Advertisement

சாப்பிடாமல் இருப்பது அல்ல, 'டயட்!'

உடலை கட்டுக்கோப்பாக வைத்து கொள்பவரும், 'மாறுவோம் மாற்றுவோம்' அறக்கட்டளையை துவக்கியுள்ளவருமான, நடிகர் ஆரி: நாம் உண்ணும் எல்லா வகை உணவிலும், கலப்படமே நிறைந்திருக்கிறது. இன்று, புற்றுநோய்க்காக அனைத்து மருத்துவமனைகளிலும், தனிப்பிரிவு ஏற்படுத்தியுள்ளனர். புற்றுநோய்க்கான, 'இன்ஷூரன்ஸ்' வந்து விட்டது. இதெல்லாம் வளர்ச்சி கிடையாது; வீழ்ச்சி.

நம் மக்கள், இயற்கை விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது இல்லை. இயற்கை விவசாயத்தை நோக்கி, மக்களை திரும்ப வைப்பதோடு, சீனா, ஜப்பான் நாடுகள் போல, நாம் இருக்கும் இடத்திலேயே, நமக்கான உணவை உற்பத்தி செய்ய வேண்டும். அந்த முயற்சிக்காகத் தான், இயற்கை விவசாயம் செய்து, ஆதரவற்ற மற்றும் முதியோர் இல்லங்களுக்கு, இலவசமாகவே கொடுத்து வருகிறேன். வீடுகளிலும், மாடித் தோட்டம் அமைத்து தருகிறோம்.

குழந்தைகளுக்கு, பணத்தை பாதுகாக்க கற்றுத் தருவதோடு, இயற்கை வளங்களை பாதுகாக்கவும் சொல்லி வளர்ப்பது தான் முக்கியம். நமக்கு தேவையானவற்றை, வீட்டிலேயே உற்பத்தி செய்து, சாப்பிட வேண்டும். விவசாயத்தை, இளம் தலைமுறையிடம் கொண்டு சேர்ப்பதோடு, தமிழக மக்களிடம், நல்ல உணவுக் கலாசாரத்தை வளர்க்கும் நோக்கத்திற்காகவே, இந்த அறக்கட்டளையை ஆரம்பித்தேன்.

'சிக்ஸ் பேக்'கை, சரியான உடற்பயிற்சிகளால் கொண்டு வரலாம். அதை விட்டு, மருந்துகளை உட்கொண்டு செய்தால், பக்கவிளைவு தான் வரும். அதுவும், 'டாக்டர், டயட்டிஷியன்' அனுமதி பெற்றே எடுக்க வேண்டும். குறுக்கு வழியில் செல்ல நினைத்தால், ஆபத்து தான் வரும். முடி கொட்டுதல், ரத்த அழுத்தம், நரம்புத் தளர்ச்சி, இதயத்துடிப்பு அதிகமாதல் போன்றவை ஏற்படும்.

அதேபோல், 'டயட்' என்பது, சாப்பிடாமல் இருப்பது அல்ல... முறையாக, உடல் எடைக்கு தகுந்த மாதிரி கலோரிகளை கணக்கிட்டு, உணவுத் திட்டத்தை வகுக்க வேண்டும். அனைத்து உடற்பயிற்சிகளும், உணவுத் திட்டங்களும், எல்லா உடம்புக்கும் ஒத்து வராது. எண்ணெய் வகைகளை குறைத்து, சிறுதானிய உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

எல்லாவற்றையும்விட, சரியான துாக்கம் அவசியம். மருத்துவமனைகளும் நிறைய உருவாவது ஆபத்து. வீட்டு விசேஷங்களில், இலை போட்டு சாப்பாடு போடுவதே, பெரிய மாற்றம் தான். சிறு தானிய உணவுகளை விழாக்களில் போட்டால், வாழ்த்த வருபவர்கள், நல்ல உணவை சாப்பிடுவர். விழிப்புணர்வடைந்து, 10 பேர் மாறுவர். இயற்கை விவசாயத்திற்கு உதவியது போலவும் இருக்கும்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement