Advertisement

ஆவன செய்வாரா கமிஷனர் விஸ்வநாதன்!

கோதை ஜெயராமன், சென்னையிலிருந்து எழுதுகிறார்: காமராஜர் ஆட்சியில், போலீஸ் துறை அமைச்சராக இருந்தார், கக்கன். அப்போதெல்லாம், பொதுமக்களின் பாதுகாப்பு அரணாகவும், கையூட்டு பெறாமலும், தமிழக காவலர்கள் நேர்மையாக பணியாற்றினர்.

இன்று, காவலர்கள் பலர், வீட்டிலிருந்து சீருடையில், ஒரு காசு கூட இல்லாமல் பணிக்கு வந்து, இரவு வீடு திரும்பும் போது, கணிசமான பணத்துடன் செல்வதை, வாடிக்கையாக வைத்துள்ளனர். இரு சக்கர வாகன ஓட்டிகளிடம், அனைத்து ஆதாரங்களும் இருந்தாலும், வாகனத்தை நிறுத்த சொல்லி, அதன் சாவியை எடுத்து விடுகின்றனர். கேட்டால் கொடுக்க மறுப்பதுடன், கேவலமான வார்த்தைகளால் பேசுவதுடன், சில நேரங்களில், பொதுமக்கள் முன், தாக்கவும் முற்படுகின்றனர்.

போலீசாரிடம் இருந்து, தங்களை பாதுகாத்து வாழ்வதே, பொதுமக்களுக்கு பெரும் போராட்டமாக உள்ளது. பெண்களை கிண்டல் செய்வோர், நகைகளை பறிப்போர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இது பற்றி புகாரை பதிவு செய்ய, சம்பந்தப்பட்டோர் சென்றால், காவலர்கள் மெத்தனப் போக்கையே கடைப்பிடிக்கின்றனர். புகாரை பதிவு செய்ய, 'கையூட்டு' கேட்பதை, வாடிக்கையாக கொண்டுள்ளனர். சென்னை, எஸ்பிளனேடு காவல் நிலையத்தில், விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மாற்றுத் திறனாளி, ஜெயகுமார் என்பவர், போலீசாரின் கடுமையான தாக்குதலில் உயிரிழந்தார் என்ற செய்தி வெளியானது.

அதற்காக, எஸ்பிளனேடு இன்ஸ்பெக்டரை, போலீஸ் கட்டுப்பாடு அறைக்கு மாற்ற, அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார், சென்னை மாநகர கமிஷனர்; இது, சரியான நடவடிக்கையாக தெரியவில்லை. சென்னையில் உள்ள, ௧௬ சட்டசபை தொகுதி அல்லது, ௧௫ மண்டலங்களில், தினம் ஒரு பகுதி வீதம், போலீஸ் கமிஷனர், ஏ.கே.விஸ்வநாதன் வலம் வந்தால், போலீசார் செய்யும் தில்லுமுல்லுகள், வெளிச்சத்துக்கு வரும்!

தவறு செய்வோர், கடைநிலை காவலராக இருந்தாலும், உயர் பதவி வகிப்போர் ஆனாலும், அவர்களை பணிமாற்றம், இடமாற்றம் செய்யாமல், ஒரு ஆண்டு அல்லது நீண்ட காலத்திற்கு பணி நீக்கம் செய்யப்பட வேண்டும். பெரிய தவறு செய்திருந்தால், பணியை விட்டே துாக்கவும் அஞ்சக் கூடாது. அப்படி செய்தால், போலீசாருக்கு பயம் வரும்; பொதுமக்களின் நன்மதிப்பை பெறும் வகையில் பணியாற்ற முயற்சிப்பர்!

---

ஏமாளிகளாக இனி இருக்காதீர் தமிழர்களே!எஸ்.ராமு, சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: இலவச பொருட்களால், மக்களிடம் ஓட்டு வாங்கும் கலாசாரத்தை, முதன்முதலாக துவக்கி வைத்தவர், கருணாநிதி.

தமிழகத்தில், 2006ல் நடந்த சட்டசபை தேர்தலின் போது, 'ரேஷன் கார்டுதாரர்களுக்கு, இலவச கலர், 'டிவி' தருவோம்; 1 ரூபாய்க்கு கிலோ அரிசி வழங்குவோம்' என வாக்குறுதி அளித்தார். அந்த தேர்தலில், தி.மு.க.,விற்கு தனி மெஜாரிட்டி கிடைக்காவிட்டாலும், கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன், ஐந்து ஆண்டுகளை நிறைவு செய்தார், கருணாநிதி!

அடுத்து நடந்த, 2011 சட்டசபை தேர்தலில் சுதாரித்து கொண்ட, ஜெயலலிதா, 'இலவச மின் விசிறி, கிரைண்டர், மிக்சி தருகிறோம்; இலவச அரிசி தருகிறோம்' என, வாக்குறுதி அளித்தார். மக்கள் அமோக ஆதரவுடன், தனி மெஜாரிட்டி பலத்துடன் ஆட்சி பீடத்தை ஏற்றார், ஜெயலலிதா.

அதன் பின், 2016 தேர்தலில், '௧௦௦ யூனிட் வரை இலவச மின்சாரம், இலவச ஆடு, கோழி வளர்ப்பு திட்டம், பெண்களுக்கு மானிய விலையில் ஸ்கூட்டர்' போன்ற வாக்குறுதிகளை, ஜெயலலிதா அளித்தார். அதை நம்பி, மீண்டும், அ.தி.மு.க.,வை ஆட்சியில், மக்கள் அமர்த்தி விட்டனர். ஜெயலலிதா மறைவிற்கு பின், அவரது தொகுதியான, ஆர்.கே.நகரில் நடந்த இடைத்தேர்தலில், சசிகலா குடும்பத்தைச் சார்ந்த, தினகரன், சுயேச்சையாக போட்டியிட்டார். அந்த தேர்தலில், 20 ரூபாய் டோக்கன் கொடுத்து, ஓட்டுக்கு, 10 ஆயிரம் ரூபாய் தருவதாக கூறி, வெற்றி பெற்றார்; அத்துடன், தனியாக, அ.ம.மு.க., என்ற கட்சியையும் துவக்கி விட்டார்.

அவர் செல்லும் இடங்களில் எல்லாம், 'தமிழகத்தில் நடக்கவுள்ள, 20 சட்டசபை தேர்தலில், எங்கள் கட்சி அமோகமாக வெற்றி பெறும்; எந்த தேர்தல் நடந்தாலும், நாங்கள் தான் வெல்வோம்' என்கிறார். அப்படியானால், 'மக்கள் ஏமாளிகள்; பணத்தையோ, பொருளையோ கொடுத்தால், எப்படியும் வெற்றி பெற்று விடலாம்' என, கணக்கு போடுகிறார்.

அ.தி.மு.க.,விலும், அடுத்த தேர்தலில், 'ரேஷன்கார்டுதாரர்களுக்கு, மொபைல் போன் வழங்குகிறோம்' என, இலவச அறிவிப்பை வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வருகிறது. யார் எந்த பொருள் கொடுத்தாலும், அவற்றை வாங்காமல் ஓட்டளிக்க, ஒவ்வொரு தமிழனும் முன் வந்தால், ஊழல், லஞ்சம் இல்லா கட்சி, ஆட்சியில் அமரும்!


---

கள நிலவரம் தெரியவில்லை மோடிக்கு!க.அருச்சுனன், செங்கல்பட்டிலிருந்து எழுதுகிறார்: சமீபத்தில், ராஜ்யசபாவில், 'முத்தலாக்' சட்ட விவாதத்தின்போது, அ.தி.மு.க., - எம்.பி., அன்வர் ராஜா, பா.ஜ.,வை கடுமையாக தாக்கி பேசினார். மேலும், 'ஜி.எஸ்.டி., பண மதிப்பு இழப்பு ஆகியவற்றால், ஐந்து மாநிலங்களில், பா.ஜ., தோல்வியை தழுவியது' என, காரசாரமாக பேசியுள்ளனர். அவரின் அந்தப் பேச்சுக்கான விலை, நிலைமை இனி மேல் தான், அ.தி.மு.க.,வில் தெரியவரும்.

தனியார் சேனல் விவாத மேடைகளில், பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணி வருமா எனும் கேள்விகளுக்கு, எவரும் உண்டு என்றோ, இல்லை என்றோ பதில் சொல்லவில்லை. 'தேர்தல் சமயம் தான் தெரியும்' என்கின்றனர். தமிழகத்தில், பா.ஜ., காலுான்றவில்லை. 'கஜா' புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை, பிரதமர் மோடி பார்க்கவில்லை; நிவாரணம் நிதியும், சிறிது தான் கொடுத்துள்ளார். எனவே, தமிழகத்தில், மோடிக்கு எதிர்ப்பலை உருவாகி உள்ளது.

எனவே, கூட்டணி விவகாரத்தில், பா.ஜ.,வுடன் சேர்ந்தால், இடம் தெரியாமல் போய்விடுவோம் என்ற அச்சம், அ.தி.மு.க.,விடம் ஏற்பட்டு உள்ளது. அடிப்படை பணிகள் ஏதும் செய்யாத, பா.ஜ.,வோ, தமிழகத்தில், அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்தால், வென்று விடலாம் என, கனவு காண்கிறது. ஊழல் புகாரில் சிக்கியுள்ள தமிழக அமைச்சர்கள் மீது, மத்திய, பா.ஜ., அரசு எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை; அவர்களை விமர்சிப்பது கூட இல்லை.

சமீபத்தில், 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம், கர்நாடகாவில் உரையாற்றிய, பிரதமர் மோடி, 'மதச்சார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி ஊழல் ஆட்சியாக உள்ளது' என, விமர்சித்துள்ளார். ஆனால், தமிழகத்தில் அதே போல், வீடியோ கான்பரன்ஸ் நடந்தபோது, எந்த விமர்சனத்தையும் வைக்கவில்லை. இந்த நாடகம் எதுவும் போதாது மோடி அவர்களே... களத்தின் உண்மை நிலவரத்தை, இன்னும் நீங்கள் புரிந்து கொள்ளவில்லை!

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (4)

 • venkat Iyer - nagai,இந்தியா

  Sir, Tamil Nadu govt get from money in Central Govt fund in various scheme.TN earning fund from tasmac Out of 45 dept revenue comes in fee depts.Wirhout central support no one rule in govt.AIADMK top officials frily relation central govt giving some level find.Anveer rajja useless fellow to spoil in Tamil nadu.He did not do anything from hisP Constituency compare to other MPs.Blaming will not worked out his find support.Thiruvallur MP only adjus to got lot of funnd from Central.l

 • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

  Any official, especially police dept. employees are 'just transferred' for any allegations against them Is it a punishments. It is like blessing the concerned 'culprit' to go to another place and continue the same so called allegations in multiple vigour

 • tamilvanan - chicago,யூ.எஸ்.ஏ

  1962 தேர்தலுக்கு பின்னரே அண்ணாவின் தலைமையில் திமுக ரூபாய்க்கு மூன்று படி அரிசி, ஏழைக்கு அனைத்து ஏக்கர் என்றெல்லாம் அறிவித்ததே. பெரியார் எப்படி ஐந்து ஏக்கர் தருவீர்கள் என்று கேட்க, கடலில் அளந்து கொடுப்போம் என்றெல்லாம் வாய் சவடால் விட்டது எல்லாம் மறந்து விட்டதா?

 • Bhaskaran - Chennai,இந்தியா

  கண்டிப்பாக தமிழகத்தை புறக்கணிக்கும் காவி கட்சி இம்முறை கடும் தோல்வியை சந்திப்பது உறுதி

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement