Advertisement

பகல் துாக்கத்தை குறைக்கலாம்!

கைக்குழந்தைகளின் இரவு உறக்கத்துக்கு ஆலோசனை கூறும், மதுரையைச் சேர்ந்த, குழந்தை நல மருத்துவர் கண்ணன்: சில குழந்தைகள், பிறந்து முதல் நான்கு மாதங்கள் வரை, துாங்குவதற்குச் சிரமப்படும். பிரசவம் வரை தாயின் கருவறை சூழலிலிருந்த குழந்தை, அதன் பின், புற உலகுச் சூழலுக்குப் பழகிக் கொள்வதில் எதிர்நோக்கும் சிரமங்களே, இதற்கு காரணம்.

தாயின் வயிற்றுக்குள், பனிக்குடத்தில் இருக்கும் குழந்தை, தன் அம்மா நடக்கும் போது, குனிந்து நிமிரும் போதெல்லாம், துாளி ஆடுவதுபோல, ஆடிக்கொண்டே உறக்கத்தில் இருக்கும். இரவு, அம்மா துாங்கும் போது, அதற்கு துாளி அசைவு கிடைக்காது என்பதால், துாக்கம் வராமல் விழித்துக் கொள்ளும். இதனால் தான் கர்ப்பிணிகள், பகலை விட இரவு நேரத்தில், தங்கள் சிசுவின் அசைவுகளை அதிகமாக உணர்வர். இந்த துாங்கும் முறையை, சில குழந்தைகள், பிறந்து நான்கு மாதங்கள் வரையிலும் தொடர்வர். இரவில் குழந்தைகள் துாக்கம் விழிக்க, இதுவும் காரணம். -இந்த முறையை மாற்றுவதற்கு, குழந்தையின் பகல் துாக்கத்தின் அளவை குறைப்பதிலிருந்து ஆரம்பித்து, சில விஷயங்களை மேற்கொள்ளலாம்.

பகல் நேரத்தில், கதவு, ஜன்னல் அனைத்தும் சாத்தப்பட்ட கும்மிருட்டு சூழலில், குழந்தையை துாங்க வைக்காமல், நார்மலான வெளிச்சம் உள்ள சூழலில், உறங்க வைக்கலாம். இது, அவர்களை நீடித்த உறக்கத்தை தவிர்க்கச் செய்யும். இரவில், குழந்தை உறங்கும் அறை வெளிச்சம், ஓசைகள், ஒளிர்திரைகள் இன்றி இருக்க வேண்டும். குழந்தைக்கு, வீட்டுப் பெரியவர்களின் பேச்சு, கிரைண்டர், மிக்ஸி மற்றும் 'டிவி' போன்ற சத்தங்களைப் பழக்க வேண்டும். அப்போது தான் புற ஒலிகளுக்கும், புறச் சூழலுக்கும் பழகிக் கொள்வர். கடைகளில் கிடைக்கும், 'நேப் பெட்' - கருவறை போன்றதோர் உணர்வைக் கொடுக்கும் என்பதால், அதைப் பயன்படுத்தி குழந்தைகளை உறங்க வைக்கலாம்.

துாக்கமின்மை காரணமாக உடல்நல, மனநலப் பிரச்னைகளும் பிரசவித்த தாய்க்கு ஏற்படக் கூடும். அதனால், பகலோ, இரவோ, குழந்தை உறங்கும் நேரமெல்லாம் தாயும் உறங்கி, ஓய்வெடுத்துக் கொள்ள வேண்டும். துாக்கமின்மைப் பிரச்னையால் அதிகம் பாதிக்கப்படுகிற அம்மாக்கள், இரவு வேளைகளில் துாக்கம் தொலைக்காமல் இருக்க, 'பிரஸ்ட் பம்ப்' மூலம் பாலை எடுத்து சேமித்து வைத்து, குழந்தைக்கு வேறு யார் மூலமாகவாவது புகட்டச் சொல்லலாம். பசி, அழுத்தும் உடைகள், மூச்சு விடுவதில் சிரமம், உடல்நலக் குறைவு என, குழந்தைகள் இரவில் துாங்காமல் அழ, பல காரணங்கள் உள்ளதால், அவற்றையும் கண்காணிக்க வேண்டும்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • MaRan - chennai,இந்தியா

    நல்ல விளக்கம் டாக்டர்,, பயனுள்ள தகவல் நன்றி

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement