Advertisement

தனி நபர் உரிமைகள்பாதிப்பு ஏற்படுமா?

நாட்டில் உள்ள அனைத்து கணினிகளையும் கண்காணிக்கும் சட்ட விதிகளை நடைமுறைப்படுத்த, மத்திய அரசு முன்வந்திருக்கிறது. இந்தச் செயல், தனி நபர் பாதுகாப்பு உரிமைகளை, அரசியலமைப்பு சட்ட விதிகள்படி பாதிக்கும் என்ற கருத்து அதிகமாக பேசப்படுகிறது.கணினி பயன்பாடு, 'ஸ்மார்ட்போன், வாட்ஸ் ஆப்' எனும் பல வசதிகள் இப்போது அதிகரித்திருக்கின்றன. 'டிஜிட்டல் டிவைட்' என்ற காலம் மாறி, கடந்த ஐந்து ஆண்டுகளில், தகவல்கள் பரிமாற்றம் அதிகரித்திருக்கிறது.ஆனால், தனி நபர், தன் கடமைகளை மீறாமல் அல்லது விஷமத்தனமான செயல்களை பரப்பாமல் இருக்க, அவை கட்டுக்குள் இருக்கிறதா என்பதை, யாரும் கண்டறிய முடியாத விஷயமாகி விட்டது.கடந்த, 2017ல், உச்ச நீதிமன்றம் தன் தீர்ப்பில், 'தனித்துவ மேன்மை என்பது, அடிப்படை உரிமை; அதில் தலையிட முடியாது' என, அறிவுறுத்தியது. ஆதார் அடையாள அட்டையில் உள்ள சில தகவல்கள் பற்றிய சர்ச்சையில், அதில் இருந்து மற்ற தகவல்களை சேகரிப்பது என்பது, சுலபம் அல்ல என்றும் விளக்கப்பட்டது.ஆனால், கைவிரல் ரேகை, விழிரேகை ஆகியவற்றை எடுக்கும் நடைமுறைகளை, நாம் ஏற்றுத்தான் ஆக வேண்டும். இவற்றையும், தனி மனித தகவல்களையும் ஒப்பிட்டு, அதில் ஏதாவது பயங்கரம் நடக்கும்போது, அது ஆபத்தாகிவிடும்.ஏனெனில், பயங்கரவாதம் மற்றும் வதந்தி பரப்பும் கூட்டம் அதிகரித்திருக்கிறது. மிகவும் மோசமாக, 'அனுமன் எந்த ஜாதி' என்ற விவாதம் இதற்கு உதாரணம். இஸ்லாமியர் என்றும் கூறிவிட்டனர். யாராவது திருப்புகழ் படித்து விட்டு, 'மயிலேறும் ராவுத்தனே' என்று அதில் இருப்பதை, முருகனையும் இனி வேறு மாதிரி விமர்சிக்கலாம்.வளர்ந்து வரும் தொழில்நுட்ப வசதிகளால் ஏற்படும் குற்றங்கள், 'சைபர் கிரைம்' தேவையை அதிகரித்திருக்கிறது. பல்வேறு மாநிலங்கள், 'பெடரலிசம்' என்ற போர்வையில், தேச நலன் கருதாத பிரிவினைவாத சக்திகளை ஆதரிக்கும்போது, அதைக் கடிவாளம் போட்டு கட்டுக்குள் வைக்க, அடுத்தடுத்த நடைமுறைகள் தேவை.காங்கிரஸ் தலைவர் ராகுலோ, 'அதிகாரத்தைப் பயன்படுத்தி, இந்தியாவை ரகசியமாக, காவல்துறை கண்காணிப்பில் வைக்கும் முயற்சி' எனக் கூறுகிறார். நல்லவேளையாக, இந்த முடிவை அரசு அறிவித்தபோது, ராஜ்யசபா சில நிமிடங்கள் செயல்பட்டிருக்கிறது. அதனால், அதில், 'அரசு முடிவு புதிதானது அல்ல; விசாரணை அமைப்புகள் கண்காணிக்க, 2009ல், காங்கிரஸ் தலைமையிலான மத்திய ஆட்சி கொண்டு வந்த விதிகள் இவை' என, நிதி அமைச்சரும், சிறந்த சட்ட நிபுணரும் ஆன அருண் ஜெட்லி கூறியிருக்கிறார். அக்காலத்தில், ராகுலும், எம்.பி.,யாக இருந்தவர்.டில்லி முதல்வர் கெஜ்ரிவால், கேரளாவைத் தவிர ஆட்சி இல்லாத கட்சித் தலைவர் யெச்சூரி, எதற்கெடுத்தாலும், பிரதமர் மோடியை வசைபாடும், 'லெட்டர் பேடு' கட்சித் தலைவர்கள், மிக முக்கியமான ஒன்றை மறக்கின்றனர்...நாட்டில் அவசர நிலையை, 1975ல் இந்திரா கொண்டு வந்தது, உச்ச நீதிமன்றம் நீதிபதிகள் கருத்து சுதந்திரத்தை அழித்தது, தனி நபர் சுதந்திரத்தை வலியுறுத்தி போராடிய, 1.76 லட்சம் மக்களை சிறைப்படுத்தியதை, இவர்கள் மறந்து விடுகின்றனர். ஐ.பி., எனும் நுண்ணறிவுப் பிரிவு, அமலாக்கத் துறை, சி.பி.ஐ., ஜம்மு - காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கான விசாரணை அமைப்பு, தேசிய புலனாய்வு அமைப்பு ஆகியவை, இந்தக் கண்காணிப்பை நடத்தும் சில முக்கிய அமைப்புகள்.இன்றைய விஞ்ஞான வளர்ச்சியில், 'சிசிடிவி' கேமரா கூட, தனி நபர் ரோட்டில் நடந்து செல்வதைக் கண்காணிக்கிறது. அதுமட்டும் அல்ல... சில செயற்கைக்கோள் வசதிகள், தனி நபர் நடமாட்டத்தை எளிதாக கண்டறிந்து, இருப்பிடத்தை அறிய உதவும்.எல்லாரும் அறிந்த பயங்கரவாதி, ஒசாமா தங்கியிருந்த மறைவு இடத்தை கண்டுபிடித்ததும், அவன் உறவினரின் ரத்தப் பரிசோதனையை எடுத்து, அதை வைத்து ஒசாமா கொல்லப்பட்டதை அறிவித்ததும், இன்றைய விஞ்ஞான வளர்ச்சியின் அடையாளம். தேசத்திற்கு எதிராக செயல்படுபவர்கள், பயங்கரவாதிகளுக்கு துணை போகிறவர்கள், ஆகியோரது நடவடிக்கைகள், மிகவும் விஞ்ஞானபூர்வமாக உள்ளன.மாறாக, இப்போது அரசு அறிவிப்பில் உள்ள விதிகள் பரவலாக, போலீஸ் கண்காணிப்பில் எதிலும் சம்பந்தப்படாத, அப்பாவி மக்களை பாதிக்குமா அல்லது மாநில அரசு கண்காணிப்பு ஏஜன்சிகள், 'சைபர் கிரைம்' நடைமுறைகளில் உலகத்தரத்தில் இருக்கிறதா? அதை இணைக்கும் மத்திய ஏஜன்சி, மிகச்சிறந்த நடுநிலையுடன் செயல்படுமா என்பதை, இச்சட்டங்கள் தெரிந்த நிபுணர்கள் விவாதம் நடத்தினால் நல்லது.அரசும் அதற்கேற்ப திருத்தங்களை, இந்த அறிவிப்பில் கொண்டு வரலாம்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement