Advertisement

பழனிசாமி ராஜதந்திரம் இது!

பழனிசாமி ராஜதந்திரம் இது!
எஸ்.கண்ணன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: இந்தாண்டு பொங்கல் பண்டிகைக்காக, 'அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும், இலவச பொங்கல் பொருட்கள் மற்றும் 1,000 ரூபாய் ரொக்கம் வழங்கப்படும்' என, தமிழக அரசு அறிவித்தது. அனைத்து ரேஷன்கார்டுதாரர்களுக்கும் வழங்கப்பட்டால், அரசுக்கு, 2,200 கோடி ரூபாய் செலவாகும் என, கூறப்பட்டது. அரசு அறிவித்தபடி, திட்டம் செயல்பாட்டிற்கு வந்தது.

ரேஷன் கடைகளில், நான்கு நாட்களில், 70 சதவீத ரேஷன் கார்டுதாரர்கள், இலவச பொங்கல் பொருட்கள் மற்றும் ரொக்கத்தை பெற்று விட்டனர். அரசுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கால், 'அரிசி வாங்கும் ரேஷன் கார்டுதாரர்களுக்கு மட்டும், திட்டத்தை செயல்படுத்த வேண்டும்' என, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுவரை, வாங்கியவர்களிடம் இலவச பொருட்களையும், ரொக்கத்தையும் திரும்ப பெற முடியாது. வாங்காத ரேஷன்கார்டுதாரர்களுக்கு, அரசு கை விரித்து விடும். இந்த திட்டத்தால், அரசுக்கு, மிகப்பெரிய இழப்பு ஏற்படுவதாக, 'டிவி' விவாத மேடைகளில், அரசியல் கட்சியினர் பேசி வருகின்றனர். அவர்களுக்கு அரசின் திட்டம் புரியாமல் பேசுகின்றனர். பொங்கல் பண்டிகைக்காக, 'டாஸ்மாக்' விற்பனை இலக்காக, அரசு, 1,000 கோடி ரூபாய் என, நிர்ணயித்துள்ளது. நிச்சயம், அந்த தொகை அரசு கஜானாவுக்கு வந்தே தீரும்.

தமிழக குடிமகனின் நிலையை உணர்த்தும் வகையில், அன்று, 'கையில வாங்கினேன், பையில போடல... காசு போன இடம் தெரியலை...' என்ற, திருச்சி லோகநாதனின் பழைய பாடல், தற்போதைய, தமிழக அரசின் திட்டங்களுக்கு கனகச்சிதமாக பொருந்துகிறது!

மக்களுக்கு கொடுப்பது போல் பணத்தை கொடுத்து, அதை, 'டாஸ்மாக்' மூலம் திருப்பி வாங்கும், முதல்வர் பழனிசாமியின் திட்டத்திற்கு ஈடு இணையாக, யாராவது வர முடியுமா... இலவசத்தை நம்பியே வாழும் தமிழர்கள், என்று தான் திருந்த போகின்றனரோ... என்பது, ஆண்டவனுக்கே வெளிச்சம்!

---

ஊழல், லஞ்ச பேர்வழிகளுடன் ஒப்பிடாதீர்!
பா.பாரதியன்பன், சென்னையிலிருந்து எழுதுகிறார்: மனித புனிதராக, முன்னாள் பிரதமர், மொரார்ஜி தேசாயும், மக்கள் தலைவராக, காமராஜரும் என்றும் மக்கள் மனதில் நிலைத்திருப்பர். அப்பேர்பட்ட தலைவர்களுடன், பிரதமர் மோடியை ஒப்பிட்டு, இதே பகுதியில், வாசகர்கள் சிலர் கடிதம் எழுதி வருகின்றனர்; இதை ஏற்க முடியாது.

அன்று, காமராஜரும், தேசாய் போன்றோரும், மக்களிடம் உண்மையாக நடந்து கொண்டவர்கள். ஆனால், இன்று பிரதமர் மோடி உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும், பொய்யான வாக்குறுதிகளை, மக்களிடம் அள்ளி வீசுகின்றனர்.

மோடி, பகட்டான ஆடைகளையே விரும்பி உடுத்துபவர். வெளிநாட்டு சுற்றுலாவை விரும்புவார். அவர் சார்ந்துள்ள, பா.ஜ., மீடியாக்களை நம்பி அரசியல் செய்கிறது. எதிர்க் கட்சிகளை மேடைதோறும், பா.ஜ.,வினர் கேலி பேசுகின்றனர். காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் உருவான திட்டங்களையே, பெயர் மாற்றி அமல்படுத்துகின்றனர். கவர்னர்கள் மூலம், எதிர்க் கட்சிகள் ஆளும் மாநிலங்களில், நிர்வாக குழப்பத்தை மத்திய அரசு ஏற்படுத்துகிறது.

காமராஜர் முதல்வராக இருந்த போது, அவரது அமைச்சரவையில், கக்கன், சி.சுப்பிரமணியம் போன்ற நேர்மையான அமைச்சர்கள் பணியாற்றினர். நிர்வாகமும் சிறப்பாக இருந்தது. மக்களுக்கு எண்ணற்ற திட்டங்களை, காமராஜர் நிறைவேற்றினார். எதிர்க் கட்சிகளும் போற்றும் தலைவராக, காமராஜர் விளங்கினார்.

இன்று, 'குட்கா' வழக்கில், அ.தி.மு.க.,வின் சுகாதார அமைச்சர், விஜயபாஸ்கர் சிக்கியுள்ளார். பஸ் மீது கல்வீசி தாக்குதல் நடத்திய வழக்கில், அ.தி.மு.க.,வின் மற்றொரு அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு, மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனையை, நீதிமன்றம் வழங்கியுள்ளது. அவர், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இன்னும் பல அமைச்சர்கள் மீது, ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. எனவே, நாட்டளவிலும், தமிழகத்திலும், ஊழல், லஞ்ச பேர்வழி தலைவர்களாக விளங்குபவர்களுடன், காமராஜர், தேசாய், லால்பகதுார் சாஸ்திரி உள்ளிட்ட தலைவர்களை ஒப்பிட்டு, யாரும் பேசாதீர்கள்!

---

'வாய்சவடால்'கள் ஓடி ஒளிந்து விட்டனரே!
ஆர்.வித்யாசாகர், அருப்புக்கோட்டை, விருதுநகர் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: 'டெல்டா' மாவட்டங்களை, 'கஜா' புயல் தாக்கி, ஒரு மாதம் கடந்து விட்டது. மக்களுக்கு இன்னும் நிவாரணம், முழுமையாக கிடைக்கவில்லை. பல கிராமங்களில், மின் இணைப்பு சீராக்கப்படாததால், மக்கள் அவதியடைந்து வருகின்றனர்; மறியல் போராட்டங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன.

மத்திய அரசு அனுப்பிய ஆய்வுக் குழு, பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டது. முதற்கட்டமாக, விவசாயத் துறைக்கு மட்டும், 172 கோடி ரூபாயை, மத்திய அரசு விடுவித்துள்ளது. ஆனால், அது, 'யானை பசிக்கு சோளப்பொரி போன்றது' என, எதிர்க் கட்சிகள் கடுமையாக சாடியுள்ளன.

இரண்டாம் கட்டமாக, 1,414 கோடி ரூபாயை, மத்திய அரசு நிவாரணத் தொகையாக அறிவித்துள்ளது. ஆனால், பாதிக்கப்பட்டோருக்கு சரிவர, நிவாரண தொகை கிடைக்கவில்லை. 'சினிமா நடிகை திருமண விழாக்களில் பங்கேற்க, பிரதமர் மோடிக்கு நேரம் உள்ளது. ஆனால், 'கஜா' புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட நேரமில்லையா...' போன்ற கேள்விகளை முன்னிறுத்தி, தனியார், 'டிவி'க்களில் நடத்தப்படும் விவாத மேடைகளில், அரசியல் கட்சியினர் பேசுகின்றனர்.

மத்திய அரசை எதிர்த்து குரல் எழுப்ப வேண்டிய, தமிழக அரசு வாய்மூடி மவுனியாக இருந்து வருகிறது. ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கியிருக்கும் அமைச்சர்களையும், அதிகாரிகளையும் காப்பாற்ற, மாநில அரசு போராடி வருகிறது.

'தமிழ் இனக் காவலர்கள்' என, தங்களை தாங்களே அறிவித்து கொள்ளும், வைகோ, திருமாவளவன், சீமான் போன்றோர் எங்கே ஓடி ஒளிந்தனர் என்றே தெரியவில்லை. 'முல்லைப்பெரியாறு அணைக்கு குரல் கொடுத்தேன்; 'ஸ்டெர்லைட்' ஆலையை மூட வைத்தேன்' என்றெல்லாம், மேடைக்கு மேடை குரல் எழுப்பிய, வைகோ, புயல் பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்காக, மத்திய அரசை எதிர்த்து என்ன செய்துள்ளார்?

உருப்படியான விஷயங்களுக்காக, எதிர்க் கட்சிகள் போராடாமல், மின் கோபுரம் அமைப்பதற்கு எதிராக, விவசாயிகளை துாண்டி விட்டு போராட வைக்கின்றன. இனியும், அரசியல் கட்சிகளை நம்பி, மக்கள் ஏமாற வேண்டாம்!

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (4)

 • venkat Iyer - nagai,இந்தியா

  திரு.வித்தியாசாகர் அவர்களே,நீங்கள் உண்மை நிலைகளை அறியாமல் எதையும் பேசாதிர்கள்.கஜா புயலின் வலிமை எழுபது கி.மீ வேகம் மட்டுமே சராசரியாக இருந்தது.மழையோடு புயல் அடிக்கும் போதுதான் சேதங்கள் மிக ,அதிகமாக இருக்கும்.தரங்கம்பாடி,காரைக்கால் நாகை வேளாங்கன்னி பகுதிகளில் புயல் அடிக்கும் முன் 2செ.மீ கூட மழை பெய்யவில்லை.இதனால் மரங்களின் வேர்கள் மழையினால் தளர்வு ஆகாததால் விழவில்லை.மின் கம்பங்கள்,மற்றும் தென்னை மரங்கள்,எல்லாம் தடுப்பு இல்லாமல் உள்ள பகுதிகளில் காற்றின் வேகத்தினை தடுக்கமுடியாத இடங்களில் மின் கம்பம் மற்றும் தென்னை மரங்கள் விழுந்து உள்ளன.கூறைகளும் தூக்கி எரியப்பட்டு உள்ளது.கூறை வீடுகள் விழுந்த இடங்களை நானும் சென்று பார்வை இட்டேன்.அதில்,பல கூறை வீடுகள் சரியாக கட்டப் படாமல் இருந்து அதில்,ஏனோதானோ என்று வாழ்ந்து வந்தவர்களின் வீடுகள்தான் மிகுந்த சேதாரம் ஆகி உள்ளது.நான் அவர்களை ஏன் இப்படி வீட்டை கட்டாமல் போட்டு உள்ளீர்கள் என்று கேட்டால் ,அவர்கள் அம்மா வீடு அப்போதுதான் கிடைக்கும் என்றும் மற்றவர்கள் அம்மாவீடு வருவதால் கட்டாமல் போட்டு உள்ளேன் என்ற புத்திசாலியான பதிலை கண்டு அதிர்ச்சி அடைந்தேன். .சம்பாதிக்கும் போது ஏன் இப்படி வைத்து உள்ளீர்கள் என்று கேட்டால் ,நானாவது பரவாயில்லை.ராசாங்கம் என்பஸர் குடும்பம் வெறும் சுவர் மட்டுமே உள்ளது.மாரியம்மன் கோவிலில் படுத்து கொள்கின்றார்கள்என்றார்.இது நான்,என்னப்பா,சைக்கிளில் போகிறயா என்று கேட்டால் ,நானாவது சைக்கிளில் போகின்றேன்,அவன் நடந்து போகின்றான் பாருங்கள் என்று கூறுவதுபோல உள்ளது.இன்று மதுவினால் இங்கு ஏழை குடும்பங்கள் தான் மிகவும் அழிந்து வருகின்றது.ஒரு பெண் தன்மானம் உள்ள பெண் எங்களுக்கு கஜா புயலுக்கு ஒன்றுமே நிவாரணம் வேண்டாம்.மதுவிலக்கு கொண்டு வந்து மதுக்கடைகளை மூடச் சொல்லுங்கள் .குடித்தே இவன் குடும்பத்தினை அழிக்கின்றான்.கடைய மூடினால் எங்கள் குடும்பத்தினை நன்கு கொண்டு வந்துவிடுவோம் என்று குடும்பங்களில் வாழும் பெண்கள் கூறுவதை பார்க்கின்றோம்.குடித்துவிட்டு வேலைக்கு பலர் வேலை இருந்தாலும் பலர் கடலுக்கு போவதில்லை.விவசாய வேலைகளுக்கு செல்வதில்லை.காரைக்கால் சரக்கு சர்வசாதரணமாக விற்கின்றார்கள்.ஓ.எஸ்.மணியன் பெயரை வைத்து விற்பதாக அறிகின்றேன்.இது அவருக்கு தெரியுமா என்று தெரியவில்லை.தென் மேற்கு பருவ காற்று ஆடி மாதங்களில் 90கிமீ வேகத்தில் தமிழ் நாட்டில் எல்லா இடங்களிலும் அடிக்கும் என்பதை 'ஆடிக்காத்தில் அம்மியும் பறக்கும் என்று சொல்வதை நாம் மறந்துவிடக்கூடாது.அம்மா வீடு பெற ரூபாய் 3000/- இல்லாததால் பலர் விண்ணப்பிக்க முடியவில்லையாம்.என்ன கொடுமை இது.ஆண்டவன் வந்தாலும் தமிழ் நாட்டை காவந்து பண்ண முடியாது.இதில் போராட்டத்தினை செய்யவில்லை என்று தூண்டுதல் செய்கிறார்.உலகத்தில் பாட்டினை மட்டும் அடையாளமாக பார்க்க முடியும். தேசத்தில் இரண்டு கட்சிகள்தான் மாநிலங்களை ஆட்சி செய்ய வேண்டும்.ஆளும் தேசிய கட்சிகளுடன் கூட்டாவது இருக்க வேண்டும்.இந்து மதம் 87%இருக்கும் நாட்டில் இந்து மதத்தில் பிறந்து கட்சியை நடத்துபவர்கள் மோடி மதவாதம் செய்பவர் என்று கூறி அவர் விமானத்தில் அல்லது ஷெலியில் செல்லும் போது கொடியை பிடித்து நாட்டின் மக்களால் தேர்ந்தெடுத்த அரசுக்கே நாட்டில் உள்ளே விடமாட்டோம் என்று கூறுவது எப்பேர்பட்ட அவமரியாதை.அப்படிப்பட்ட மாநிலத்தில் கஜா புயலை பார்க்க மோடி எப்படி வருவார்.எப்போது பார்த்தாலும் எதற்கு எடுத்தாலும் போராட்டம்.வாசகர்களே சிந்தியுங்கள்.தவறு எங்கு உள்ளது.

 • Bhaskaran - Chennai,இந்தியா

  தமிழினக்காவலர்களான வைகோ திருமா சீமான் எப்படியாவது வருமதேர்தலில் கிடைக்கும் சீட்டுக்காக அறிவாலயத்தில் காவடி எடுத்துக்கொண்டு உள்ளனர்

 • Bhaskaran - Chennai,இந்தியா

  தன்மகள் தேர்வில் சரியாக எழுதவில்லை என்று சொன்னதற்கு பரவாயில்லை அடுத்த ஆண்டு பார்த்துக்கொள்ளலாம் என்று தன பதவியை துஷ்பிரயோகம் செய்யாத முதல்வராகஇருந்த மொரார்ஜிதேசாய் எங்கே அதனால் அவர்மகள் தேர்வில் தோல்வி கண்டு தற்கொலை செய்துகொண்ட போது முட்டாள் என்றுசொன்ன மனிதப்புனிதன் மொரார்ஜிதேசாய் என்றுபடித்துள்ளேன் அதேபோல் தன்வயதானத்தாயார் சென்னையில் தன்னுடன் வந்து இருக்க ஆசைப்பட்டும் உறவினர்கள் கூடவந்து தன பெயரை கெடுத்துவிட்டால் என்னசெய்வது என்று தன தாயாரை விருதுநகரிலேயே இருக்கச்சொன்ன காமராசர் இவர்களுடன் யாரையும் ஒப்பிட முடியாது ஐயா

 • Bhaskaran - Chennai,இந்தியா

  பொங்கலுக்கு அனைவர்க்கும் ஆயிரம் ரூபாய் வழங்குவதை நீதிமன்றம் சென்று தடைசெய்தவர் திமுக வழக்கறிஞரென்பதால் அவர்கள்மேல் மக்களுக்கு கோபம் இதிலும் வென்றவர் பழனிதான்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement