Advertisement

அலசப்படட்டும் அதிகார ஊழல்கள்...

புத்தாண்டு நாளில் பிரதமர் மோடி, தனியார் 'டிவி'க்கு ஒன்றரை மணி நேரம் அளித்த பேட்டி, அவரது நான்கரை ஆண்டு கால ஆட்சியின், 'ரிப்போர்ட் கார்டு' என்றே கருதலாம்.பிரதமர் மோடியை கண்டபடி கேள்வி கேட்காமல், பவ்யமாக கேள்வி கேட்டதாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் கூறுவது, மோடியின் மீது உள்ள வெறுப்பை காட்டுவதாகும்.இன்றைய நிலையில், முதன் முதலில், மோடி பிரதமர் ஆன போது இருந்த, அபார மீடியா ஆதரவுடன் இல்லை. மீடியா ஆதரவு மட்டும் அல்ல... சமூக வலைதளங்களில் வரும் செய்திகள், நிர்வாகம் நடத்துவோர் அனைவருக்கும், எதிர் வினையாக உள்ளன.ஒரு பக்கம், ஊழல் புகார்களில் சிக்கியிருக்கும் அரசியல் தலைவர்கள் கூறும் எதிர்மறைக் கருத்துகளுக்கு, ஆதரவு அதிகமாக காணப்படுகிறது. மறுபக்கம், விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி என்பது, அதிக உச்சத்திற்கு சென்று, அது வங்கி கையிருப்பை, காலப்போக்கில் கரைக்கும் அபாயமாக இருக்கிறது.இது, பொதுத்துறை வங்கிகள் சந்திக்கும் அபாயமாகும். இதை, இத்தனை ஆண்டுகளாக மறைத்திருந்தது ஏன்? அது மட்டும் அல்ல... விவசாயிகளுக்கு கட்டுப்படியாகும் விலை எவ்வளவு? அது எத்தனை உற்பத்தி பொருட்களுக்கு என்பதை அறுதியிட, மோடி அரசு முயற்சிப்பது பெரிய திருப்பம்.ராமஜென்மபூமி விஷயத்தில், எத்தனை ஆண்டுகள், ராமர் பிறந்த இட சர்ச்சை தொடரும் என்பதை, அறுதியிட வேண்டிய காலம் வந்திருக்கிறது. ராமபிரான், கண்ணன் ஆகியோர், காலம் காலமாக போற்றப்படுபவர்கள். இவர்கள், ஆக்கிரமிப்பாளர்கள் அல்ல. ஆகவே, இன்று சுப்ரீம் கோர்ட், இந்த சர்ச்சையில் உள்ள வழக்கை, முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என, பலரும் வலியுறுத்தலாம்.அதை பிரதமர் மோடி, நாசுக்காக, சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்குப் பின், 'ராமஜென்ம பூமி குறித்த சட்டத்தை' முடிவு செய்ய முடியும் என்றது, தெளிவான தகவல். ராமஜென்ம பூமியில் கோவில் கட்டுவதை, பா.ஜ., தன் ஆரம்ப காலம் முதல் வலியுறுத்தி வருவதை, அதன் தேர்தல் அறிக்கைகள் காட்டுகின்றன.இனி இந்த விஷயத்தில், விஸ்வ இந்து பரிஷத், ஆர்.எஸ்.எஸ்., போன்ற அரசு ஆதரவு, 'சங்பரிவார்' தங்கள் நிலையை அறிவிப்பதுடன், அடுத்த தேர்தலில், தங்கள் நிலை என்ன என்பதை தெரிவிக்கலாம்.முன்னர், வாஜ்பாய் கூட்டணி ஆட்சி முடிந்ததும், அடுத்த தேர்தலில், 'சங்பரிவார்' அமைப்பு, அவசர நிலை காலம் முடிந்தபின், இந்திராவை எதிர்த்த காலம் போலவோ அல்லது சென்ற லோக்சபாவில், மோடிக்கு அளித்த ஆதரவை போலவோ, முழுவீச்சில் அளிக்க முன்வரவில்லை. இந்த அமைப்புகள் மத ரீதியாக செயல்படுவது இல்லை என்பதற்கும், நேரடி அரசியலில் ஈடுபடுவதில்லை என்பதற்கும், இவை அடையாளமாகக் கருதலாம்.அன்றைய பிரதமர் ராஜிவ், லோக்சபாவில், 410க்கும் அதிகமாக, 'சீட்'கள் பெற்றிருந்த காலத்தில், ஷாபானு என்ற பெண்ணுக்கு ஜீவனாம்சம் தர, சுப்ரீம் கோர்ட் வலியுறுத்தியதை மாற்றி, அவசரச் சட்டம் கொண்டு வந்தது, பலருக்கு நினைவிருக்காது. அதை, மோடி இன்று நினைவுபடுத்துவது, காங்கிரசின் போக்கை காட்டுவதாகும்.தவிரவும், பணவீக்கம் கட்டுக்குள் இருக்கிறது. சுகாதார நலத்திட்டமான, 'ஆயுஷ்மான் பாரத்', உயர்கல்வி நிலையங்களில் ஊழல் குறைப்பு, தனி நபர் மீதான வரி அதிகமாகாத செயல் ஆகியவை, பா.ஜ.,வின் வாக்கு வங்கிகளாக கருதப்படும், மத்திய தர மக்களுக்கு ஆதரவானவை.ஆகவே, 'ரபேல்' விமான ஊழல் என்று பேசி, தேர்தல் ஆதாயத்தையும் அடைந்த காங்கிரஸ், இப்போது பிரதமர் எழுப்பும் சந்தேகங்களுக்கு, பதில் தர வேண்டும். இந்த ஊழல் புகாரை, பிரதமர் மறுத்தபின், காங்கிரஸ் தலைவர் தன்னிடம் உள்ள புகார் வீடியோவை, லோக்சபாவில் தாக்கல் செய்து, அதற்கான பொறுப்பை ஏற்க மறுத்துவிட்டார்.நிதியமைச்சர் அருண்ஜெட்லி, இந்த வீடியோ தவறான தகவல் கொண்டது என்று நிரூபிக்கப்பட்டால், சபை விதிகளின்படி ராகுல் மீது, உரிமை மீறல் புகார் வருவதுடன், முடிவில் சபையில் இருந்து, விலக்கும் உத்தரவு வந்தால், சந்திக்க நேரிடும் என்ற கருத்து ஆராயத்தக்கது. ராகுல் அதற்குப் பின் மவுனம் காத்தது, சபை நடப்பில் அர்த்தமுள்ள வாதம் வெளியானதன் அடையாளம்.அதைவிட, காங்கிரஸ் தலைமை, 'ஹெலிகாப்டர்' ஊழலில் சிக்கியிருப்பது, மிகப்பெரும் தலைவரான மோதிலால் நேரு துவக்கிய, 'நேஷனல் ஹெரால்டு' சொத்தில் முறைகேடு, அக்கட்சியின் தலைவர் ஒருவர், அன்னியப் பணப் பரிமாற்ற மோசடி தொடர்பாக, கோர்ட் படிகளில் ஏறி வருவதை, மோடி சொல்ல வேண்டிய கட்டாயம், புத்தாண்டில் வந்திருக்கிறது.இந்த ஊழல் புகார்கள் அனைத்தும் அலசப்படுவதும், நம் ஜனநாயகத்திற்கு வலு சேர்க்கும். அரசியலில், நல்ல சக்திகள் நடமாட வழி வகுக்கலாம்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement