Advertisement

நல்ல துவக்கம் வரட்டும்!

தமிழகத்தில், தொழில் முதலீட்டிற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. புத்தாண்டு பிறந்த சில நாட்களில், இதற்கான முழு விபரங்களும் வெளியாகும் போது, பல முன்னேறிய மாநிலங்கள் வரிசையில் இருந்து தமிழகம், எளிதில் இறங்காது.தமிழக முதல்வர் பழனிசாமி தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், நடந்த ஆலோசனைகளில், மேகதாது அணை விவகாரம், 'கஜா' புயல் பாதிப்புக்கு, மத்திய அரசிடம் இருந்து நிவாரணம் பெறுவது இடம் பெற்றிருக்கின்றன.அதோடு, அடுத்த மாதம் கடைசி வாரத்தில் நடக்க உள்ள, உலகத் தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு குறித்த ஆலோசனை வரவேற்கத்தக்கது. இதில், 16 புதிய தொழில் நிறுவனங்களுக்கு தரப்படும் அனுமதி என்பது, 12 ஆயிரம் கோடி ரூபாய் வரை முதலீடு வர வழிகாட்டலாம். அதற்கான வழிமுறைகளை அரசு வகுக்கும் என்றபோதும், அதைப்பற்றி விலாவாரியாக தெரிவிக்க வேண்டியதில்லை.ஆனால், கார் மற்றும் அதைச் சார்ந்த தொழில்கள், உணவு பதப்படுத்தி விற்கும் நவீன தொழில்நுட்பம் குறித்த தொழில்கள் ,இதில் இருக்கலாம் என்ற கருத்து, பரவலாக வந்திருக்கிறது.தமிழக அரசியலில், அ.தி.மு.க., பழைய பலத்துடன் இருக்கிறதா என்பதை, ஏதாவது தேர்தல் வந்தாலொழிய, அறுதியிட முடியாது. லோக்சபா தேர்தலுக்கு முன், உள்ளாட்சி தேர்தல் வரும் சூழ்நிலை இருப்பதாக தோன்றுகிறது. ஏனெனில், அதற்கான தொகுதி வரையறைப் பட்டியல், வெளியாகி இருக்கிறது.கஜா புயல் பாதிப்பு, டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பேரழிவை ஏற்படுத்திய விஷயம் வேறு. தொழில் முனைவோர் நிச்சயமாக, எல்லா வசதிகளுடன், உற்பத்தியாகும் பொருட்களை ஏற்றுமதி செய்யும் வசதி மற்றும் கட்டமைப்பு வசதிகள் கொண்ட இடத்தையே, தேர்வு செய்வர்.இன்றைய நிலையில், சென்னையைச் சுற்றி பல பெரிய நிறுவனங்கள் அமைந்துள்ளன. 'ஸ்மார்ட் சிட்டி' என்ற பார்வையில், சென்னை, திருச்சி, கோவை என்ற பெரிய நகரங்கள் சில தகுதிகள் பெற்றிருக்கின்றன. அதோடு, புதிய வரியான, ஜி.எஸ்.டி., வருவாய் பாதிப்பு, தமிழகத்திற்கு இல்லை.ரியல் எஸ்டேட் தொழிலில் இருந்த மறைமுகமான, லஞ்ச சம்பந்தப்பட்ட விஷயங்கள் படிப்படியாக குறைந்ததுடன், ஆக்கிரமிப்பு நிலங்கள், அதற்கான பட்டா பெறும் முறை ஆகியவற்றில், படிப்படியாக வெளிப்படைத் தன்மை வருகின்றன.ஆகவே, இந்நேரத்தில் புதிதாக தொழில் துவங்குவோருக்கு தர வேண்டிய வரிச்சலுகை மற்றும் சில உதவிகளை முறையாக செய்ய, தமிழக அரசு அனைத்து ஏற்பாடுகளையும் செய்யலாம். ஏனெனில், முன்னாள் முதல்வர் இந்த விஷயத்தில், அதிக பரபரப்பு அறிவிப்புகளை அறிவித்தபோதும், நடைமுறையில் அனைத்தையும் சுலபமாக்கும், 'சிங்கிள் விண்டோ' என்ற ஒற்றைச் சாளர முறையை அமல்படுத்தவில்லை.தொழில் துறை அமைச்சர் சம்பத், வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களை ஈர்க்க, உயர் அதிகாரிகளுடன் சென்று வந்திருக்கிறார். சில ராணுவ தற்காப்பு உதிரி பாகங்கள் தயாரிப்பு உபகரணங்கள் குறித்த கொள்கை விளக்கங்கள் தயாராகி உள்ளதாக கூறப்படுகிறது.மத்திய அரசின் தொழில் கொள்கை, வெளிப் படையாக இருக்கும் சூழ்நிலை அதிகரித்திருப்பதும், உயர் மட்ட ஊழல்களை தவிர்க்க, 'டிஜிட்டல்' நடைமுறைகள் மற்றும் 'ஆன்லைன்' கருத்துப் பரிமாற்றம் அதிகரித்திருப்பதும், எளிதாக சில கொள்கை முடிவுகளை அறிவிக்க வசதியாகும்.ஆந்திரா, தெலுங்கானா போன்ற மாநிலங்களுக்கு, சில தொழில்துறைகள் மாறிய காலம் இனியாவது நீங்க, இத்திட்டம் செயல்பட வேண்டும். ஒரேடியாக, 30,000 பேருக்கு வேலைவாய்ப்பு என்ற கருத்தை வைத்து, இதை எடை போட வேண்டாம்.ஏனெனில், திறன் மிகுந்த பல்வேறு துறைப் பணியாளர்கள், ஐ.டி., துறையில், 'ஆர்ட்டிபிஷியல் இன்டலிஜென்ஸ்' வரை அறிந்தவர்கள், பொறியியல் துறை உயர் பட்டதாரிகள் ஆகியோர் மட்டும் இன்றி, மற்ற தகுதி மிக்க ஆயிரக்கணக்கான பேர், இதனால் பயன் பெறலாம்.தொழில் வளர்ச்சிக்கு அறிகுறியாக, பல்லா வரத்தில், சிங்கப்பூரைச் சேர்ந்த, 'அசென்டாஸ் நிறுவனம்' 250 கோடி ரூபாய்க்கு சொத்தை வாங்கி யிருப்பது, ஒரு சிறிய அடையாளம். அது மட்டும் அல்ல... சென்னை, கோவை உட்பட சில பெரிய நகரங்களில், சர்வதேச உணவு வகை நடைமுறை மக்களை ஈர்ப்பதும், அதற்கான சர்வீசுகள், ஆன்லைனில் அதிகரித்திருப்பதும், வளர்ந்து வரும் சமுதாய அறிகுறிகளுக்கு அடையாளம்.ஆனால், சுற்றுச்சூழல் மாசு மற்றும் தண்ணீர் தேவை ஆகியவற்றை, இப்பகுதிகளில் அடுத்த, 25 ஆண்டுகளுக்கு மதிப்பீடு செய்ய வேண்டிய கட்டாய சூழ்நிலையை, அரசு தன் கொள்கைகளில் கருத்தாக்கம் செலுத்துவதும் அவசியம்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement