Advertisement

அறிவியல் உண்மையை புரிந்து கொள்ளுங்கள்!

இளநரையை தடுக்கும் வழிகளைக் கூறும், சென்னை தோல் மருத்துவ மையத்தின் இயக்குனர், டாக்டர் முருகு சுந்தரம்: இளநரை, 70 சதவீதம், மரபு வழியாகவும், 30 சதவீதம், தீர்வு காணக்கூடிய காரணங்களுடன், சத்து குறைபாடுகளால் வரும். ரத்த சோகை, இரும்புச் சத்து குறைவு, கால்சியம், புரதச்சத்து, வைட்டமின், 'பி12, டி3' மற்றும் துத்தநாகம், தாமிரம் போன்ற தாதுப்பொருட்களின் குறைபாடுகளாலும் வருகிறது. ஐரோப்பாவில், 35 வயதிற்கு கீழ் வந்தால் இளநரை. ஆனால், இந்தியாவில், 22 வயதிற்கு கீழ் சென்றால் தான், இளநரை. ஏனெனில், பல நுாறு ஆண்டு களாக, இந்தியாவில் ஊட்டச்சத்து குறைபாடு இருக்கிறது. ஆப்ரிக்கர்களுக்கு, முடிக்கும், தோலுக்கும் நிறமூட்டும், 'மெலனின்' நிறமி அதிகம். இது, பரம்பரையாகவே அவர்களுக்கு வருகிறது. தோலுக்கு நிறம் கொடுக்கும் செல்லானது, மிகச் சிறியதும், நீண்ட நாள் வாழக் கூடியதும், பாதிப்பு வந்தால் தன்னைத் தானே மீண்டும் புதுப்பித்துக் கொள்வதுடன், சக்தியும் அதிகம். ஆனால், முடிக்கு நிறம் கொடுக்கும் செல், குறைந்த காலமே வாழ்வதுடன், பாதிக்கப்பட்டால் புதுப்பித்துக் கொள்வதில் கடினமானதுடன், வேகமாக அழியக் கூடியது.பரம்பரையாக வரும் இளநரையை, சரிசெய்யவே முடியாது. அதுவும், ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு, 17 வயதில் சிகிச்சையை ஆரம்பித்தால் தான், சரி செய்ய முடியும். 22 வயதுக்கு மேல் நரை வந்தால், சரி செய்ய முடியாது. இந்த மூலிகை, அந்த எண்ணெய் தடவினால் நரை போகும் என்பதெல்லாம், ஏமாற்று வேலை. அறிவியல் உண்மையை புரிந்து கொள்ள வேண்டும். பொதுவாகவே, துாக்கமின்மை, கவலையால், உடம்பிலுள்ள செல்கள் அழிகின்றன. அதில் வேகமாக அழிவது, முடிக்கு நிறமூட்டும் செல் தான். இதைத்தான், 'கோப்பெருஞ்சோழன், கவலையில்லாமல் இருந்ததால் தான், முடி நரைக்கவில்லை' என, சங்க காலம் கூறியது.முட்டை, கீரை, எல்லா வகை காய்கறிகளிலும், இரும்புச்சத்து உள்ளது. சைவ உணவில் வெறும், 30 சதவீதமே இரும்புச் சத்து உள்ளதால், இவர்கள் முட்டையையும் சேர்த்துக் கொள்ளலாம். பாலில், கால்ஷியம் சத்து உள்ளது. மிக முக்கியமாக, புரதச்சத்து அவசியம். இந்தியாவில், இறைச்சியை அதிகம் வேக வைத்து, புரதத்தை வீணாக்கி, சக்கையை மட்டும் சாப்பிடுகிறோம். ஆனால், வெளிநாடுகளில் பாதி வேக்காட்டோடு, மசாலா அதிகம் போடாமல், புரதத்தோடு சாப்பிடுவர். புரதம் இருக்கக் கூடிய பருப்பு வகை, நட்ஸ் வகை, தினை வகை எடுத்துக் கொள்வது நல்லது. வைட்டமின் - பி12 சத்து, கைக்குத்தல் அரிசியிலும், அசைவ உணவிலும் கிடைக்கிறது. வைட்டமின் - டி சூரிய ஒளியில் உள்ளதால், 15 நிமிடம், இளவெயிலில் நிற்கலாம்.மன உளைச்சல் தான், நரை மட்டுமல்லாமல், மாரடைப்பு உட்பட அனைத்து நோய்களுக்கும் மூலகாரணமாக அமைகிறது.
பயிர் கைவிட்டாலும் பனை கைவிடாது!
யாழ்ப்பாணப் பனை மரங்கள் குறித்து கூறும், விழுப்புரம் மாவட்டம், பூரிகுடிசை கிராமத்தைச் சேர்ந்த விஜயராமன்: சிறுவனாக நான் இருந்த போது, எங்கள் பகுதி யில் இருந்து, மரம் ஏறுவதற்காக நிறைய பேர், திருப்புவனம் பக்கம் போவர். என் அப்பாவும், அடிக்கடி போவார். 50 ஆண்டுகளுக்கு முன், அப்படி போன போது, அந்தப்பகுதியில் கிடைத்த யாழ்ப்பாணம் பனை விதைகளை எடுத்து வந்து, இந்தப் பகுதியில் விதைத்தனர். அப்போது விதைத்து வளர்ந்த மரங்கள் தான், இப்போது பலன் கொடுத்து வருகின்றன. இங்கு, கிட்டத்தட்ட, 50 ஆயிரம், யாழ்ப்பாணப் பனை மரங்கள் இருக்கும். என் வயல் ஓரத்திலேயே, 300 பனை மரங்கள் உள்ளன. அதில், 200 மரங்கள், யாழ்ப்பாண ரகம் தான். இந்த மரங்களில், அதிகமாக பதநீர் கிடைக்கும். மாசி முதல், ஆனி மாதம் வரை, 'சீசன்' இருக்கும். அப்போது, பனை விதை, பனங்கிழங்கு, பதநீர் என, விற்பனை செய்வோம். பனம் பழங்களை சேமித்து வைத்து, விதை எடுத்து, மண்ணுக்குள் புதைத்து வைத்தால், மூன்று மாதத்தில் பனங்கிழங்குகள் கிடைக்கும். பெரும்பாலும், ஒரு கிழங்கு, ௩ ரூபாய் என, நாங்களே விற்பனை செய்து விடுவோம்; வியாபாரிகளும் வாங்கி செல்வர்.ஆனால், வியாபாரிகள் ஒரு கிழங்குக்கு, ௧ ரூபாய் தான் தருவர். சீசன் நேரங்களில் பதநீர் விற்பனை அமோகமாய் இருக்கும். மரங்களில், சுண்ணாம்பு தடவிய பானைகளை கட்டி, பதநீர் இறக்குவோம்.ஒரு பானையில், ஒரு வேளைக்கு, 1 - 5 லி., வரை, பதநீர் இறங்கும். தினமும் இருவேளையும் மரம் ஏறுவோம். இந்தப் பகுதிகளில், நம் நாட்டு ரக மரங்களையும் சேர்த்து, இரண்டு லட்சம் பனை மரங்கள் உள்ளன. நம் நாட்டு பனை மரம், அடிப்பகுதியில் இருந்து, மேல்பகுதிக்கு போகப் போக, மெலிதாக வளரும். ஆனால், யாழ்ப்பாணப் பனை மரங்கள், அடிப்பகுதியும், மேல் பகுதியும் தடித்திருக்கும்; நடுவில் மெலிந்திருக்கும். யாழ்ப்பாணப் பனை மரங்களின் ஓலைகள், பூ விரிந்த மாதிரி பார்க்க அழகாக இருக்கும். இப்போது, நிறைய பேர், பனை விதைகளை வாங்கி செல்கின்றனர். யாழ்ப்பாணப் பனை விதைகளுக்கு கிராக்கி அதிகம் என்பதால், மற்ற விதைகளை விட, 1 ரூபாய் அதிகமாக வைத்து தான் விற்பனை செய்கிறேன்.கடந்தாண்டு, 200 யாழ்ப்பாணப் பனை மரங்களின் வாயிலாக, ௨ லட்சம் ரூபாய் லாபம் கிடைத்தது. எந்தப் பயிர் கைவிட்டாலும், பனை எங்களைக் கைவிடாது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement