Advertisement

பூச்சிக்கொல்லிக்கு மாற்றுவழி!

பூச்சிக்கொல்லி செலவை குறைக்க வழி கூறும், தமிழக வேளாண் துறையின், உதவி வேளாண்மை இயக்குனரும், பூச்சியியல் வல்லுனருமான, நீ.செல்வம்: பயிரைத் தாக்கும் தீமை செய்யும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த, நன்மை செய்யும் பூச்சிகள், நம் வயலில் இருக்க வேண்டும். வயலைச் சுற்றிலும், ஊடு பயிராக தட்டைப்பயறு விதைக்க வேண்டும். வளர்ந்த தட்டைச் செடிகளில், அசுவினிப் பூச்சிகள் வரும். அதை சாப்பிட, நன்மை செய்யும் பூச்சிகள் வந்து, தட்டைச்செடிகளில் குடிபுகுந்துவிடும். ஊடு பயிரான தட்டையில், வயலில் போதுமான உணவு கிடைத்து விடுவதால், பிரதான பயிர் சேதாரம் இல்லாமல் விளைச்சலை கொடுக்கும்.அதேபோல், வயலைச் சுற்றிலும், 8 அடி இடைவெளியில், ஆமணக்கு விதைகளை நடவு செய்யலாம். செடிகள் வளர்ந்து நிற்கும் பருவத்தில், அதன் இலைகளை நன்றாக கசக்கி விட்டால், ஒருவிதமான வாடை வீசும். அந்த வாடை, பூச்சிகளுக்குப் பிடிக்காது என்பதால், பூச்சிகள் வராது.குறிப்பாக, பருத்தி வயலில் இருக்கும், 200 வகைப் பூச்சிகளில், 40 பூச்சிகளே, பயிருக்கு எதிரி. மற்றவை எதிரிப் பூச்சிகளைச் சாப்பிட வந்துள்ள நட்பு பூச்சிகள். எனவே, பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்துவதை தவிர்த்து, வேம்பு, புங்கன், நொச்சி, எருக்கு, கடற்பாலை போன்ற காட்டுச் செடிகளின் இலைகளைப் பறித்து இடித்து, தாவர பூச்சிவிரட்டி தயாரித்து பயிர்களுக்கு தெளிக்கலாம். வேப்பம் கொட்டையுடன், வெள்ளைப்பூண்டு மற்றும் கட்டைப் புகையிலை சேர்த்து கரைசல் தயாரித்து தெளித்தால், சாறு உறிஞ்சும் பூச்சிகளை கட்டுப்படுத்தலாம். பூச்சித்தாக்குதலுக்கு முன்பாகவே, பூச்சிவிரட்டியைத் தெளிக்கலாம். அதாவது, வேப்பங்கொட்டை 5 கிலோ, வெள்ளைப்பூண்டு, அரை கிலோ எடுத்து, அம்மியில் அரைத்து, வெள்ளைத் துணியில் கட்டி, 10 லி., நாட்டு மாட்டுக் கோமியத்தில், ஒருநாள் ஊறவைக்க வேண்டும். பின், வடிகட்டி, 100 கிராம் காதிசோப்பைக் கரைத்து, 90 லி., தண்ணீரில் கலந்து, பயிர் மற்றும் கவாத்து செய்த பின் வரும் ளிர் மீதும் தெளிக்கலாம். பூச்சித் தாக்குதல் ஆரம்பித்து விட்டால், மாற்று தயாரிப்பைப் பயன்படுத்த வேண்டும். காம்பு கிள்ளிய பச்சை மிளகாய், 3 கிலோவை அரைத்து, தண்ணீரிலும், வெள்ளைப் பூண்டு, கால் கிலோவை அரைத்து, 100 மி.லி., மண்ணெண்ணெயிலும் கலந்து ஊறவைக்க வேண்டும்.இந்த இரண்டு ஊறல்களையும், 10 லி., தண்ணீரில் கலக்க வேண்டும். இதில், அரை லிட்டர் எடுத்து, 10 லிட்டர் தண்ணீரில் கலந்து, பயிர்களுக்கு தெளிக்க வேண்டும். வேப்பங்கொட்டையின் கசப்புத் தன்மைக்கும், பச்சை மிளகாயின் காரத்துக்கும் புழுக்கள், இலைப்பேன், தண்டுத் துளைப்பான் கட்டுப்படும்.
கவனமாகவே ரத்தம் பெறுகிறோம்!
ரத்த தானம் தொடர்பாக கூறும், அரசு ரத்த வங்கி முன்னாள் அதிகாரியும், தமிழ்நாடு, 'எய்ட்ஸ்' கட்டுப்பாட்டு சங்கத்தின் முன்னாள் இணை இயக்குனருமான, டாக்டர் செல்வராஜ்: இந்தியாவிலேயே தமிழகம் தான், ரத்த தானம் செய்வதில் முன்மாதிரி மாநிலமாக விளங்கி வருகிறது. விருதுநகர் மாவட்டம், சாத்துார் அரசு மருத்துவமனையில், கர்ப்பிணிக்கு, 'எய்ட்ஸ்' ரத்தம் ஏற்றிய சம்பவம் போல், ஓரிடத்தில் நடந்த தவறுக்கு, எல்லா இடத்திலும் இப்படித்தான் நடக்கும் என, அச்சப்பட வேண்டாம். ரத்த தானம் கொடுப்பவர்கள், தங்களுக்கு என்ன மாதிரியான நோய் இருக்கிறது, தவறான பழக்க வழக்கம் இருக்கின்றனவா என, 60 கேள்விகள் அடங்கிய விண்ணப்பத்தை, பூர்த்தி செய்ய வேண்டும். யாரெல்லாம் ரத்த தானம் செய்யலாம், செய்யக் கூடாது என்ற விபரக் குறிப்புகள் உள்ளன; அதையும் படிக்க வேண்டும். ரத்த தானம் கொடுப்பவரின், 'ஹீமோகுளோபின்' அளவை பரிசோதனை செய்து, 12.5 அளவுக்கு இருந்தால் தான், ரத்தம் எடுக்க முடிவு செய்யப்படும். ரத்த தானம் கொடுப்போர், 'டிக்' அடிக்காமல் விட்ட கேள்விகளை கேட்டு, 'டிக்' அடிக்க சொல்வார், ரத்த வங்கியிலுள்ள, ஐ.சி.டி.சி., நம்பிக்கை மைய ஆலோசகர்.அதன்பின், தனியறையில் அழைத்து, பலருடன் உறவு கொள்ளும் பழக்கம் இருக்கிறதா; போதை ஊசி போடுபவரா எனக் கேட்டு, உறுதி செய்த பின் தான், ரத்த வங்கி மருத்துவ அதிகாரியிடம் அனுப்பி வைப்பார். ரத்த தானம் செய்பவரின் ரத்த அழுத்தம், நாடித் துடிப்பு, மூச்சிரைப்பு உள்ளிட்ட பரிசோதனைகளை, மருத்துவ அதிகாரி செய்து முடித்த பின், தானம் செய்பவரிடமிருந்து ரத்தம் எடுக்கப்படுகிறது. அப்படி எடுக்கப் பட்ட ரத்தத்தை, தாலுகா மருத்துவமனையில், மத்திய அரசின், 'நேட்கோ - நேஷனல் எயிட்ஸ் கன்ட்ரோல் ஆர்கனைசேஷன்' பரிந்துரைத்த, 'ஸ்கிரீனிங் டெஸ்ட்' செய்வர். ஹெச்.ஐ.வி., மற்றும் கல்லீரல் சார்ந்த உயிர்கொல்லி வைரஸ், மலேரியா, பால்வினை நோய் உள்ளிட்ட ஐந்து விதமான பரிசோதனைகளை செய்வர்.அதில், ஏதாவது ஒன்று இருந்தால் கூட, ரத்தப்பையை தனியாக எடுத்து, பூட்டி வைத்து விடுவர். பின், உயிரிக் கழிவுகளை அழிக்கும் மருந்து மூலம், ரத்தப் பையை அழித்து விடுவர்.குறிப்பாக, ஹெச்.ஐ.வி., கிருமி தொற்று இருப்பதாக தெரிய வந்தால், அந்த ரத்தத்தை கொடுத்த வரை நேரில் வரவழைத்து, தமிழக அரசின் எயிட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் கீழ் செயல்படும், ஐ.சி.டி.சி., நம்பிக்கை மையத்திற்கு அனுப்பி வைப்பர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement