Advertisement

கேளிக்கைக்கு வரம்பு தேவை...

புத்தாண்டு கொண்டாட்டம், அனைவரையும் மகிழ்விப்பது என்பது சரியே. ஆனால், வரம்பு மீறிய எந்தச் செயலும், நல்லவையாக அமையாது. பத்தாண்டுகளாக, புத்தாண்டு கொண்டாட்டத்தை உற்று நோக்கினால், அது, தமிழகத்தின் தலைநகரான சென்னையை, காவல் கோட்டையாக மாற்றுகிறது.நீண்ட அழகு மிகு மெரினா கடற்கரையில், அதிக ஆரவாரத்துடன், அமைதி குலைந்து காணப்பட்டது என்பது மட்டும் அல்ல; நீண்ட கடற்கரை அமைந்த சோழிங்கநல்லுார் பகுதி மற்றும் சில பொது இடங்கள் ஆகியவை, அமைதியை இழந்தன.பொதுவாக, நம் நாடு, இரவில் சுதந்திரம் பெற்றது என்ற கதை இருக்க, நடுநிசி என்பது, பிரிட்டிஷார் பின்பற்றிய நடைமுறை. அவர்கள் ஆட்சிக் காலத்தில், புத்தாண்டு நாளில், பெரிய மனிதர்கள் அல்லது அரசு உயர் அதிகாரிகள், தலைமை வகிக்கும் பிரபுக்களை, எலுமிச்சம் பழம் கொடுத்து, வாழ்த்து பெற்று வருவது உண்டு.அந்த நடுநிசியில், ஆடிப்பாடி, ஆரவாரம் செய்வது அல்லது சட்டம் -- ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய நிலைக்கு, அரசைத் தள்ளுவது சரியல்ல. ஏனெனில், கிறிஸ்துவ மத மதிப்பில், டிச., 25 முதல், ஜனவரி 1ம் தேதி வரை கொண்டாட்டம். அவர்கள், அழகான வண்ண விளக்குகள் மற்றும் சர்ச்சுகளில் விசேஷ பிரார்த்தனையோடு, கேக் வெட்டி மகிழ்ச்சி தெரிவிப்பது ஆகியவை இயல்பானவை. அதை நாமும் ஓரளவு பின்பற்றுவதால், பெரிய மாற்றம் வந்துவிடாது.ஆனால், வன்முறை கும்பலாக இளைஞர்கள் கூச்சலிட்டு, ஆட்டம் பாட்டத்தின் மதிப்பைக் குறைப்பது, அலங்கோலத்தின் அடையாளம். பொதுவாக, கூடியிருப்பது, அன்பால் குளிர்ந்த உள்ளம் கொள்வது, அதனால் ஏற்படும் மகிழ்ச்சி வேறுவிதம்.சென்னை மாநகரம், அதிக மக்கள் தொகை கொண்டது. இந்த புத்தாண்டு கொண்டாட்டத்தில், மொத்தம் எட்டு பேர் உயிரிழந்தனர். இறந்த இளைஞர்களின் சராசரி வயது, 32 வரை உள்ளது. நெற்குன்றம் வினோத் என்பவர், 22 வயது இளைஞர். இந்த ஆர்ப்பாட்டத்தின் தொற்று, கோவையிலும் சிலர் உயிரைப் பறித்திருக்கிறது. ஆனால், மெரினா போல, நீண்ட பரப்பு அங்கில்லை.இந்த ஆர்ப்பாட்ட ஆவேசங்களில், இரவு நேரக் களியாட்டங்களில் ஈடுபட்டவர்களில், 200 பேர் காயமுற்றிருக்கின்றனர். மது விற்பனை கனஜோராக இருந்தது.அதிவேகமாக இருசக்கர வாகனங்களை, உறுமல் சத்தத்துடன் ஓட்டுவது, சற்று வசதியுள்ளவர்கள், வெடிகள் வெடித்து ஆரவாரம் செய்வது இவை, இதில் உள்ள அம்சங்கள். குடிபோதையில் வாகனம் ஓட்டியவர் மீது, 260 வழக்குகள், பைக்குகளில் மூன்று பேர் அமர்ந்தபடி ஆரவாரப் பயணம் மேற்கொண்ட, 230 பேர் மீதான வழக்குகள் உள்ளன.அந்தப் பத்து மணி நேரத்திற்கு, குறிப்பிட்ட சாலைகளில், 15 ஆயிரம் போலீசார் நிறுத்தப்பட்ட போதும், இந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் கட்டுக்குள் இல்லை. காரணம், இம்மாதிரி ஆர்ப்பாட்டங்களால், சமூக அந்தஸ்து அல்லது கவுரவம் என்ற கருத்து மேலோங்கி விட்டது.இது மட்டும் அல்ல... சென்னையில் உள்ள சில பூங்காக்களில், இந்த ஆரவார கோஷ்டியினர், அங்கிருந்த எழிலைச் சிதைத்திருக்கின்றனர். புறநகர் ரயிலில், சீழ்க்கை அடித்தபடி பயணம், சில சிறிய ஸ்டேஷன்களில், குப்பை போட வைத்திருந்த பிளாஸ்டிக் கூடைகளை அடித்து நொறுக்கிய சம்பவங்கள் நடந்திருக்கின்றன.தவிரவும், மெரினாவில் மட்டும் டன் கணக்கில் சேர்ந்த குப்பை கழிவுகள் அகற்றப்பட்டிருக்கின்றன. சில பொழுதுபோக்கு இடங்களில், அளவு கடந்த கூட்டத்தை சமாளிக்க, போலீசார் திணறியிருக்கின்றனர்.இவற்றை எல்லாம் பார்க்கும்போது, கட்டுப் பாடுகள் கொண்டு வருவதால் மட்டும், திருந்தக்கூடிய விஷயங்கள் அல்ல இவை. ஒரு குறிப்பிட்ட வயது இளைஞர்கள் என்றால், இம்மாதிரி ஆட்டம் அல்லது பொதுமக்களுக்கு இடைஞ்சலை வேண்டுமென்றே செய்வது, 'ஒரு ஸ்டைல்' வாழ்க்கை ஆகியிருக்கிறது.ஜல்லிக்கட்டுக்கு அனுமதி என்றால், அதன் கலாசார பாரம்பரிய நடைமுறை மாறிவிட்டது. அதிக காயம், அதிக உயிரிழப்பு, அதிக செலவினம் என்ற நிலை மாறி, 'ஏறு தழுவுதல்' என்ற இயற்கையோடு இணைந்த வாழ்க்கையின் முக்கியத்துவம் மாறியிருக்கிறது. நல்ல வேளையாக, புத்தாண்டு நாளில் கோவில்களில், அதிக மக்கள் வழிபட வந்தபோதும், அது இயல்பாக அமைதியுடன் காணப்பட்டது.இது எதற்காக என்றால், வழிபாட்டிலும் தற்போது அதிக கூட்டம் வரும் போது, அங்கு தனி மனித ஒழுங்கீனங்கள் முற்றிலும் மறைந்து காணப் படுவதும், மறுபக்கம் கேளிக்கை, ஆர்ப்பாட்டம் என்றதும், அதில் சமூக பிரக்ஞை முற்றிலும் குறைவதை நாம் காண்பது துரதிர்ஷ்டம்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement