Advertisement

ஒழுக்கம், கட்டுப்பாடுகளை நடனம் வளர்க்கிறது!

பரதம் குறித்து கூறும், நடனக் கலைஞர், ஸ்ரீகலா பரத்: உடலும், மனமும் எப்போதும் உற்சாகமாக, கட்டுக்கோப்பாக இருக்க வேண்டுமானால், நடனமே சிறந்த தேர்வு. அதுவும், நம் பாரம்பரிய பரதநாட்டியத்தைப் போன்ற உன்னதமான உடற்பயிற்சி, வேறு இல்லை. 1969-ல், 7 வயதில் நடனம் கற்க ஆரம்பித்தேன்.

நடன ஆசிரியர், எங்கள் வீட்டுக்கு அடுத்த தெருவிலேயே இருந்ததால், மிகவும் சவுகரியமாக இருந்தது. 1972-ல், அரங்கேற்றம். 1979-ல்,திருமணம் ஆனது. என் கணவர், கிரிக்கெட் பிளேயர்.'தினமும் தவறாமல் அஞ்சாறு நடன, 'ஸ்டெப்ஸ்'களைப் போட்டு வந்தால் போதும்; உடம்பு கட்டுக்கோப்பாக இருக்கும்' என, நடன ஆசிரியர் சொல்லியதை, பின்பற்றினேன்.

பரத நாட்டியத்தை, யோகா போல செய்வதாக, எங்களது குடும்ப மருத்துவர் கூறுவார். ஒரு துடிப்போடு,நடனத்தை தொடர்ந்து வருகிறேன்.கடந்த, 1984-ல், மூளையில் சிறு கட்டி வந்து, அறுவை சிகிச்சைக்காக, சிறு ஓய்வுக்கு பின், 1986-ல் இருந்து, மறுபடியும் நடனம் ஆட ஆரம்பித்தேன். 1992-ல், மார்பு பகுதியில் சிறிதாக அறுவை சிகிச்சை செய்ய இருந்ததால், நடனத்துக்கு மீண்டும் ஓய்வு.

சோதனையான காலங்களில், எனக்கு துணையாக இருந்து, தைரியத்தையும், எதையும் சமாளிக்கும் ஆற்ற லையும் தந்தது, நான் கற்ற பரதம் தான்.கடந்த, 1993- முதல், நடனம் எனக்கு ஏறு முகம் தான். 2007 - 09 வரை, உடல் எடை கூடியபடியே இருந்தது.வயது தான் காரணம் என, அனைவரும் கூறினர். இருப்பினும், 2010-ல், என் பிரத்யேக பயிற்சி மருத்துவரின் வழிகாட்டுதலின்படி, மிகச் சிறப்பான உடற்பயிற்சி செய்து, ஆறு மாதத்தில், 12 கிலோ வரை குறைத்தேன். பார்த்தவர் அனைவரும், அசந்து போயினர். அப்போது முதல், சரியான எடையை தக்கவைத்து வருகிறேன்.

மதிய நேரம், 10 நிமிஷம், குட்டித் துாக்கம் போட்டவுடன், மனதுக்கும், உடம்புக்கும் புத்துணர்ச்சி வந்து விடும். டிசம்பர் சீசனில், தனியாகவும், குழுவாகவும் நிறைய நடன நிகழ்ச்சிகளைக் கொடுக்க வேண்டி இருப்பதால், அப்போது மட்டும், 'ஜிம்' பயிற்சி செய்ய மாட்டேன். 50 வயதுக்குப் பின், பெண்களுக்கு, 'ஹார்மோன்' பிரச்னை நிச்சயம் வரும்.நிறைய பெண்கள், 'உடற்பயிற்சி செய்ய நேரமில்லை' என்கின்றனர். அதை நான் ஒப்புக் கொள்ளவே மாட்டேன். அதெல்லாம் நம்மை நாமே ஏமாற்றி தப்பிக்க சொல்லும், ஒரு சாக்குப்போக்கு தான். மனமிருந்தால் மார்க்கம் உண்டு.

பரத நாட்டியம், ஒரு தெய்வீகக் கலை என்பது, 100க்கு 100 உண்மை. நமக்குள் ஒழுக்கங்களை, கட்டுப்பாடுகளை நடனம் வளர்க்கிறது; மனதை சந்தோஷப்படுத்துகிறது.அந்த பரதத்தை, ஒரு தபஸ் போல ஏற்று உடலையும், மனதையும் அதற்காக அர்ப்பணிக்க வேண்டும். அப்படிச் செய்ய, நம் உடல், மனதை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். பரதம், என் உயிர். அதில் திளைத்திருப்பதில் தான் எனக்கு ஆனந்தம்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement