Advertisement

தடை மிகவும் நல்லது அமலில் கவனம் தேவை!

'புத்தாண்டில் சுற்றுச்சூழல் சீர்திருத்தம்' என்ற நல்ல பார்வையில், 'பிளாஸ்டிக்' பொருட்களுக்கு தடை அமலாகி இருக்கிறது.


பிளாஸ்டிக் என்பது, சமூகத்தில் ஏற்கப்பட்ட ஒரு பொருளாக ஆகி, பல ஆண்டுகள் ஆகிவிட்டன. எந்தப் பொருளானாலும், திரவ உணவு, திட உணவு மற்றும் நுகர்வோர் பொருட்கள் வாங்கினாலும், அவை இந்த பிளாஸ்டிக் பொருளுடன், தொடர்புடையதாகி விட்டன.பிளாஸ்டிக் என்பது, சிந்தடிக் பொருள். அது, சிறிய உருண்டைகளாக தயாரிக்கப்பட்டதும், அது பெரிய ஷீட்களாகவும், தேவைக்கேற்ற பொருளாகவும் மாறி, சந்தையில் பல வண்ணங்களில் கிடைத்தது. பிளாஸ்டிக் தொழிலில், 5 லட்சம் பேர் ஈடுபட்டு இருக்கின்றனர். இதில் மறைமுக, நேர்முகம் என்ற கணக்கில், எத்தனை பேர் என்பது தேவையில்லை.


மக்கும் குப்பை இப்போது, அடிக்கடி வழக்கத்தில் உள்ள சொல். பூக்கள், இயற்கை சம்பந்தப்பட்ட பொருட்கள் போன்றவை பூமியில் அழுகி, அதனுடன் இயல்பாக கரைந்து விடும். அவை எரிக்கப்பட்டாலும், கரியமில வாயு அல்லது பாதிக்கப்படும் நச்சு வாயுக்களை வெளியேற்றாது. ஆனால் பிளாஸ்டிக், எளிதாக கையாளும் பல்வகைப் பொருட்களை அடக்கி இருப்பதால், வெகு சுலபமாக, மக்கள் வாழ்க்கையில் கண்டிப்பான பொருளாக மாறிவிட்டது.


பிளாஸ்டிக் தயாரிப்பில் உள்ள குவளைகள், காய்கறி வைக்கப்படும் பைகள், முலாம்
பூசப்பட்ட தட்டுகள், தெர்மாகோல் குவளைகள் ஆகியவை உட்பட, 13 பொருட்கள் தடை செய்யப்பட்டிருக்கின்றன. இவை தடை செய்யப்படும் அறிவிப்பு, சிறிய ஊராட்சி முதல், பெரிய நகரங்கள் வரை, உரிய விளம்பரம் பெற்றிருக்கின்றன.


மவுசு குறைந்து போன மஞ்சள் பைக்கு, மீண்டும் மவுசு வந்துவிட்டது.மாசு கட்டுப்பாடு வாரியம், இந்த பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக, தாமரை இலை அல்லது வாழை இலை போன்றவற்றை வலியுறுத்திய போதும், இந்த இலைகளின் மீதுள்ள, பாசி படர்ந்த அழுக்கு, சுத்தமாக்கப்படாமல்
இருந்தால், அது முகம் சுளிக்க வைக்கும்.


இலையின் விலை அதிகரிப்பது, வாழை விவசாயிகளுக்கு சாதகம் தான். ஏற்கனவே, சில உணவுப்பொருட்கள் கடையில், அவர்கள் பயன்படுத்தும் எவர்சில்வர் தட்டுகள் அதிக அளவு வீணாகி, அதை சுத்தம் செய்வது சிரமம் என்ற கருத்தில், அந்த தட்டின் அளவுக்கு வாழை இலையை வட்டமாக அல்லது சதுரமாக ஆக்கி தருகின்றனர்.


பால், எண்ணெய், சில மருந்துகள் ஆகியவற்றிற்கான பிளாஸ்டிக்கிற்கு தடை வரவில்லை என்பது, நல்ல செய்தி. ஏனெனில், இந்த அரசு அறிவிப்பிற்கு முன்பே, சில காலக்கெடுவுடன், பிளாஸ்டிக் பைகளில் இருக்கும் பொருளை, ஒரே நாளில் மாற்ற முடியாது. தவிரவும், காகிதப்பை மற்றும் காகிதம், மரக்கூழ் கொண்ட தயாரிப்புகள், மூங்கில் தயாரிப்புகள் ஆகியவை, மக்களுக்கு அறிமுகமாக வேண்டிய கட்டாயமும் இருக்கிறது.


தமிழக தலைமைச் செயலர் மற்றும் சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள், அமலாக்க அதிகாரிகள், ஆகியோர், இதற்கான அணுகுமுறையை சிறப்பாக மேற்கொண்டு, அதை அமல்படுத்தும்போது, அதிக விளம்பரம் செய்வதால் மட்டுமே, மக்களால் சிறப்பாக உணர முடியும்.


உள்ளாட்சி அமைப்புகள், பெரிய ஊராட்சிகள் என, அனைத்துப் பகுதிகளிலும் இப்போது தேங்கும் குப்பையில் உள்ள, மக்காத பிளாஸ்டிக் அளவு, உத்தேசமாக அளவிடப்பட்டிருக்கப்பட வேண்டும். இது, இரு மாதங்களில் குறைகிறதா, அது எந்த அளவு என்பதை, அரசு கண்காணித்து வந்தால், பிளாஸ்டிக் பயன்பாடு, எப்பகுதியில் அதிகமாக குறைந்திருக்கிறது என்பதைக்
கண்டறிய முடியும்.மக்கும் குப்பை, மக்காத குப்பை என்பதுடன், அதில் எக்காரணம் கொண்டும், பிளாஸ்டிக் சிறிதும் சேராமல் இருக்க, அடுத்த ஆறு மாதங்களுக்கு, கண்காணிப்பு தேவை.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement