Advertisement

காட்டுமிராண்டிகள் ஓட்டு; வைக்குமா, 'வேட்டு!'

சிவ அண்ணாமலை தேசிகன், விழுப்புரத்திலிருந்து எழுதுகிறார்: 'தி.மு.க.,வுடன் கூட்டணி ஏற்படுத்திய, ம.தி.மு.க., தலைவர், வைகோவை கண்டித்து, வாசகர் ஒருவர், இதே பகுதியில் கடிதம் எழுதி இருந்தார். அரசியல்வாதிகள் குறித்து, எனக்கு தெரிந்த சில கருத்துகளை, வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்...ஈக்களுக்கு பற்கள் கிடையாது; முதலைக்கு நாக்கு கிடையாது; ஈசலுக்கு வயிறு கிடையாது; அது போல், அரசியல்வாதிகளுக்கு, மானம், ரோஷம், வெட்கம் என, எதுவுமே கிடையாது. 'மறப்போம்... மன்னிப்போம்...' என்ற முன்னாள் முதல்வர், அண்ணாதுரை சித்தாந்ததை கொண்டவர்கள், திராவிட அரசியல்வாதிகள். இந்த கருத்தை உற்று நோக்கினால், கூவம் நதியில், ஒருவர் படகை செலுத்தினால் மட்டுமே, அரசியலின் கரையை கடக்க முடியும் என்பதை உணர்த்தும்! 'வைகோ, இப்படி பேசினார்... அப்படி பேசினார்; தி.மு.க.,வுடன் தற்போது, அவர் உறவு வைத்துள்ளார்' என்றும் வாசகர் கூறியுள்ளார். எவருடனும் கூட்டு வைத்துக் கொள்ளாமல், தன்மானத்துடன் அரசியல்வாதி எவரேனும் இருப்பாரேயானால், அவர், 'அம்பேல்' ஆகி விடுவார். அதை உணர்ந்து தான், வைகோ, இன்று, தி.மு.க.,வுடன் ஒட்டிக் கொண்டுள்ளார். அன்று செந்தில் பாலாஜியை, தி.மு.க., தலைமை கண்டபடி திட்டியது. இன்று, அவர், தி.மு.க.,வில் சேர்ந்தவுடன், புத்தரை போல் புனிதம் அடைந்து விட்டார் போலும். காங்கிரசுடன், முஸ்லிம் லீக் கை கோர்த்தால் மதவாதம் ஆகாது. மற்ற கட்சிகளுடன், பா.ஜ., கூட்டணி வைத்தால் மட்டும், மதவாத சக்தியாகி விடுமா...விநாயகர் சதுர்த்தி, தீபாவளிக்கு வாழ்த்து சொல்லாத, தி.மு.க., தலைவர்கள் கிறிஸ்துமஸ், ரம்ஜான் பண்டிகைக்கும் மட்டும் வாழ்த்து சொல்வர்; ஆனால், ஹிந்துக்களின் ஓட்டுகள் மட்டும் அவர்களுக்கு தேவைப்படுகிறது. தேர்தலின் போது, தெருவில் இறங்கி ஓட்டு கேட்க வரும், தி.மு.க.,வின் தலைவர், ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு, மக்கள் ஆரத்தி எடுத்து, நெற்றி நிறைய விபூதி, குங்குமம் வைக்கின்றனர்; அதை, அன்புடன் ஏற்றுக் கொள்கின்றனர். ஆனால் ஹிந்து மதத்தையும், அதன் கலாசாரத்தையும் மட்டும் சாடி பேசுகின்றனர்.ஹிந்து மதம் காட்டுமிராண்டி மதம் என்றெல்லாம் கூறும், தி.மு.க.,விற்கு, அந்த காட்டுமிராண்டிகள் ஓட்டு இருந்தால் தானே, முதல்வர் பதவி கிடைக்கும். இனியாவது, மதச் சார்பற்ற கட்சி என்ற முழக்கத்துடன், ஸ்டாலின், மக்களை சந்திக்க வர வேண்டாம்!
விருது வழங்கி பாராட்ட வேண்டும்!
அ.அபுதாகிர், பழநி, திண்டுக்கல் மாவட்டத்தி லிருந்து எழுதுகிறார்: இன்றைய குழந்தைகள், கல்வி, அறிவியல், விளையாட்டு, கலை, ஓவியம் என, பல துறைகளில் சிறந்து விளங்கி வருகின்றனர்.பழநி பகுதியைச் சேர்ந்த மாணவன், தேன் முகிலன் வரைந்த, விண்வெளியில் பயிர் சாகுபடி ஓவியம், அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசாவின், 2019 காலண்டரில் இடம் பெற்று, அவன், உலக சாதனை படைத்து உள்ளான். அதேபோல், இந்திய அளவில் நம் மாணவ மணிகளின் கைவண்ணத்தில், மூன்று ஓவியங்கள் இடம் பிடித்தது, பாராட்டுக்குரியது. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் பள்ளி மாணவியர், ஆறு, குளங்களில் உள்ள ஆகாய தாமரை செடிகளைப் பயன்படுத்தி, உர மருந்துகள் மற்றும் பயனுள்ள உபயோகமான பொருட்களைக் கண்டுபிடித்து, ஆய்வு அறிக்கையாய் தாக்கல் செய்துள்ளனர்.இவர்களின் கனவையும், எதிர்கால சிந்தனைகளையும் ஊக்குவித்து, பள்ளி அளவில் மட்டும் இல்லாமல், தேசிய அளவில் விருதுகள் வழங்கி, ஊக்கப்படுத்த வேண்டும். பள்ளி, கல்லுாரி மாணவர்களின் திறனை, மத்திய - மாநில அரசுகள் அங்கீகரிக்கும் போது, சர்வதேச அளவில், இந்திய மாணவர்கள், பல சாதனைகளை கட்டாயம் நிகழ்த்துவர்!
பொறுப்பற்ற பேச்சு, ப.சிதம்பரத்திற்கு அழகல்ல!
சீ.எழில்பாபு, காட்டுமன்னார் கோவில், கடலுார் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: நாட்டில், 120 கோடி பேர், மொபைல் போன்களையும், மூன்று கோடி பேர் தொலைபேசிகளையும், 46 கோடி பேர், மின்னஞ்சலையும் பயன்படுத்துவதாக, புள்ளி விபரங்கள் கூறுகின்றன. நாட்டை சீர்குலைக்கும் விதத்தில் நடக்கும் பயங்கரவாதத்தை தடுக்க, தொலைபேசி, மொபைல் போன், கணினி தொடர்பான விஷயங்களை ரகசியமாக கண்காணிக்க, பிரதமர் மோடி தலைமையிலான, மத்திய அரசு புதிய சட்டத்தை அமல்படுத்த திட்டமிட்டுள்ளது. அதை, 'அறிவிக்கப்படாத அவசர நிலை வந்து விட்டது; மோடி சர்வாதிகாரி' என, காங்கிரசைச் சேர்ந்த, முன்னாள் மத்திய அமைச்சர், ப.சிதம்பரம் கூறியுள்ளார். காங்கிரஸ் கொண்டு வந்த சட்டத்தை, காங்கிரசாரே மறந்து பேசக் கூடாது. 2008ல், தொலைபேசி, மொபைல் போன், கம்ப்யூட்டர் ஆகிய தொடர்புகளை கண்காணிக்கும் சட்டத்தை கொண்டு வந்ததே, மத்தியில் ஆண்ட, காங்கிரஸ் கூட்டணி அரசு தான்!குறிப்பாக, அந்த சட்டத்தை முன்னிறுத்தி பேசியவர்கள், அப்போதைய, தி.மு.க.,வை சேர்ந்த, மத்திய தகவல் தொடர்பு துறை அமைச்சராக இருந்த ஆ.ராசாவும், உள்துறை அமைச்சராக இருந்த, ப.சிதம்பரமும் தான். அத்துடன், மாதத்துக்கு, 9,000 தொலைபேசி, மொபைல் போன், 500, 'இ - மெயில்' கணக்குகளையும் கண்காணிப்பு செய்ததாகவும் சொன்னவர்கள்; அதை, இன்று மறந்து பேசுகின்றனர். காங்கிரஸ் தலைமையிலான, கூட்டணி அரசு கொண்டு வந்த சட்டம் வரையறுக்கப்பட்டு, அந்த சட்டத்தை மீண்டும் அமல்படுத்தினால், மோடி அரசை எதிர்ப்பது நியாயமா... ஜி.எஸ்.டி., வரி சட்டமாக இருந்தாலும், கம்ப்யூட்டர்களை ரகசியமாக கண்காணிக்கும் சட்டமாக இருந்தாலும், அனைத்தும், முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்டவை என்பதை ஏற்றுக் கொள்வோம். அவற்றில் மாறுதல் செய்து, பா.ஜ., அரசு செயல்படுத்தினால், காங்கிரசால் ஏன் பொறுத்துக் கொள்ள முடியவில்லை? பிரதமர் மோடி தலைமையிலான, மத்திய அரசின் செயல்பட்டால், இன்று வரி கட்டுவோரின் எண்ணிக்கை, பல மடங்கு உயர்ந்துள்ளது; தனி நபர் வருமானமும் உயரத் துவங்கியுள்ளது. இனியும், அரசியலுக்காக, அனைத்து சட்டங்களையும் குறைத்து பேசுவது, சிதம்பரம் போன்றோருக்கு அழகல்ல!

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • venkat Iyer - nagai,இந்தியா

    திரு.சிவ அண்ணாமலை கூறியது போல மரியாதைக்குரிய வை.கோ அவர்களுக்காக வாக்காளர்கள் எதனை வைத்து ஓட்டு அளிப்பார்கள் என்று தெரியவில்லை.தொலைக்காட்சி இன்டர்வியூவில் கூட ஒரு பக்கமாக பேசுகின்றீர்கள் என்று சட்டசபை போல வெளி நடப்பு செய்துள்ளார்.சகிப்பு தன்மை,நிதானம் மற்றும் பொறுமை இல்லாத இவரால் பாராலுமன்றத்திலோ,சட்ட சபையிலோ மக்களுக்காக நலத்திட்ட உதவிகளை எப்படி கேட்டு பெறுவார் என்று தெரியவில்லை.இப்போது ஸ்டாலின் குறிக்கோள்,அம்மாவைப் போல ,தோசிய கட்சியான காங்கிரஸை தவிர மற்ற கூட்டணி கட்சிகள் அனைத்தும் உதய சூரியன் சின்னத்தில் தான் நிற்க வேண்டும்.அப்படி இல்லாவிட்டால், கூட்டணி என்ற பேச்சுக்கே இடம் உண்டு என்று சொல்லும் போதும் கூட ,திருமாவளவன்,வைகோ போன்றவர்கள் ,தங்களுக்கு பரவாயில்லை என்று ஏதோ ஓட்டு இருப்பது போல அதிகமாக ஐந்து இடங்களை கேட்டு வருகிறார்கள்.முன்னதாக பல கருத்து கணிப்புகள் வந்தது போல தேர்தலில் ஸ்டாலினுக்கு ,பதினேழு இடம்தான் பாராளுமன்றத்தில் வெற்றிபெற வாய்ப்பு இருக்கும் என்று சொல்லி கொண்டு வரும் வேலையில் ,ஸ்டாலின் கூட்டணி கட்சிகளை கடைசி நேரத்தில் கழட்டி விட வாய்ப்பு இருக்கின்றது இது அவரின் ராஜதந்திரமாக அமையும்.இன்று கீழ் மட்டம் வரை ,ஆன்மிகத்தினை எல்லோரும் மதிக்க துவங்கி வரும் வேலையில் பெரியார்,திராவிடர் என்று தி.க கட்சிகளை வைத்து ஆட்சி அமைக்க கலத்தில் இறங்கினால் அது அவருக்கு பாதகமாக அமையும்.பாசிச ஆட்சி என்று எப்போது பார்த்தாலும் பாரதிய ஜனதா கட்சியை ஸ்டாலின் சொல்லி வருவதை விட்டுவிட்டு ,மத்திய ஆட்சியில் தமிழ் நாட்டுக்கு கிடைக்காத திட்டங்களை மட்டும் பேசுவது அவருக்கு நல்லது.புதிய தேர்தலில் அம்மா இல்லாத நிலையில்,அதிமுக ஆட்சியில் பாராளுமன்ற தேர்தலை அவர்கள் சந்திக்கும் வேலையில்,அதிமுக அமைச்சர்கள்,அடிமட்டம் வரை ஸ்டாலினை பேசி தாக்குவார்கள்.இதனை எல்லாம் காதில் வாங்கிகொண்டு சகிப்பு தன்மை அற்றவராக இருந்தால் மட்டுமே,ஸ்டாலின் அதிகமாக உறுப்பினர்களை பெற முடியும்.அதற்காக இவரும் தன்மானத்தினை விட்டுவிட்டு பேச்சாற்றல் கொண்டவராக வைகோ வைகோ அருகில் வைத்து கொள்வார்.அவர்கள் சாக்கடைக்குள் இறங்கினாலும்,நமக்கு யார் தூர் வாருவார்கள் என்பதை பார்த்து ஓட்டு போடுவோம்.

  • Bhaskaran - Chennai,இந்தியா

    ஆனால் தீபாவளி வாழ்த்து சொல்லாமல் விடுமுறை கொண்டாட்டமென்று புதுசினிமாவை தங்கள் தொலைக்காட்சியில் போட்டு பணம்பண்ணும் உத்திதெரிந்த இவர்கள் இறந்துபோன தலைவருக்கு பதினாறாம் நாள் காரியம் வீட்டில் செய்வார்கள் அதெல்லாம் காட்டுமிராண்டித்தனமில்லையா

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement