Advertisement

வானம் வசப்படும்!

''இவர மாதிரி ஒரு முட்டாள எங்கயாவது பாத்திருக்கீங்களா''அதிர்ந்தேன். என் அலுவலகத்தில் அமர்ந்திருந்த அந்தத் தம்பதியினரை அப்போது தான் முதன் முறையாகப் பார்க்கிறேன். கணவர் சென்னையின் இதய நோய் நிபுணர். மனைவி மகப்பேறு டாக்டர். இப்படியா ஒரு வேற்று மனிதர் முன்னால் தன் கணவரை விட்டுத்தருவார்கள்?''இல்ல, கேக்கிறேன் இவர மாதிரி ஒரு முட்டாளப் பாத்திருக்கீங்களா?''''ஓ பாத்திருக்கேனே. தெனம் தெனம் பாக்கறேனே. நான் என்னை கண்ணாடில பாத்துக்கறதச் சொன்னேன்''இருவரும் சிரித்தார்கள். விஷயத்துக்கு வந்தார்கள்.

''இவர் வருஷா வருஷம் ஒன்றரைக்கோடி வருமான வரியாகக் கட்டறாரு. எதுனாச்சும் செஞ்சு வரியக் குறைக்க வழி சொல்லுங்களேன். எவ்வளவு பீஸ் கேட்டாலும் தரோம்,''வரியை ஏன் குறைக்க முடியாது என விளக்கினேன். ''ஒன்றரைக் கோடி வரி கட்றேன்னு வாய்க்கு வாய் புலம்பறீங்களே? அத வச்சிக்கிட்டு உங்க கணவருடைய நிகர வருமானம் எவ்வளவு இருக்கும்னு என்னால் அனுமானிக்க முடியும். அஞ்சு கோடி?''தலையசைத்தார்கள்.

''நுாத்தியிருபது கோடிப்பேர் இருக்கற நாட்டுல அஞ்சு கோடிக்கு மேல சம்பாதிக்கறவங்க வெறும் முப்பதாயிரம் பேர் தான். லட்சத்துல ஒருத்தர், கோடில ஒருத்தர்னு கொடிக்கட்டிப் பறக்கற உங்க கணவரை முட்டாள்னு சொல்றது நல்லாவா இருக்கு'' அவர்கள் விடைபெறும் போது கணவர் என் கையை அழுத்தமாக பிடித்து என்னை பார்த்த பார்வையில் ஒரு வார்த்தையில்லாக் கவிதை.

வல்லமையை பாருங்கள்:
நான் ஒன்றும் சொல்லி கிழிக்கவில்லை. அவர்கள் வரியை மட்டும் பார்த்துக் கவலைப்பட்டுக் கொண்டிருந்தார்கள். நான் அவர்கள் தாடையில் கை வைத்து முகத்தை நிமிர்த்தி வருமானத்தை பார்க்கச் சொன்னேன். கவலை போய் விட்டது. அதையே தான் உங்களுக்கும் சொல்கிறேன். பிரச்னைகளைப் பார்ப்பதை விட்டு விட்டு அவற்றைத் தாண்டிப் பெரிதாக வாழும் உங்கள் வல்லமையைப் பாருங்கள் என்று சொல்லத்தான் இன்று உங்களைத் தேடி வந்திருக்கிறேன்.

சில நேரம் வரி-வருமானம் என்று அந்த மருத்துவருக்குச் செய்தது போல் பார்வையை லேசாகத் திருப்பி நம் பிரச்னையைத் தீர்க்க முடியாது. நம் பார்வையை நாலா பக்கமும் சுழல விட வேண்டும். அப்போது தான் அந்தப் பிரச்னையை விட பெரிதாக இருக்கும் வளர்ச்சியை பார்க்க முடியும்.

பிரச்னைகளை ஆள வேண்டும்:
13 ஆண்டுகளுக்கு முன்னால் வெளிநாட்டில் ஒரு இளைஞனுக்கு சர்க்கரை நோய் இருந்தது. பெரிய இசைக்கலைஞனாக வேண்டும் என்று கனவை வளர்த்து, வாழ்க்கையை அந்தக்கனவின் வழியாகவே பார்த்தான். சிகிச்சை, முறையான உடற்பயிற்சி இருந்தால் போதும். அந்தநோயை வென்று விடலாம் என்ற நம்பிக்கை வந்தது.

இசையமைப்பாளராகவும், பாடலாசிரியராகவும் புகழ்பெற்றான். உலக அழகி ஒருவரின் காதல் கிடைத்தது. இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். மகிழ்ச்சியாக வாழ்கின்றனர். அழகி பெயர் பிரியங்கா சோப்ரா, இளைஞர் நிக் ஜோனாஸ். உங்கள் பிரச்னை உங்களை அடக்கியாளக்கூடாது. நீங்கள் தான் பிரச்னைகளை ஆள வேண்டும்.

நேர்மறையான அடையாளங்கள் :
நேர்மறையான வலுவான அடையாளங்களை உருவாக்கி கொள்பவர்கள் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள் என்றும் சொல்கிறார்கள்.வாசு தனியார் நிறுவனத்தில் காசாளராக இருக்கிறான். ராசி பலன் பார்க்கும் பழக்கம் உள்ளவன். அன்று ரிஷப ராசிக்கு பிரச்னை என போட்டிருந்தது. முதல் பிரச்னை வாசுவின் இரு சக்கர வாகனம் பஞ்சராகியிருந்தது. கெளம்பிட்டாங்கய்யா...கெளம்பிட்டாங்க... என்று வடிவேலு மாதிரி அலுத்துக் கொண்டு பஸ்சை பிடிக்க ஓடினான். நடத்துனர் பயணச்சீட்டு கேட்கும் போது தான் அவன் பர்சை எடுத்து வரவில்லை என உணர்ந்தான். நல்லவேளையாக நண்பன் ஒருவன் அந்த பஸ்சில் பயணித்ததால் பிரச்னையின்றி போயிற்று.

அன்று பார்த்து நகரில் ஏதோ கட்சி ஊர்வலம். வாசு சென்ற பஸ் அதில்வசமாக சிக்கியது. அவன் அலுவலகத்தை அடைந்த போது மணி பதினொன்று. வாசு வரவில்லை என்று வேறு யாரையோ காசாளராக போட்டிருந்தார்கள். அவர் என்ன செய்தாரோ தெரியவில்லை. நாற்பதினாயிரம் ரூபாயைக் காணவில்லை. வாசுவை என்ன பிரச்னை என பார்க்க மேலாளர் சொன்னார்.

ராசிபலன் :
இன்னிக்கு தொட்டதெல்லாம் பிரச்னை தான் என நினைத்து அந்த மனிதர் செய்த பட்டுவாடாக்களை கவனமாக பார்த்தான் வாசு. ஒருவருக்கு பத்தாயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும். நுாறு ரூபாய்க் கட்டை கொடுப்பதற்கு பதில் ஐநுாறு ரூபாய் கட்டைக் கொடுத்திருந்தார் அவர். எப்படியோ பணம் பெற்றவரிடம் தொடர்பு கொண்டு பணத்தை திரும்ப பெற்றாகி விட்டது.

மாலை நண்பர்கள் யாரிடமாவது பணம் வாங்கி கொண்டு வர வேண்டும் என்று நினைத்த வாசு அதை மறந்து விட்டான். என்ன செய்வது என்று தெரியாமல் அலுவலக வாசலில் நின்றான். ஒரு கார் அருகில் வந்து நின்றது. உள்ளேயிருந்து மேலாளரின் குரல். ''வீட்டுக்குத் தானே போறீங்க வாசு? வாங்க நான் டிராப் பண்ணிடறேன்,''போகும் வழியெல்லாம் அலுவலகம் பற்றிக் பேசிக் கொண்டே வந்தார் மேலாளர்.

வீட்டிற்குள் நுழைந்ததும் மனைவியிடம் கத்தினான் வாசு. ''ராசி பலன் எல்லாம் நம்ப மாட்டேன்னு சொன்னீயே? இன்னிக்கு என் ராசிக்கு பிரச்னைன்னு போட்டிருந்தாங்க. தொட்ட இடமெல்லாம் பிரச்னை,'' வரிசையாக பிரச்னைகளை சொன்னான்.மனைவி அமைதியாக சொன்னாள். ''வண்டி பஞ்ச்சர்னு வீட்டுலயே தெரிஞ்சி போச்சி. நடுவழில ஆகியிருந்தா திண்டாடிப் போயிருப்பீங்க. பர்சை மறந்து வச்சிட்டு போனது பிரச்னை தான். ஆனா உங்க பிரண்டு அதே பஸ்ல வந்துட்டாரே,''

''ஆனா கேஷ் 40000 போன பிரச்னை,''''அது பெரிய வரப்பிரசாதம். அது நடக்கலேன்னா நீங்க லேட்டாக போனதுக்கு அந்த மேனேஜர் கிட்ட வாங்கிக் கட்டிக்கிட்டு இருப்பீங்க. இப்போ அதை கண்டுபிடிச்சி நல்ல பேர் வாங்கீட்டீங்க. வர வழியில மேனேஜரோட பேசிக்கிட்டே வந்தீங்க. இந்தாண்டு இன்க்ரிமெண்ட், பிரமோஷன் போடும் போது இது அவருக்கு மனசுல இருக்கும்,''''அது எப்படி எல்லாத்தையும் நீ நல்லபடியாவே பாக்கற''''நீங்க இன்னிக்குத் தேதி கிழிக்கும் போது ரெண்டு தாளைச் சேத்துக் கிழிச்சிட்டீங்க. இன்னிக்கு உங்களுககு வளர்ச்சின்னு போட்டிருந்தது. நான் அந்தக் கோணத்துல எல்லாத்தையும் பார்த்தேன். நீங்க பிரச்னைங்கற கோணத்துலேயே பாத்தீங்க. அதுதான் வித்தியாசம்,''பாரதியின் வரிகள் 2019ன் நாட்காட்டியில் ஒவ்வொரு தாளிலும் அனைத்து ராசிக்காரர்களுக்கும் 'வளர்ச்சி' என்று தான் எழுதியிருக்கிறது. கண்ணைக் கசக்கிக் கொண்டு பாருங்கள். பிரச்னை கூட மாறுவேடம் போட்டுக் கொண்டு வந்த வளர்ச்சி வாய்ப்பாக தான் தெரியம். அப்படி தெரிந்தால் வானம் உங்களுக்கு வசப்படும். பாரதியின் இந்த வரிகளைத் தினமும் சொல்லுங்கள்.

'கண்ணில் தெரியும் பொருளினைக் கைகள் கவர்ந்திட மாட்டாவோ?-அட மண்ணில் தெரியுது வானம், அது நம் வசப்படலாகாதோ? எண்ணி எண்ணிப் பல நாளும் முயன்றிங்கு இறுதியிற் சோர்வோமோ?- அட விண்ணிலும் மண்ணிலும் கண்ணிலும் எண்ணிலும் மேவு பராசக்தியே!'இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

-- வரலொட்டி ரெங்கசாமி,எழுத்தாளர்varalotti@gmail.com

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

    மேலும் செய்திகள் :

Advertisement