Advertisement

ராகுலை தடுக்க இன்னொரு, 'வைகோ' ரெடி!

அ.குணசேகரன், வழக்கறிஞர், புவனகிரி, கடலுார் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: 'நாட்டில், 2019ல் நடக்கவுள்ள லோக்சபா தேர்தலில், எந்த ஒரு தேசிய கட்சிக்கும், தனி மெஜாரிட்டியான, ௨௭2 எம்.பி.,க்கள் கிடைக்க வாய்ப்பில்லை' என, ஆங்கில, 'டிவி' சேனல்களில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

ஆனால், '௩௦ எம்.பி.,க்களை பெற்று விட்டாலே, பிரதமராகி விடலாம்' என, பிராந்திய கட்சிகளின் தலைவர்கள் கணக்கு போட துவங்கி விட்டனர். அந்த வரிசையில், மேற்கு வங்க முதல்வர், மம்தா, உ.பி., மாநில முன்னாள் முதல்வர்கள், மாயாவதி, அகிலேஷ் யாதவ், மஹாராஷ்டிராவில் சரத்பவார் என, பலர் வரிசை கட்டி நிற்கின்றனர்.

கருணாநிதி சிலை திறப்பு விழாவில், 'ராகுலை பிரதமர் வேட்பாளராக முன்மொழிகிறேன்' என, தி.மு.க., தலைவர், ஸ்டாலின் கூறினார். அவரது கருத்தை, வடமாநில தலைவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆந்திர முதல்வர், சந்திரபாபு நாயுடுவின் பரம எதிரியான, தெலுங்கானா முதல்வர், சந்திரசேகர ராவ், தன் பங்குக்கு, காங்கிரஸ் - பா.ஜ., அல்லாத கட்சிகளை இணைத்து, ஒரு கூட்டணியை உருவாக்க, முயற்சி செய்ய, களம் இறங்கியுள்ளார்.

முதலாவதாக, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கையும், மே.வங்க முதல்வர், மம்தாவையும், உ.பி.,யின் முன்னாள் முதல்வர், அகிலேஷ் யாதவையும் சந்திக்க உள்ளார். பா.ஜ.,விற்கு எதிரான ஓட்டுகளை, நெல்லிக்காய் போன்று சிதறும் வாய்ப்பை ஏற்படுத்த தயாராகி வருகிறார். ம.தி.மு.க., பொதுச்செயலர், வைகோ பாணியில், சந்திரசேகர ராவ் புறப்பட்டுள்ளார்.

தமிழக சட்டசபைக்கு, 2016ல் நடந்த தேர்தலில், தே.மு.தி.க., - ம.தி.மு.க., - விடுதலை சிறுத்தைகள், காம்ரேட்டுகள் இணைந்து போட்டியிட்டனர். ஓட்டுகள் சிதறியதால், அ.தி.மு.க., மீண்டும் வெற்றி பெற்று, ஆட்சியை பிடித்தது; தி.மு.க., தோல்வியை சந்தித்தது. அதேபோல், மத்தியிலும் மூன்று அணிகளாக பிரிந்து, ௨௦௧௯ லோக்சபா தேர்தலை சந்திக்கும் பட்சத்தில் மீண்டும், பா.ஜ.,வே ஆட்சியை பிடிக்கும் என, கருத்துக் கணிப்புகளில் கூறப்பட்டுள்ளன.

காங்கிரஸ் தலைவர், ராகுல் பிரதமராகும் கனவுக்கு, பிராந்திய கட்சிகளின் தலைவர்கள் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். பா.ஜ.,வை பொறுத்தவரை, அந்தக் கூட்டணியில் இடம்பெறும் எந்த கட்சியானாலும், மோடியை பிரதமராக ஏற்றுக் கொள்ள கூடியவர்கள் தான் உள்ளனர். எனவே, இது, பிரதமர் வேட்பாளர் அறிவிப்பில், காங்கிரசுக்கும், மூன்றாவது அணிக்கும் பெரிய பின்னடைவாக உள்ளது.

---

இனியாவது பாடம் கற்கணும் பா.ஜ., தலைமை!சொ.செல்வராஜ், மண்டல மேலாளர், கோ-ஆப்டெக்ஸ் (பணி நிறைவு), சென்னையிலிருந்து எழுதுகிறார்: மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் உள்ளிட்ட, ஐந்து மாநிலங்களில், பா.ஜ., தோல்வியை தழுவியுள்ளது. அதை ஏற்றுக் கொள்ளாமல், அக்கட்சி தலைவர்கள், ஆளாளுக்கு அறிக்கை விடுகின்றனர். கீழே விழுந்தாலும், மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போல், 'பா.ஜ.,வுக்கு இது தோல்வி அல்ல; இது, ஒரு வெற்றிகரமான தோல்வி' என, தமிழக, பா.ஜ., தலைவர் தமிழிசை கூறியுள்ளார்.

பிரதமர் மோடியால் அறிவிக்கப்பட்ட, பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி., வரி விதிப்பு போன்ற திட்டங்கள், மக்களை வெகுவாக பாதிக்க செய்துள்ளன. இதுபோன்ற காரணங்களால், ஐந்து மாநில சட்டசபை தேர்தல்களில் தோல்வி அடைந்ததை, பா.ஜ., தலைவர்கள் ஒப்புக் கொள்ள மறுக்கின்றனர். பிரதமர் மோடி மேற்கொள்ளும் வெளிநாட்டுப் பயணங்களும், சர்ச்சையை உருவாக்கி வருகிறது.

பெட்ரோல், டீசல் விலைகளில் ஏற்பட்டுள்ள ஏற்றத் தாழ்வுகள், சாமானிய மக்களை வெகுவாக பாதிக்கிறது. இது, பா.ஜ., மீது, மக்கள் வைத்துள்ள நம்பிக்கை குறைந்து வருவதையே காட்டுகிறது. ஐந்து மாநில தேர்தல் தோல்வி மூலம், பா.ஜ.,வும், அதன் தலைவர்களும் சுயபரிசோதனை செய்து, தோல்விக்கு தார்மீகப் பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும். காங்கிரஸ் எனும் அனுபவம் மிகுந்த கட்சியை, 2019 லோக்சபா தேர்தலில் எதிர்கொள்வது, அவ்வளவு சுலபமல்ல என்பதை, பா.ஜ., உணர வேண்டும்.

தராசில் இரு பக்கமும் ஆடிக் கொண்டிருக்கும் முள் போன்று, மேற்கு வங்க முதல்வர், மம்தா, உ.பி., முன்னாள் முதல்வர்கள், அகிலேஷ் யாதவ், மாயாவதி போன்றோர் உள்ளனர். அவர்கள், காங்கிரஸ் பக்கம் சாயப் போகின்றனரா அல்லது தெலுங்கானா மாநில முதல்வர், சந்திரசேகர ராவ் முயற்சியால், மூன்றாவது அணியை உருவாக்க போகின்றனரா என, தெரியவில்லை. வரும், 2019 லோக்சபா தேர்தலில், பா.ஜ., தலைவர்கள் அலட்சியமாக இருப்பரேயாயின், அதற்கான விலையை கட்டாயம் தர வேண்டி இருக்கும்!

---

அரசு பணி தேர்வில் ஒரே மாதிரியான நடைமுறை தேவை!ஏ.ராமசாமி, கூட்டுறவு பணியாளர், (பணி நிறைவு), திண்டுக்கல்லிலிருந்து எழுதுகிறார்: மத்திய - மாநில அரசுகளால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில், பி.சி., - எம்.பி.சி., - எஸ்.சி., - எஸ்.டி., என, ஜாதிகள் பிரிக்கப்பட்டு, அந்த அடிப்படையில், அவர்களுக்கு சலுகைகள் வழங்கப்படுகின்றன.

பிராமணர், சைவ முதலியார், அய்யங்கார் உள்ளிட்ட சில ஜாதியினர், 'உயர் வகுப்பினர்' என, அரசால் முத்திரை குத்தப்பட்டுள்ளது. திறமைகள் இருந்தாலும், இட ஒதுக்கீடு முறையால், முற்பட்ட வகுப்பை சார்ந்தோரின் வாய்ப்புகள் தட்டிப் பறிக்கப்படுகின்றன. சிறிய கோவில்களில் குருக்களாக, வேதம் சொல்லி தருவோராக, பிராமணர் பலர் பணிபுரிகின்றனர். சிலர், ஈமக்கிரியை காரியங்களைச் செய்து, சொற்ப வருமானம் ஈட்டுகின்றனர்.

காய்கறி, மரம், பெயின்ட் கடைகளில், குறைந்த சம்பளத்தில் கணக்கு எழுதுவோராக, எண்ணற்ற முற்பட்ட வகுப்பினர் பணிபுரிகின்றனர். அவர்கள் பொருளாதார ரீதியாக, மிகவும் பின்தங்கிய நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றனர். திறமைசாலிகள் உயர் வகுப்பில் இருந்தாலும், உயர் பதவிகளுக்கு அவர்களால் வர முடியவில்லை.

பள்ளி, கல்லுாரிகளில் படிக்கும்போது, பின்தங்கியோரை அடையாளம் கண்டு, உதவுவதில் தப்பில்லை. அரசு பணி நியமனம் சார்ந்த விஷயங்கள், பதவி உயர்வின் போது, அனைவருக்கும் ஒரே மாதிரியான தேர்வு முறையை, மத்திய - மாநில அரசுகள் நடத்த வேண்டும்.

இம்மாதிரியான தேர்வு முறையால், அரசுப் பணிகளில் தேர்வு பெறும் திறமையானோர், நேர்மையானோர், பணியில் சிறப்பாக செயல்பட முடியும். லஞ்சம், ஊழலற்ற நிர்வாகத்தையும், மதம், ஜாதி ரீதியான ஏற்றத்தாழ்வுகள் இல்லாத நிலையையும், அரசு அலுவலகங்களில் காண முடியும்!

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (4)

 • A.Gomathinayagam - chennai,இந்தியா

  முற்படுத்தப்பட்டவர்கள் ஓட்டு இல்லாமலே தேர்தல்களில் வெற்றி பெறலாம் என்ற நிலை இருப்பதால் இந்த நிலை மாறுவதற்கு வாய்ப்பு கிடையாது ,முற்படுத்தப்பட்டோர் தங்களுக்கு என்று ஒரு கூட்டமைப்பு அமைத்து அரசியல் கட்சிகளை மிரட்டினால் வாய்ப்பு உள்ளது

 • Vasu - Mumbai,இந்தியா

  இட ஒதிக்கீடு பிராமணர்களுக்கு தேவை இல்லை. Merit , தகுதி மூலம் தேர்தெடுங்கள். அவர்கள் இருந்தால் லஞ்சம், ஊழல் குறையும், அது இல்லாமலும் போகும்.

 • Vasu - Mumbai,இந்தியா

  செல்வராஜ் கருத்து GST பற்றி, GST மூலம் மக்கள் விலை வாசி குறைந்து நல்ல பலனைத்தான் அடைந்தார்கள். அத்தியாவசிய பொருள்கள் 0% ஓர் 5 % மட்டுமே வரி. இது 31 % இருந்து குறைக்கப்பட்டுள்ளது. GST வரி ஏமாற்றும் வணிகர்களுக்கு தான் கஷ்டம். நல்ல விஷயங்களை பாராட்டுங்கள்

 • Bhaskaran - Chennai,இந்தியா

  பிராமணர்களுக்கு ஒதுக்கீடா வீரமணி கொதித்தெழப் போகிறார்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement