Advertisement

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும்!

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும்!ஏ.அஸ்மாபாக் அன்வர்தீன், ராமநாதபுரத்திலிருந்து எழுதுகிறார்: துாத்துக்குடி, 'ஸ்டெர்லைட்' ஆலை குறித்து, இரு வேறு மாறுபட்ட கருத்துகள் உலவி வருகின்றன. மனிதன் உட்கொள்ளும் உணவு, எப்படி திடக்கழிவாகவும், சிறுநீராகவும் வெளியேற்றப்படுகிறதோ; மோட்டார் வாகனம் எப்படி தன் கழிவை, புகையாக வெளியேற்றுகிறதோ; அதேபோல் எந்தத் தொழிற்சாலையாக இருந்தாலும், அதற்கென்று கழிவுகள் நிச்சயமாக உண்டு.

ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கு, முறையான அனுமதி, அரசால், முன்பே வழங்கப்பட்டு விட்டது. கோடிக்கணக்கான முதலீட்டில், கட்டுமானங்கள், இயந்திரங்கள், குடியிருப்புகளுடன், பல்லாண்டு காலம், அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு, தொழிற்சாலை இயங்கி, தாமிர உற்பத்தி நடந்து வந்தது. இதன் விளைவாக, ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் அன்னியச் செலாவணி, மிச்சமாகியுள்ளது. அனுமதியை வழங்கி இத்தனையாண்டு காலம் ஆன பின், தற்போது, 'மூடு' என்றால், தாமிர இறக்குமதிக்காகும் செலவுகளை, எப்படி எதிர்கொள்வது? ஏற்கனவே அமைந்துள்ள கட்டுமானங்களும், குடியிருப்புகளும், இயந்திரங்களும் முழுமையாக வீணடிக்கப்படும் நிலை ஏற்படும்.

இந்தியா போன்ற வளர்ந்து வரும், இதர பல நாடுகளில், இத்தகைய தாமிர தொழிற்சாலைகள், வெற்றிகரமாக இயங்கி வருகின்றன. துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது, சட்டம் - ஒழுங்குப் பிரச்னையே தவிர, தொழிற்சாலை கழிவு வெளியேற்றத்துக்கும், இதற்கும் சம்பந்தமில்லை. சட்டம் - ஒழுங்கை பராமரித்துப் பாதுகாக்க வேண்டியது, காவல்துறையின் தலையாய கடமை. அதை தான், காவல்துறை செய்தது. இல்லையேல், 'தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன்' என்பது போல், மக்களில் ஒரு பிரிவினர், சட்டம் - ஒழுங்கை தம் கைகளில் எடுத்துக் கொள்வர்.

'வீசி எறியப்படும் கற்கள், முகவரியைத் தாங்கியபடியா, பறந்து செல்கின்றன...' என, முன்னாள் முதல்வர் அண்ணாதுரை, ஒருமுறை தன் பேச்சில் குறிப்பிட்டார். அது போல், துப்பாக்கிச் சூட்டில் வெளியேறும் தோட்டாக்கள், இன்னாரென முகவரி தாங்கியா பறக்கின்றன என்ற எதார்த்தத்தை, அனைவரும் எண்ணிப் பார்க்க வேண்டும்!

பசுமைத் தீர்ப்பாயம் வழங்கிய உத்தரவின் அடிப்படையில், தகுந்த சுற்றுச் சூழல் நிபந்தனையுடன், போதிய பாதுகாப்பு அம்சங்களுடன், மீண்டும் அந்த ஆலையை தொடர்ந்து நடத்த, அரசும், மக்களும் முன்வர வேண்டும்.

---

மண்ணை அள்ளி போட்டால் எப்படி?தி.சேஷாத்ரி, சென்னையிலிருந்து எழுதுகிறார்: தமிழகத்தில், அரசியல்வாதிகளின், 'பினாமி'களால், போதிய அடிப்படை வசதி செய்யப்படாமலும், தகுதி இல்லாத ஆசிரியர்களை நியமித்தும், பொறியியல் கல்லுாரிகள், பல இயங்குகின்றன. அந்த கல்லுாரிகளில், கற்றல், கற்பித்தலில், நிறைய குறைபாடுகள் நிலவுகின்றன. சிறுபான்மையினருக்கானது என்ற பெயரிலும், சில கல்லுாரிகள் நடக்கின்றன; இவற்றில் சில, தன்னாட்சி பொறியியல் கல்லுாரிகள். இவர்களே கேள்வித்தாள் தயாரித்து, இவர்களே திருத்திக் கொள்வர். இதற்கு, 'டீம்டு யுனிவர்சிட்டி' என்ற பெயரும் உண்டு.

'சில பொறியியல் கல்லுாரிகள், பாலிடெக்னிக் கல்லுாரிகள் அங்கீகாரம் ரத்து செய்யப்பட உள்ளது' என, நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது. 'ஏழு ஆண்டுகளுக்கு மேல் பாடங்களில், 'அரியர்' வைத்தால், பட்டம் கிடையாது' என்ற செய்தியும் வந்துள்ளது. அதற்கு, 'வினாத்தாள் தயாரிக்க செலவு ஆகிறது' என, காரணம் கூறப்பட்டுள்ளது; இந்த வாதம் ஏற்புடையது இல்லை. வினாத்தாள் தயாரிக்க ஆகும் செலவிற்கு, 'அரியர்ஸ்' வைத்துள்ள மாணவர்களிடமே வசூல் செய்யலாமே... அதை விடுத்து, தடாலடியாக, 'பட்டம் ரத்து' எனக் கூறினால், பெற்றோர் கலங்க மாட்டார்களா...

அரசும், மானிய குழுவும் எல்லா தவறுகளையும் செய்து, இப்போது, பெற்றோரை தண்டிக்க உள்ளன. கற்பித்தலில், போதிய அனுபவம் இல்லாத ஆசிரியர்களை நியமித்தது, யார் குற்றம்; அப்போது, எங்கே போனது, இந்த மானிய குழு? பல லட்சங்களை செலவு செய்து, தங்கள் பிள்ளைகளை, பெற்றோர் படிக்க வைக்கின்றனர். ஏழைகள் பலர், வங்கிகளில் கடன் வாங்கி படிக்க வைத்து, தம் குழந்தைகளை, பொறியியல் பட்டதாரி ஆக்க, கனவு காண்கின்றனர்.இவை எல்லாவற்றிலும், அரசும், மானியக் குழுவும், மண்ணை அள்ளி போட்டால், பெற்றோர் எப்படி பொறுத்துக் கொள்வர்?

சென்னை அண்ணா பொறியியல் பல்கலை தலையிட்டு, மாற்று ஏற்பாடு செய்து தர வேண்டும். மாணவர்கள் கல்வி நலனுக்காக உருவாக்கப்பட்டதே, பல்கலைக்கழகம் மற்றும் மானியக்குழு; இவை, கடமைகளை சரி வர செய்யவில்லை என்பதை, அறிவிக்கப்படும் ஒவ்வொரு அறிவிப்பும் உணர்த்துகிறது. போலியாக சில கல்வி நிலையங்கள், படிப்பில் தவறிய மாணவர்களை குறி வைத்து, போலி சான்றிதழ்களை விற்க முயலும். அதை தடுத்து, தமிழக உயர் கல்வி அமைச்சர் கவனித்து, ஏழு ஆண்டுகள் தடை போன்ற நடவடிக்கைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும்!

---

தென்னக ரயில்வேக்கு ஒரு வேண்டுகோள்!வி.புருஷோத்தமன், விழுப்புரத்திலிருந்து எழுதுகிறார்: செங்கல்பட்டிலிருந்து, விழுப்புரம் வரை, இரட்டை ரயில் பாதை உள்ளது. ரயிலை, காலையில் இரு முறையும், மாலையில் இரு முறையும், இரு மார்க்கத்திலும் இயக்கினால், சென்னைக்கு பணிக்கு செல்வோர், பள்ளி, கல்லுாரி மாணவர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் அனைவருக்கும் பேருதவியாக அமையும்.

பஸ் கட்டணம் அதிகம் என்பதால், ரயிலில் செல்வது, அவர்களுக்கு, பல வகைகளிலும் மிகவும் சவுகரியமாக உள்ளது. தற்போது, அரக்கோணம் முதல், விழுப்புரம் வரை, மேல்மருவத்துார் ரயில் என்ற பெயரில், பிற்பகல், 1:45 மணிக்கு, ஒரு முறை மட்டும் இயக்கப்படுகிறது. இந்த ரயிலால், மேற்கூறிய பயணியருக்கு எவ்வித பயனும் இல்லை.

விழுப்புரத்திலிருந்து காலை, 5:30 மற்றும் 6:30க்கு இரண்டு ரயில்களும், சென்னையிலிருந்து மாலை, 4:30 மற்றும் 5:30க்கு இரண்டு ரயில்களும் இயக்கினால், பொதுமக்களுக்கு பேருதவியாகவும், ரயில்வேக்கு கணிசமான வருவாயும் கிடைக்க, வழி செய்யும்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (4)

 • Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா

  ஏழு ஆண்டுகள் என்பதே அதிகம். நன்றாக படித்தால் 4 வருடம் என்ன 3 வருடம் கூட போதும் . படிக்கும் காலத்தில் ஊர் சுற்றுவது, ஆசிரியர் சொல் கேளாதது தான் 7 வருடம் கழித்தும் டிகிரி முடிக்க முடியாமல் உள்ளார்கள். இதில் ஆசிரியர்களை குறை கூறுவதை விட்டு ஒழுங்காக படிக்க சொல்லுங்கள். நாங்கள் படித்தபொழுது பல பாடங்களுக்கு ஆசிரியரே கிடையாது எல்லாம் ஸெல்ப் ஸ்டடி தான். காலேஜ் என்று வந்துவிட்டு ஆசிரியரை ஒரு கையேடு ஆகத்தான் நினைக்கவேண்டுமே தவிர அவர்களை எலிமெண்டரி ஸ்கூல் டீச்சர் போல் ஸ்பூன் பீடிங் செய்வார்கள் என்று நெனைக்க கூடாது அதுவும் இன்ஜினியரிங்ல். அப்படி நினைத்தால் வெறும் டிகிரி மட்டுமே வாங்கலாம் ஆனால் கற்பனை திறன், இன்னோவேடிவ் திங்கிங் இல்லாமல் எங்கும் நிலைக்க முடியாது

 • Devanand Louis - Bangalore,இந்தியா

  பகல் கொள்ளை அடிக்கும் உணவு வழங்கல் ஊழியரின் அட்டகாசங்கள் சென்னை அயனவரத்தில் - தமிழக அரசாங்கம் அறிவித்துள்ள பொங்கல் பொருட்கள் + ருபாய் 1000 வழங்காமல் ரேஷன் ஊழியர்கள் இழுத்தடிக்கின்றார்கள் ,சென்னை அயனவரத்தில் இந்த பகல் கொள்ளை நடக்கின்றது ,செட்டி தெருவிற்குள்ள மக்களின் பொருட்களையும் ரூபாய் 1000 பணத்தையும் வழங்காமல் அப்புறமா வான்களென்று அங்கு வரும் மக்களிடம் ரேஷன் ஊழியர்கள் சொல்லி இழுத்தடிக்கின்றனர் , தமிழக அரசாங்கம் அறிவித்துள்ளபடி அயனவர்த்தில் ரேஷன் ஊழியர் பொருட்களையும் பணத்தையும் வழங்காமல் உள்ளனர் ,இன்வென்றால் பணத்தை வழங்காமல் இழுத்தடித்து கடைசியில் அங்குல ரேஷன் ஊழியர்கள் சுருட்டிவிடலாமென்று ஒரு திட்டத்தை வைத்துளார்கள் , ஆகையால் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் இந்த விஷயத்தை கண்காணிக்கவேண்டுமென்பது அயனாவரம் மக்களின் வேண்டுகோள்

 • venkat Iyer - nagai,இந்தியா

  தொழிலை தமிழக அரசும் ,படிப்பறிவு இல்லாத மக்களும் வளர விட மாட்டார்கள்

 • venkat Iyer - nagai,இந்தியா

  திரு.அன்வர்தீன் குறிப்பிட்டது போல ஸ்டெரிலைட் ஆலையை திறப்பதன் மூலம் தமிழ் நாடு அந்நிய முதலீடுகளை ஈர்க்க முடியும்.இந்த ஆலையை மூட வேண்டும் என்ற போராட்டத்தினால்,கொஞ்சமாக கழிவுகளை கொடுக்கும் நிறுவனங்கள் ,கூட தமிழ் நாட்டுக்கு வருவதற்கு பயந்து(அவர்கள் ஏன் பயப்பட வேண்டும்)வேறு மாநிலங்களுக்கு,குறிப்பாக ஆந்திராவில் நெல்லூர் பகுதிகளுக்கு(துறைமுகம் சென்னையில் என்பதால்) இடங்களை ஆய்வு செய்து வருகின்றன.தமிழக அரசு நடத்தப்போகும் தொழில்துறை முதலீட்டு மாநாட்டில் பல முதலீட்டாளர்கள் வைக்கப்போகும் பிரச்சனையேமிகப்பெரிய ஸ்டெரிலைட் தொழில் சாலைகளுக்கு கூட தமிழக அரசு சரியான பாதுகாப்பு அளிக்க முடியாத நிலையில் முதலீடு செய்ய வாருங்கள் என்று எதனை வைத்து கேட்கிறீர்கள் என்ற கேள்வி வரும்.இதற்கு அரசு சரியான விளக்கம் கொடுக்க முடியாமல் திணறும்.ஸ்டிரைலைட் நிறுவனத்தின் மூடல் காரணம் உண்மையில் ,பல்வேறு அரசியல் கட்சிகள்,கட்சி நிதிக்காக அதிகமாக பணம் கேட்க துவங்கியது போல உள்ளூர் திருவிழாக்களுக்கும் மிகவும் அதிகமாக ஒவ்வொருவரும் போட்டி போட்டு பணம் கேட்க துவங்கியதால்,ஆலை அதனை கட்டுப்படுத்தி,ஆலை டிரஸ்ட் போன்ற அமைப்பினைக் ஏற்படுத்தி பொது மக்களுக்கு பல்வேறு திட்டங்களில் நலப்பணிகளை செய்ய ஆரம்பித்து செய்து வந்து மக்களிடம் நல்ல மதிப்பினை பெற்று வந்த பின்னனியை அரசியல் பிரமுகர்கள் தொழில் சாலைகள் மூலம் மக்களுக்கு நோய்கள் வருகின்றன,அதற்காகத்தான் இப்படி மக்கள் மனதை மாற்ற செய்து வருகின்றார்கள் என்று 2006-ம் வருடம் ஒருவர் ஆரம்பித்தார்.இதுவே இன்று வளர்ந்து போராட்டங்களாக மாறிவிட்டு தொழில் சாலைககள் மூடும் நிலைக்கு ஒரு காரணமாக இருப்பதை அங்கு பணி புரியும் நண்பர் ஒருவர் தெரிவிக்கின்றார்.இன்று கூட நெய்வேலியில் நிஷக்கரி கனிம வளங்கள் மிகுந்து இருந்தும்,அவற்றை எடுக்க முடியாதப்படி ,நிலங்களை கையகப்படுத்த முடியாத சூழ்நிலையை புவனகிரியில்வாழும் மக்கள் ,அரசியல் கைகைலிகளால் ஏகப்பட்ட கன்டீஷனை வைத்து போராட்டம் செய்து வருகின்றார்கள்..இதனை பார்க்கும்போது,அரசியல்வாதிகளும் மக்களும்(வேலை வெட்டி இல்லாத)சேர்ந்து தொழிலை வாழ வைக்க முடியாத நிலையைத்தான் உருவாக்கி வருகின்றார்கள்.யாரும் விஸசாயம் செய்ய இன்றைய காலத்து இளைஞர்கள் சேற்றில் இரங்க தயார் இல்லை.அதற்கு ஏற்றால் போல் தமிழ் நாட்டில் நீர்வளமும் குறைந்து போய் ஒரு போகமாக மாறிவிட்டது.தொழில் சாலைகள் வர அரசும் முன் வருவதும் இல்லை.வந்து லாபம் ஈட்டினால் பிரச்சனைகளை உஅனைத்து கட்சிகளும் ஓட்டுக்காக போட்டி போட்டு போராட்டங்களை செய்து மூட வைப்பதுதான் சாதனை வரலாறாக அமைகிறது.இதில் பாதிப்பது சினசுற்றேப்புறத்தில் உள்ள படித்த இளைஞர்கள்தான் வேலை இல்லாமல் அலைகின்றன.தமிழ் நாடு போராட்ட கலமாகத் தான் இனிமேல் இருக்கும் நிலை இருக்கின்றது.மீடியாக்கள் போட்டி போட்டுக்கொண்டு அதனைத்தான் காட்டுகின்றன.மன சாட்சிகளுக்கு பயந்து இதனை மக்களுக்கு காட்டினால் அதன் விளைவு மற்றும் மக்களின் மன நிலை எப்படி பாதிக்கும்,நாட்டின் பொருளாதார விழுச்சி ஏற்படும் என்பதை ஏன் உணரவில்லை என்று தோன்றுகிறது.சொய்தூ ஊடகங்கள்,அதன் உண்மையை அறிந்து செயல்படலாமே.தொழிலை செய்ய விடுங்கள் நண்பர்களே.எல்லா தொழில் சாலைகளுக்கும் மற்றும் கழிவு என்பது நண்பர் கூறுவது போல உண்டு.கழிவு பாதிக்கின்றது என்று சொன்னால்,உங்களின் கழிவு கூட எனக்கு நாற்றம் அடிக்கின்றது என்று சொல்லி அவற்றை நிறுத்த சொல்லுங்கள்.இது விதன்டவாதம் அல்ல.தமிழகம் தொழில் சாலைகள் எண்ணற்ற அளவில் வர வேண்டும்.தன்னிறைவு அடௌய வேண்டும்.அப்போதுதான்,நாம் பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைய முடியும்.மக்களை சந்தோஷமாக வாழ விடுங்கள்.எதற்கு எடுத்தாலும் போராட்டம் என்று நிற்பவர்களுடன் கை கோர்க்காதீர்கள்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement