Advertisement

உள்ளாட்சி தேர்தல் இப்போதைக்கு இல்லை!

உள்ளாட்சி தேர்தல் இப்போதைக்கு இல்லை!ஏ.எம்.ஏ.ராஜேந்திரன், காளையார்கோவில், சிவகங்கை மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: கடந்த, 2016, அக்., 24 அன்றுடன், உள்ளாட்சிகளின் பதவிக் காலம் முடிந்து விட்டது; 26 மாதங்கள் ஆகிவிட்டன. கிராமப்புற உள்ளாட்சிகளில், எந்த பணிகளும் நடைபெறவில்லை. எங்கள் ஊராட்சி ஒன்றியத்தில், 43 கிராம ஊராட்சிகள் உள்ளன. இதன் மேற்பார்வை அதிகாரியாக, வட்டார வளர்ச்சி அதிகாரி உள்ளார். அவருக்கு உதவியாக, அதிகாரிகள் இருந்தாலும், இறுதி முடிவு எடுப்பது, வட்டார வளர்ச்சி அதிகாரி தான்.

ஜன., 26, மே 1ம் தேதி, ஆக., 15, அக்., 2 தேதிகளில், அதாவது, ஆண்டுக்கு நான்கு முறை, கிராம சபைக் கூட்டம் நடைபெறுகிறது. அதில், ஊராட்சியின் நிதி இருப்பு, வளர்ச்சி, திட்டங்கள், தமிழக அரசின் இலவச திட்டங்கள், குடிநீர், மின் துறை சம்பந்தமான திட்டங்கள், விவரிக்கப்படும். ரேஷன் கடை நடத்தும் அலுவலர்கள், சத்துணவு அமைப்பாளர்கள், கிராம நிர்வாக அதிகாரிகள், ஆரம்ப சுகாதார அலுவலர்கள் உட்பட, அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்.

ஊராட்சி ஒன்றியத்தின் சார்பாக, ஒரு அலுவலரும் கலந்து கொள்வார். ஆனால், இவையெல்லாம் போலி விதிமுறைகளாகி விட்டன. கிராம சபை கூட்டத்தில் பொது நோக்கோடு கலந்து கொள்பவர்களைக் காட்டிலும், சுய நலத்தோடு கலந்து கொள்வோர் எண்ணிக்கை தான் அதிகமாக உள்ளது. இன்று வரை, ஊர் நலன் சம்பந்தப்பட்ட எந்த முடிவும் எடுக்கப்படவில்லை; கோரிக்கை மனு மீதும் நடவடிக்கை எடுக்காமல், கால தாமதம் செய்கின்றனர்.

இதைப் பார்க்கும்போதே, உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும் என்ற எண்ணம், எந்த அரசியல்வாதிகளிடமும், எந்த அதிகாரியிடமும் இல்லை என்பதைப் புரிந்து கொள்ளலாம். மேலும், இப்போது உள்ள அரசியல் சூழ்நிலையில், லோக்சபா தேர்தல் முடிந்த பிறகே, உள்ளாட்சி தேர்தல் நடக்க வாய்ப்பு உள்ளது.


---

எது தர்மமோ... ஒன்றும் புரியவில்லை!வைகை வளவன், மதுரையிலிருந்து எழுதுகிறார்: பிரம்மச்சாரியான சபரிமலை அய்யப்பனை, இரண்டு பெண்கள், கண்குளிரக் கண்டு தரிசனம் செய்திருக்கின்றனர்; இது நிச்சயம், கின்னஸ் சாதனை தான். பல ஆண்டு காலமாக பின்பற்றி வந்த சாஸ்திர சம்பிரதாயங்களை உடைத்தெரிந்ததில், கேரள முதல்வர் பினராயி விஜயன், அளவற்ற மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

அய்யப்பன் கோவிலில் நடந்த இந்த யுகப்புரட்சி, இனி இந்தியாவிலுள்ள அத்தனை கோவில்களிலும் நடக்க, வழி பிறப்பித்து விட்டது. மாளிகை புரத்து அம்மனைத் திருமணம் செய்யாமல், இத்தனை ஆண்டுகளாக, அய்யப்பன், 'டபாய்த்து' வந்தார். இனி, அந்த அம்மனின் நீண்ட நாள் ஆசையை, கேரள முதல்வர் துணிந்து நிறைவேற்றி, அய்யப்பனின் பிரம்மச்சரிய விரதத்தை முறியடித்து, இருவருக்கும் திருமணம் நடத்தி வைத்தாலும், வியப்பதற்கில்லை. நாத்திகர்களின் வாழ்த்து மழையில், நனைந்து கொண்டிருக்கிறார், முதல்வர் பினராயி விஜயன். எது தர்மமோ... ஒன்றும் புரியவில்லை!

---

குட்டையை குழப்பாதீர்கள்!அரிசி ஸ்ரீராம், சாத்துார், விருதுநகர் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: கிராமப்புறங்களில், பசுமாட்டைத் தொலைத்தால், யாரும் காவல் நிலையம் சென்று, 'என் பசுமாட்டைக் கண்டுபிடித்து தாருங்கள்' என, புகார் செய்ய மாட்டார்கள். அவ்வாறு புகார் செய்தால், காணாமல் போன பசு மாட்டை விட, இரண்டு மடங்கு அதிகமாக செலவழிக்க வேண்டி வரும் என்பதும், அவ்வாறு செலவழித்தாலும், பசுமாட்டைக் கண்டுபிடிக்க முடியாது என்பதும், அவர்களுக்கு நன்றாகத் தெரியும்.

அதனால் அவர்கள், சாமியாடிகளிடமோ, குறி பார்ப்பவர்களிடமோ சென்று குறி பார்ப்பர். குறி பார்ப்பவரும், மற்றவர்கள் கண்களுக்கு புலப்படாத, அவர்களின் கண்களுக்கு மட்டும் தெரிகின்ற தெய்வத்துடன் பேசுவதாகக் கூறி, கால் மணி நேரம், தனக்கு தானே பேசி, வெற்றிலையில் மை தடவி பார்ப்பர்.பின், 'உன் மாடு, தெற்கு திசையில் மேய்ந்து கொண்டிருக்கிறது. அது மேயும் இடத்தில், ஒரு ஆறும், அந்த ஆற்றின் ஒருபுறத்தில், ரயில்வே பாலமும், மறுபுறத்தில், பஸ் போகும் பாலமும், என் கண்களுக்கு தெரிகின்றன. எனவே, நீ உடனடியாக, தெற்கு திசை சென்று தேடினால், உனக்கு மாடு கிடைக்கும்' என்பர்.

ஆனால், எத்தனை கிலோ மீட்டர் தூரத்திற்குள் அந்த மாடு இருக்கிறது; எந்த இடத்தில் தேடினால் கிடைக்கும் என்று, துல்லியமாய் சொல்ல மாட்டார்கள். அவர்களிடம் குற்றமில்லை... தெரிந்தால் தானே சொல்லுவதற்கு! உதாரணமாக, சென்னையைச் சேர்ந்த ஒருவன், இவ்வாறு குறி பார்த்தால், அவன் இருக்கும் இடத்தில் இருந்து, தெற்கு திசை நோக்கி செல்வதாக இருந்தால், கன்னியாகுமரி வரை போக வேண்டி இருக்கும். அவ்வாறு தேடிப் போனால், அவனே காணாமல் போய்விடுவான். ஆக, கடைசி வரை, மாட்டை கண்டுபிடிக்க முடியாது.

அதே கதை தான், இப்போது பிளாஸ்டிக் ஒழிப்பு விவகாரத்திலும் நடந்து கொண்டிருக்கிறது. அரசு, பொத்தாம் பொதுவாக, 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை ஒழிக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறதே தவிர, அது, எந்த, 14 வகையான பொருட்கள் என, தெளிவாகப் பட்டியலிடத் தவறி விட்டது. விளைவு?

'முனிசிபாலிட்டி' என, ஆங்கிலத்தில் ஒழுங்காக எழுதத் தெரியாத அரசு அதிகாரிகள் எல்லாம், திடீரென, அறிவியல் அறிஞர்களாகவும், விஞ்ஞானிகளாகவும் மாறி, ஆளாளுக்கு ஒரு நெகிழி ஒழிப்பு பட்டி யலை, கையில் வைத்திருக்கின்றனர். மக்கள் பயன்படுத்தலாம் என, ஒரு அதிகாரி அனுமதி அளித்த ஒரு நெகிழி வகையை, 'கண்டிப்பாக பயன்படுத்தக் கூடாது' என, இன்னொரு அதிகாரி, தண்டம் விதிக்கிறார்.

ஆக, அரசு அதிகாரிகளுக்கே, என்ன வகையான நெகிழியை ஒழிக்கப் போகிறோம் என்கிற விபரமே தெரியாமல், மதுரைக்கு போக வேண்டிய பேருந்தை, மானாமதுரையை நோக்கி ஓட்டிக் கொண்டிருக்கின்றனர். அனேக இடங்களில், அரசு அதிகாரிகளுக்கும், வியாபாரிகளுக்கும் இடையே, தேவையற்ற பிரச்னை ஏற்பட்டு கொண்டிருக்கிறது. குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க முடியாது என்பதால், தடை செய்யப்பட்ட, 14 வகையான பொருட்களுக்குள், 14 ஆயிரம் வகையான உட்பொருட்கள் இருந்தாலும், அவை என்னென்ன என்பது குறித்து, தெளிவான பட்டியலை, வீடுதோறும், அரசு வினியோகிக்க வேண்டும்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Bhaskaran - Chennai,இந்தியா

    உள்ளாட்சி துறை அதிகாரிகள் நெகிழியை ஒழிப்பதைவிட தங்கள் பைகளை நிரப்புவதில் தான் அதிக அக்கறை காட்டுவதாக அனைவரும் கூறுகின்றனர்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement