Advertisement

எதிர்க்கட்சிகள் வாக்குறுதி தருமா?

புத்தாண்டு நாளில் இருந்து, ஜி.எஸ்.டி., வரி விதிப்பு எளிதாக மாறுவது, நல்ல அடையாளம். ஜி.எஸ்.டி., என்பது, 'சரக்கு சேவை வரி' என, அழைக்கப்படுகிறது. நம் நாட்டின், பல்வேறு மாநிலங்களில் உள்ள வரி விதிப்பு நடைமுறையை ஒழுங்குபடுத்த, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு விரும்பி ஆசைப்பட்டாலும், திட்டவட்டமாக ஏதும் செய்ய முடியவில்லை.

மாறாக, மத்தியிலும், மாநிலங்களிலும், ஒரே மாதிரி காங்கிரஸ் ஆளுமையில், நாடு இருந்த போது, நாட்டின் கடன் சுமை அதிகரித்ததுடன், வரி விதிப்புகள் அதிகரித்ததே தவிர, பலன்கள் குறைவு.கடந்த, 1970ல், திடீரென உணவுப் பஞ்சம் வந்துவிடும் நிலை ஏற்பட்ட போது, 'பசுமைப் புரட்சி' திட்டம் அமலானது. அதற்குப் பின், விவசாயத்தில் மாற்றத்திற்கான கொள்கைத் திட்டம் புதிதாக இல்லை.

மேலும், அபார மக்கள் தொகைப் பெருக்கம், பெரிய விவசாயிகள் என்ற எண்ணிக்கையை குறைத்து, குறு, சிறு விவசாயிகள் என்ற நிலைமையை உருவாக்கி விட்டது. மத்தியில் கூட்டணி ஆட்சியை, காங்., நிர்வகித்த போதும், பெரிய மாற்றங்கள் வரவில்லை. ஆனால், வாஜ்பாய் தலைமையிலான கூட்டணி ஆட்சியில், வேலைவாய்ப்பை அதிகரிக்கும் தங்க நாற்கர திட்டம், மொபைல் புரட்சி மற்றும் விவசாயிகள் உற்பத்தி பொருளுக்கு ஆதரவு விலை அதிகரிப்பு ஆகியவை வந்தன.

அந்த ஆட்சி ஒளிராமல் மறைந்து, அடுத்ததாக, காங்., கூட்டணி ஆட்சி அமைந்த முதல் சில ஆண்டுகளில், அதன் மொத்த வளர்ச்சி அதிகரிப்புக்கு, வாஜ்பாய் விதைத்த விதை பலன் தந்ததாக, இப்போது பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

இன்றைய சர்வதேச சூழலில், இந்திய பொருளாதாரம் மதிக்கப்படும் நிலையில், ஸ்திரத்தன்மை உள்ள அடையாளங்களில், ஜி.எஸ்.டி.,யும் ஒன்று. பல்வேறு கட்சிகள் ஆளும் மாநிலங்கள் அடங்கிய கவுன்சிலில் நடத்திய ஆலோசனைகளில் இன்று, 1,216 பொருட்கள் மற்றும், 46 சேவைகள் தற்போதைக்கு, மூன்று ரக வரி விதிப்புகளில் வந்துள்ளன. அதிலும், 12 மற்றும், 18 சதவீத வரி விதிப்புகள் ஒன்றாக குறையும் காலமும், 28 சதவீத வரி விதிப்பு என்ற பேச்சே இல்லாத காலமும் விரைவில் வரும்.

காங்கிரஸ் கட்சி விரும்புகிறபடி, தனியாகவோ, அக்கட்சி தலைமையில், 2019, லோக்சபா தேர்தலுக்குப் பி,ன் கூட்டணி ஆட்சியோ வரும் பட்சத்தில், காங்கிரஸ் தலைவர் ராகுல் விருப்பப்படி, ஒரே வரி என்ற நடைமுறையைக் கொண்டு வரலாம். ஆனால், கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளில், அனைவரையும் வெளிப்படையான வரித் திட்டத்திற்கு கொண்டு வந்த செயல், மிகப்பெரிய விஷயும்.

அதை விட, பெட்ரோல், மின்சாரம் ஆகியவை மீதான வரி விதிப்பு, 'ஒரே சிலாப்' என்ற அடிப்படையில் வரி குறைய வேண்டும் என ஆசைப்பட்டாலும், மாநிலங்கள் பல, தங்கள், 'காமதேனு'வான இதை இழக்க முன்வரவில்லை. இதில் முடிவு காண்பதை விட, இத்திட்டத்தில் தவறுகள் காணப்பட்டால், அதற்கு தீர்வைத் தரும், மேல்முறையீட்டு கவுன்சில் அமைப்பு, மாநிலங்களுக்கு உரிய வருவாயை தருவதில், தாமதமற்ற நடைமுறை ஆகியவற்றை, இந்த அரசு, தன் பதவிக்காலம் முடிவதற்குள் கொண்டு வர முயன்றிருக்கிறது. மேலும், 1 கோடி ரூபாய் வரை, ஆண்டு வர்த்தக பரிவர்த்தனை உள்ள நிறுவனத்திற்கு, இவ்வரி கிடையாது.

சாதாரண வரி, அதற்கு மேல் உபரி வரி, சிறப்பு வரி என, 31 சதவீத வரி விதித்த காலம் முடிந்திருக்கிறது. ஆகவே, சில திருத்தங்கள் அடுத்தடுத்த மாதங்களில் வரும் போது, 130 கோடி மக்களை கொண்ட நாட்டில், இந்த மாற்றம் மிகப்பெரிய ஒன்றாக கருதப்படும். இவ்வரி வசூலில், சிமென்ட் போன்றவற்றிற்கு, காலப்போக்கில் வரி குறைக்கப்படும் போது, ஏற்கனவே அமலான பல்வேறு ரியல் எஸ்டேட் சம்பந்தமான விதிகள் மாறியதால், வீடுகள் வாங்குவோர் நிச்சயம் லாபமடைவர்.

ஆனால், இந்த ஆண்டு, தேர்தல் நடக்கும் ஆண்டு. மத்திய அரசு வெளியிடும் பட்ஜெட்டில், தீவிரமான பொருளாதார அணுகுமுறை மட்டுமே இருக்க வேண்டும் என, எதிர்பார்க்க முடியாது. இதற்கு முந்தைய தேர்தல் காலங்களைப் போல் இல்லா விட்டாலும், நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, சில சலுகைகளை அறிவிக்கலாம்.

ஆனால், நிதி பற்றாக்குறையை அதிகரிக்காத, அதிக தனி நபர் வரிச்சுமை அதிகரிக்காத எந்த முடிவும், இன்றைய வளர்ச்சியை பாதிக்காது. எதிர்க்கட்சிகளும், பணவீக்கத்தை அதிகரிக்கும் கொள்கை, தங்களுக்கு கிடையாது என்பதையும், வளர்ச்சி விகிதத்தை மாநிலங்களிலும், மத்திய அரசிலும் அமல்படுத்தும் திட்டங்கள் மட்டுமே, தங்களின் குறிக்கோள் என, மக்களிடம் வாக்குறுதி அளிக்க வேண்டும்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement