Advertisement

நம்மை மிரட்டும் இயற்கை!

தமிழகத்தில், நாகை, குமரி, சென்னை உட்பட, பல கடலோரப் பகுதிகளில், 14வது சுனாமி தினம் அனுசரிக்கப்பட்டிருக்கிறது. இங்குள்ள மக்கள், தங்கள் துயரங்களை வெளிப்படுத்தும் விதமாக, கடலில் பூக்களைத் துாவியும், இறந்தவர்களுக்கு திதி கொடுத்தும், கடல் அன்னையின் சீற்றம் வராமல் காக்க பால் ஊற்றியும், அஞ்சலி செலுத்தினர்.இது, பழைய நினைவைப் போற்றும் சம்பவம் என்றாலும், இயற்கைச் சீற்ற வகைகளில், சுனாமி மிகவும் பயங்கரமானது. சில பத்தாண்டுகளுக்கு ஒருமுறை தான் வரும், இந்தோனேஷியா போன்ற பகுதிகளில், தரைக்கு கீழ், பல கி.மீ., ஆழத்தில் உள்ள பாறைகள், சில செ.மீ., நகரும் போது, எரிமலை வெடித்து பாதிப்பு நேருகிறது.அதன் தொடர்ச்சியாக ஏற்படும் சுனாமி, கடல் அலைகள், சீற்றத்தின் அளவைப் பொறுத்தது. இந்திய - பசிபிக் கடற்பரப்பில் அமைந்த பிலிப்பைன்சும், இந்த அபாயம் கொண்டது. நமக்கு அதிகம் தெரிந்த அளவில், தீவுக்கூட்டம் அடங்கிய இந்தோனேஷியா நாட்டில், ஏதாவது ஒரு தீவு, இந்த சுனாமியால் பாதிக்கப்பட்டு, நுாற்றுக்கணக்கில் பலர் இறப்பது வாடிக்கையாகி உள்ளது.பூமியின் கீழ் பகுதியில் உள்ள பாறைகளின் அடுக்கு இடைவெளி சிறிது நகருவதை, 'டெக்டானிக் மூவ்மென்ட்' என்கின்றனர். இதை முன்கூட்டியே கணிப்பது எளிதல்ல. ஆனால், கடந்த இரு ஆண்டுகளில், ஜப்பான் நாட்டில் அதிக அளவு கடல் அரிப்பு என்பது சகஜமாகி வருகிறது. தமிழகத்தில் கூட கடல் உள்வாங்குவதும், சில சமயங்களில் அது, அளவு கடந்த உயரத்திற்கு அலையின் சீற்றமாக மாறி, கடலோரப் பகுதிகளை காவு வாங்குவதும் நிகழ்கிறது.இத்தடவை, சென்ற மாத கடைசி வாரத்தில், சுண்டா வளைகுடா என்ற தீவு அமைந்த இடத்தில் ஏற்பட்ட சுனாமி ஆபத்தை, இந்தோனேஷிய அரசு முன்கூட்டியே அறிவிக்க முடியவில்லை. பொதுவாக, கடலுக்கு அடியில் ஏற்படும் சிறு பிரளயங்களை, அதன் அபாயமாக, 'சுனாமி வரலாம்' என்ற எச்சரிக்கை வந்த நான்கு அல்லது ஆறு மணி நேரங்களில், கடல் அலை பொங்கிப் பெருகி, பனைமர உயரத்திற்கு மேல் வந்து தாக்கும். எப்படியும் இந்த சுனாமியால், 500 பேர் இறப்பு நிச்சயமாகி விட்டது.இவற்றை பார்க்கும் போது, கடல் தாய் என்பவள், சமயத்தில் மட்டும் அல்ல, அடிக்கடி ஆக்ரோஷமாகும் சுபாவம் உடைய சக்தியாகும். இந்தோனேஷியாவில், நுாறாண்டுகளுக்கு முன் ஏற்பட்ட கடல் அரிப்பு, அதன் பாதிப்புகளால் ஏற்பட்ட புதிதாக உருவான குட்டித்தீவுகள் இன்று, சுற்றுலா சொர்க்கமாக காணப்படுகிறது. இப்போது சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதியும், அப்படி உருவானதே. ஆனால், இனி இம்மாதிரி இடங்களில், மக்கள் சென்று தங்க அச்சப்படுவர்.இந்தோனேஷியா சுனாமி அபாயம் ஒரு பக்கம் இருந்தாலும், பேய்மழை பாதிப்பால் இலங்கை அடையும் துயரம், மேலை நாடுகள் அடையும் சூறாவளி சஞ்சலங்கள் ஆகியவை, இயற்கைச் சூழலை அணுகும் முறையில் மாற்றம் தேவை என்பதைக் காட்டுகிறது. ஆஸ்திரேலியாவில் வெயில், 42 செல்ஷியஸ் டிகிரி என்பது, மிகவும் மோசமான தகிப்பின் அடுத்த அடையாளம்.ஆனால், கேரளாவில் அதிக வெள்ளம்,தமிழகத்தில் கஜா புயல், உத்தரகண்டில் ஏற்பட்ட மழையால் அழிந்த இயற்கை வளம் ஆகியவை, நமக்கு சமீபகால முன்னுதாரணங்கள். இதே நிலையில், புராணங்கள் அல்லது மதத்தின் அடிப்படையில், உலக மக்கள் இம்மாதிரி துயரங்களில் உயிரிழப்பர் என்பது, சமாதான வார்த்தையாகும்.இப்போது ஏற்படும் இயற்கை பாதிப்புகளில், கடல் சீற்றம் என்பது, ஒரு ஆபத்து. நம் நாட்டில், கடற்பரப்பு பகுதிகளில், புதிதாக சுற்றுலா அல்லது மற்ற சில திட்டங்களை அமைக்க, அரசு திட்டமிட்டிருக்கிறது. இவற்றில், கடல் அரிப்பு அல்லது அதிக ஆக்ரோஷ அலை ஏற்படும் பகுதி களை ஆய்ந்தபின், கவனமாக வளர்ச்சி திட்டங்களை அணுக வேண்டும்.சமீபத்தில், போலந்து நாட்டில், கடோவிஸ் என்ற இடத்தில், பருவ சூழ்நிலை மாற்றம் அபாயங்கள் குறித்து, பல்துறை அறிஞர்கள், 13 நாள் பேசியுள்ளனர். ஆனால், அந்த விவாதங்களில், பணக்கார நாடுகள், வளர்ந்த, வளரும் நாடுகள் ஆகியவற்றிற்கான அடுத்த அணுகுமுறைகள் வெளியிடப்படவில்லை.பணக்கார நாடுகளில், ஆண்டுதோறும் ஏற்படும் அதிக வெயில் தாக்கத்தை அடுத்த, 25 ஆண்டுகளில் சந்திக்க வேண்டிய அணுகுமுறைகள்மட்டும் பேசப்பட்டு, மற்றவை முடங்கி விட்டன.நம் நாட்டில் படித்த இளைஞர்கள் சக்தி,அரசியல்வாதிகளின் வெற்றுப் பரப்புரையைத் தாண்டி, இந்த அபாயங்கள் குறித்து சிந்திக்க துவங்கினால், ஏதாவது விடிவு வரலாம்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement