Advertisement

கருச்சிதைவுக்கு காரணம் என்ன?

கருச்சிதைவு, கருக்கலைப்புக்கான காரணங்கள், தீர்வுகள் பற்றி கூறும், மகப்பேறு மருத்துவர் நித்யா தேவி: பெண்ணின் கரு, எதிர்பாராத விதமாக கலைந்து போக, பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. இவற்றில், கர்ப்பிணி மட்டுமின்றி, அந்த கருவுக்கு காரணமான ஆண் விந்துவின் ஆரோக்கியமும், சில சமயம் காரணமாக இருக்கலாம். மற்ற காரணிகள், கரு வளர்ச்சி தொடர்பானவையாக இருக்கலாம்.

இதில், சம்பந்தப்பட்ட பெண்ணின் உடல் ரீதியான பாதிப்பு, 10- - 15 சதவீத கருச் சிதைவுகளுக்கு காரணமாக இருக்கலாம். கர்ப்பப்பை பலவீனமாக இருப்பது, மாதவிடாய் பிரச்னை போன்றவை இதில் அடங்கும். பெண்ணுக்கு, கரு வளர்ச்சியைத் தாங்கும் சக்தி இல்லாமல், கருச்சிதைவு உண்டாவது, 10 - 15 சதவீதமும், தொற்று காரணமாக, 0.5 - 5 சதவீதமும் நேரலாம்.

'ஹார்மோன்' சமச்சீரின்மை, 'தைராய்டு' மற்றும் சர்க்கரை நோய் போன்ற உடல் நலப் பிரச்னை உள்ளிட்டவை, 20 சதவீத கருச்சிதைவு உண்டாகக் காரணமாகலாம். என்றாலும், கிட்டத்தட்ட, 50 சதவீத கருச்சிதைவுக்கு, காரணங்கள் கண்டறியப்படவில்லை. மேலும், 20 முதல், 30 வயதுள்ள பெண்களுக்கு, இயல்பாகவே கருமுட்டை ஆரோக்கியமாக இருக்கும். வயது அதிகரிக்க அதிகரிக்க, கரு முட்டை கொஞ்சம் கொஞ்சமாக, தொய்வு நிலையை எட்டும்.

இதனால் தான், 30, 35 வயதுக்கு மேல் கருத்தரிப்பு, சற்றே சவாலான விஷயமாகிறது. ஆனால், சரிவிகித, ஊட்டச்சத்துமிக்க உணவு, பழக்க வழக்கங்களால், கருமுட்டையின் ஆரோக்கியத்தை பாதுகாக்கலாம். சராசரியாக, ஒரு கருச்சிதைவுக்கு அடுத்து, மூன்று மாதங்களுக்குப் பின், கருத்தரிப்பு நிகழ வேண்டும். ஒருவேளை, ஒன்றுக்கு மேற்பட்ட முறை கருச்சிதைவு ஏற்பட்டிருந்தால், கணவன் -- மனைவி இருவரும், மருத்துவர் ஆலோசனைப்படி, முழு உடல் பரிசோதனை செய்ய வேண்டும்.

ஆரோக்கியமான உடல்நிலையில் இருக்கும் பெண்களும், கருத்தரிப்புக்குப் பின், கர்ப்ப கால ஆரோக்கியத்தை உறுதிப்படுத்த, ரத்தப் பரிசோதனை செய்யலாம். தம்பதியில், இருவரில் ஒருவருக்கு தைராய்டு, சர்க்கரை நோய் பிரச்னை இருந்தால், கர்ப்பிணி, உட்சுரப்பியல் பரிசோதனையும், கருவுக்கு மரபணு தொடர்பான சிக்கல் இருக்கிறதா என்ற பரிசோதனையும் செய்யலாம்.

எல்லாவற்றுக்கும் மேலாக, பெண்ணின் மனநிலை நிம்மதியாக இருக்க வேண்டியது அவசியம். எனவே, ஒரு கருச்சிதைவுக்கு பின்னும், அந்த பெண்ணுக்கு நம்பிக்கை கொடுக்கும் வார்த்தைகளே, அவரை சூழ்ந்திருக்க வேண்டும்; எதிர்மறையான பேச்சுகளையும், அச்சுறுத்தல்களையும், குடும்பமும், சுற்றமும் நிச்சயம் தவிர்க்க வேண்டும்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement