Advertisement

இவர்கள் போன்று தலைவர்களை பார்க்கவே முடியாது!

அ.சேகர், புவனகிரி, கடலுார் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: தமிழகத்தில், காமராஜர் முதல்வராக இருந்த போது, வாடகை வீட்டில் வசித்து வந்தார். அரசு மாளிகையில் கூட வசிக்க விரும்பவில்லை. அவர் முதல்வராக இருந்த போது, மாதந்தோறும், அவர் வசித்த வீட்டுக்கு, வாடகையாக, ௨௧௦ ரூபாய் கொடுத்து வந்துள்ளார். வீட்டின் உரிமையாளர், 'வாடகை போதாது' என கூறினார். அதை கேட்ட காமராஜர், வீட்டு வாடகையை, அரசு நிர்ணயம் செய்த, ௨௫௦ ரூபாயாக உயர்த்தி கொடுத்தார். கடைசி வரை, தன் பெயரில் எந்த சொத்தும் அவர் வாங்கவில்லை. அப்பேற்பட்ட தலைவர்கள் வாழ்ந்த பூமி இது!

காமராஜரின் நண்பர் ஜீவா, அரசு மருத்துவமனையில் கிழிந்த பாயில், தரையில் உடல் நிலை சரியில்லாமல் படுத்த படுக்கையாக கிடந்தார். அதை கேள்விப்பட்ட அப்போதைய முதல்வர், எம்.ஜி.ஆர்., அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக, அவருக்கு உயர்தர சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார்.

அதே போன்று, காமராஜர் ஆட்சியில் போலீஸ் துறை அமைச்சராக இருந்த கக்கன், தன் கடைசி காலத்தில், மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில், பாயில் படுக்க வைக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்படுவதாக தகவல் வந்தது. அவருக்கும் தரமான சிகிச்சை அளிக்க, எம்.ஜி.ஆர்., உத்தரவிட்டார்.முன் வாழ்ந்த தலைவர்கள் எல்லாம், எளிமையாக இருந்தனர். சிகிச்சை எடுக்கக் கூட, அரசு மருத்துவமனையை தான் நாடினர்.

ஆனால், முன்னாள் முதல்வர், ஜெயலலிதாவுக்கு, சென்னை தனியார் மருத்துவமனையில், ௭௫ நாட்கள் கொடுக்கப்பட்ட சிகிச்சைக்கு, ௧.௧௭ கோடி ரூபாய், மருத்துவமனை தரப்பில், 'பில்' தரப்பட்டு உள்ளது. மருத்துவமனையில், ஜெயலலிதா தங்கியிருந்த அறைக்கு மட்டும் வாடகையாக, ௨௪.௧௯ லட்ச ரூபாயாம்!

உண்மையான கட்சி தொண்டர்கள், மருத்துவமனைக்கு வெளியே, வெறும் தண்ணீரை குடித்து, அழுது, புரண்டு கொண்டிருந்தனர். சசிகலா குடும்பத்தார், அசைவ உணவு சாப்பிட்டு, மருத்துவமனைக்குள் சுகபோகமாக இருந்தனர். காமராஜர், கக்கன் போன்ற தலைவர்கள் வாழ்ந்த பூமியில், கோடி கோடியாக மக்கள் பணத்தை கொள்ளையடித் தோரும் பதவி வகித்து உள்ளனர் என்பதை நினைக்கும் போது, தமிழர்களுக்கும், தமிழகத்திற்கும் வெட்கக்கேடு!

---

இனியாவது விழிக்குமா சமூக நலத்துறை!சோ.ஆதங்கன், திண்டுக்கல்லிலிருந்து எழுதுகிறார்: தமிழகத்தில், குழந்தை திருமணம் அதிகளவில் நடைபெறும், முதல், ஐந்து மாவட்டங்களாக, தர்மபுரி, சேலம், தேனி, பெரம்பலுார், விருதுநகர் இடம் பெற்றுள்ளன. 'தமிழகத்தில், ஐந்து ஆண்டுகளில், ௬,௧௪௯ குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு உள்ளன' என்ற, அதிர்ச்சியூட்டும் புள்ளி விபரங்களை, சமூக நலத் துறை தெரிவித்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில், சில நாட்களுக்கு முன், ஒரே நாளில், ஆறு குழந்தை திருமணங்கள் நிறுத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இதுவரை, தர்மபுரி மாவட்டத்தில் மட்டும், அதிகபட்சமாக, ௫௮௭ திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. இளம் வயதில் காதல் வலையில் மாணவியர் விழும்போது, பெரிய அளவில் கெட்ட பெயர் ஏற்படும் முன், அவசர கதியில் திருமணத்தை முடித்துவிட பெற்றோர் துடிக்கின்றனர். நல்ல வசதியான இடம், சொந்தம் உள்ளிட்ட காரணங்களாலும், ௧௮ வயதுக்கு முன் பெண்களுக்கு திருமணம் செய்து வைக்கவும் ஆசைப்படுகின்றனர்.

பல திருமணங்கள், உடன் படிக்கும் மாணவியர் சிலரின் உதவியால் தடுத்து நிறுத்தப்பட்டு வருகின்றன. மாணவியர் மத்தியில், இது குறித்த விழிப்புணர்வை, பள்ளி ஆசிரியர்கள் ஏற்படுத்த வேண்டும். 1098, 'சைல்டு ஹெல்ப் லைன்' போன்ற, இலவச தொலைபேசி எண் வாயிலாக, புகார் தெரிவிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அவல நிலையை போக்க, சமூக நலத் துறையின் சார்பில், தீவிர பிரசாரம், விழிப்புணர்வு வாகனமும் ஏற்பாடு செய்ய வேண்டும். பள்ளிகள் தோறும், குழந்தைத் திருமணம் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கும், மாநில சமூக நலத் துறை ஏற்பாடு செய்ய முயற்சிக்க வேண்டும்!

---

'சஸ்பெண்ட்' நடவடிக்கை தப்பே இல்லை!டி.வி.ஏ.நாராயணன், சென்னையிலிருந்து எழுதுகிறார்: நான், ஓய்வு பெற்ற, மத்திய அரசு ஊழியர். 1977ல், பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, மூத்த தலைவர், ஜார்ஜ் பெர்னாண்டஸ் தலைமையில், ரயில்வே ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பணிக்கு வராத ஊழியர்களை அதிரடியாக நீக்கி, ஓய்வு பெற்ற ஊழியர்களை பயன்படுத்தி, ரயில்கள் இயக்கப்பட்டன.

அந்த போராட்டம், ௧௫ நாட்கள் நடந்தது. அப்போதைய பிரதமர் இந்திரா, வெளிநாடு சென்று விட்டார். என்ன செய்வது என்றே, ஊழியர்களுக்கு புரியவில்லை. போராட்டம் வாபஸ் பெறப்பட்டு, ஊழியர்கள் பணிக்கு திரும்பினர். ஆனால், அவர்களுக்கு வேலை அளிப்பதற்கு முன், பல்வேறு நிபந்தனைகள், ரயில்வே நிர்வாகத்தால் விதிக்கப்பட்டது. பணிக்கு வராமல் போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள், புதிதாக வேலைக்கு வந்தவர்களாக கணக்கிடப்படுவர்; ஆரம்ப நிலை சம்பளமே தரப்படும்; பணிக்காலம் கணக்கிடப்பட மாட்டாது... 'இனி, இதுபோன்று வேலை நிறுத்தம் செய்ய மாட்டேன்' என, உறுதிமொழி கொடுக்க வேண்டும் என, கூறப்பட்டது. இதற்கு கட்டுப்பட்டு, எல்லாரும் வேலைக்கு திரும்பினர்.

இந்திராவின் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்து, ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தது. ஜார்ஜ் பெர்னாண்டஸ், ரயில்வே துறையின் அமைச்சரானார். ஆனால், தொழிலாளர் பிரச்னைகள் தீர்க்கப்படவில்லை. அவருக்குப் பின், மது தண்டவதே, ரயில் அமைச்சரான பின், ஓரளவிற்கு தொழிலாளர்கள் பிரச்னைகள் தீர்க்கப்பட்டன. அரசு பணிக்கு வரும் முன், 'எல்லாவற்றுக்கும் கட்டுப்படுவேன்' என்றும், வேலை கிடைத்த பின், 'எல்லாவற்றுக்கும் போராடுவேன்' என்ற மனநிலை, அரசு ஊழியர்களிடம் மாற வேண்டும்.

மக்களுக்கு இடையூறை ஏற்படுத்தியும், அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தியும் நடத்தப்படும் போராட்டங்களுக்கு, 1977ல், மத்திய அரசு எடுத்த நடவடிக்கை போன்று, இப்போதைய அரசுகள் எடுக்க வேண்டும். கோரிக்கைகளை நிறைவேற்ற கோரும் உரிமை, ஊழியர்களுக்கு உண்டு. ஆனால், அதை எப்படி கேட்டு பெறுவதில் தான், பிரச்னைகள் உருவாகின்றன. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் பேச்சு நடத்தலாம்; அரசுக்கு முறைப்படி தெரியப்படுத்தலாம். அதை விடுத்து, எதற்கெடுத்தாலும் போராட்டம் எனக்கூறி, அரசு ஊழியர்கள் நடுரோட்டில் இறங்கினால், சஸ்பெண்ட், பணி நீக்கம் போன்ற நடவடிக்கைகள் எடுப்பதில் தப்பே இல்லை!

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (3)

  • venkat Iyer - nagai,இந்தியா

    புதியதாக அரசு பணியில் சேருபவர்களில்,சம்பள பிரச்சனைகளுக்காக போராட்டத்தில் கலந்து கொண்டது உறுதியானால் பணியிலிருந்து நீக்கி கொள்ளலாம் என்பதும்,செய்யும் பணி உற்பத்தியை சார்ந்தது அல்ல. மக்கள் செய்ய சேவையை சார்ந்தது என்பதை உணருகின்றேன் என்று வாக்குமூலத்தில் கையெழுத்து வாங்கி வைத்து கொள்ள வேண்டும்.அப்படி செய்தால்தான் இவர்களுடைய கொட்டம் அடங்கும்

  • Bhaskaran - Chennai,இந்தியா

    ஜாக்டோ ஜியோ மக்களுக்கு பணிசெய்ய வரவில்லை போராட்டம்செய்யவே பிறவி எடுத்துள்ளனர்

  • Bhaskaran - Chennai,இந்தியா

    எம்ஜியார் முதல்வராக இருக்கும்போது ஜீவா உயிருடன் இருந்தாரா

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement