலால் உணவும் சாப்பிடுவதும் ஒரு மண்டலத்துக்கு தவிர்ப்பதன் மூலம் ஒரு புதிய உணர்வு ஏற்படுவதாக கூறுகின்றன. பல பெண்கள் சபரிமலைக்கு போக வேண்டும் என்று விரும்புவது அந்த புதிய அனுபவத்தினை காடு மலைகள் கடந்து பார்க்க வேண்டும் என்பது தான்.மகர ஜோதியினை தொலைகாட்சியில் பல முறை பார்த்த நிலையில் அதனை நேரில் பார்க்க வேண்டும் என்று உருவாகி விரதம் இருந்தவர்கள்தான் மிகுந்து காண்கின்றன.சபரிமலைக்கு செல்பவர்கள் தமிழ் நாட்டில் ஏழு பேருக்கு ஒருவர் என்ற நிலை மாறி ஆறு பேருக்கு ஒருவர் என்ற நிலைக்கு வந்த போதுதான் பிரச்சனை உருவாகி உள்ளது. பிரனாய் விஜயன் அவற்றின் க்ருஷ்ணன் முற்று புள்ளி வைக்க முயற்சிகளை எடுப்பது,அவர் தனக்கு தானே தலையில் மண்ணை வாரி தலையில் போடுவதாக அமையும்.

 • Bhaskaran - Chennai,இந்தியா

  தன் மாமியாரை பற்றி அவ்வளவு கேவலமாக விமர்சனம்செய்தவர் என்று தெரிந்தும் அவருடன் தேர்தல் கூட்டணிவைத்து கொண்ட சோனியாவுக்கு இந்திய குடும்பத்தின் உறவுமரியாதை பற்றி மதிப்பு அவ்வளவுதான் வைத்திருந்தார் போலிருக்கு

 • Bhaskaran - Chennai,இந்தியா

  திமுக வென்றவுடன் அண்ணாதுரையை வாழ்த்துச்சென்ற கழக பிரமுகர்களிடம் அண்ணா சொன்னதாவது மக்களுக்கு உழைத்த காமராசரையே மக்கள் தோற்கடித்து விட்டனர் நாம் ஊழலற்ற நிர்வாகம் தரவில்லையென்றால் நம்மையும் தூக்கியெறிந்து விடுவார்கள் என்றாராம் ஆனால் மக்கள் அதன்பின் சிந்திக்கும் திறனை இழந்துவிட்டார்களோ என்று என்ன தோன்றுகிறது யார் ஆண்டாலென்ன நமக்கு இலவசமாக ஏதேனும் கிடைக்கிறதா ஒரு வாக்குக்கு ஐந்தாயிரம் தருவார்களா என்ற எண்ணம் வளர்ந்து விட்டது போல் தெரிகிறது

 • Bhaskaran - Chennai,இந்தியா

  ஒவ்வொரு ஒன்றியத்துக்கு இரண்டு இடங்களில் சமைத்து அனைத்துப் பள்ளிகளுக்கும் கொண்டுபோய் சத்துணவு வழங்கலாம் மிகவும் அருமையான யோசனை தான் ஆனால் உடனே கொடிபிடித்து கலாட்டா செய்துஅந்த யோசனையை முளையிலேயே கிள்ளியெறிய வைத்துவிடுவார்கள் அங்கு பணிபுரிவோர் முன்பு கேர் திட்டம் அமலில் இருக்கும்போது மதியஉணவில் பால் தருவார்கள் மாணவர்களுக்கு ஆரோக்கியம் வளர்வதற்கு ,அதெல்லாம் இப்போது நின்று போய்விட்டது

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement