Advertisement

மறைந்தார் மக்கள் மருத்துவர் டாக்டர் ஜெயச்சந்திரன்...

நம்ம ஐந்து ரூபாய் டாக்டர் இறந்துட்டாராமே? சோகத்துடன் மக்கள் கண்ணீரும் கவலையுமாக, அவரை கடைசியாக ஒரு முறை பார்க்க ஒட்டம் நடையுமாக செல்கின்றனர்.

வடசென்னை பழைய வண்ணாரப்பேட்டை வெங்கடாசலம் தெருவில் உள்ள அவரது வீட்டின் முன் அப்படியொரு கூட்டம், கூடியிருக்கும் எல்லார் முகங்களிலும் கவலை,கண்ணீர்,வருத்தம் மேலோங்கி காணப்படுகிறது.

கூடத்தில் ப்ரீஸரில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலை பார்த்தவர்கள் பெருங்குரலெடுத்து அழுகின்றனர்.

இன்று காலை இறந்து போன டாக்டர் ஜெயச்சந்திரன் கடைசி நிமிடம் வரை மக்கள் மருத்துவராகவே இருந்து இறந்து போனதால் திரண்டதே இந்தக்கூட்டம்.

இந்த அளவிற்கு மக்கள் அன்பை பெற டாக்டர் ஜெயச்சந்திரன் செய்தது ஒன்றே ஒன்றுதான் அது ஏழை எளிய மக்களிடம் அன்பைப் பொழிந்ததுதான்.

சென்னை-புதுச்சேரி ரோட்டில் கல்பாக்கம் பக்கம் உள்ள கொடைப்பட்டினம் கிராமம்தான் இவரது சொந்த ஊர்.படிப்பு வாசனையே இல்லாத எளிய குடும்பத்தில் பிறந்தவர்,சின்ன வைத்தியம் பார்த்தால் கூட பிழைத்துக்கொள்ளக்கூடிய பலர் அந்த வாய்ப்பு கூட இல்லாமல் இறந்ததை பார்த்து வருந்தியவரின் அடிமனதில் விழுந்ததுதான் டாக்டர் கனவு.

கிராமத்தில் படிக்க வசதி இல்லாததால் சென்னை வந்து அத்தை-மாமா வீட்டில் படித்தார்.உணவு என்பதே பழைய கஞ்சிதான்.கல்லுாரியில் படிக்கும் போதுதான் இவருக்கு செருப்பே அறிமுகமானது.நல்ல உணவு நல்ல உடை என்பதெல்லாம் பிறகுதான்.

மருத்துவக்கல்லுாரியில் படிக்கும் போது கூட முதல் இரண்டு வருடம் நடந்துதான் போயிருக்கிறார் பிறகுதான் நண்பர் ஒருவர் தயவில் சைக்கிள் பயணம் சாத்தியப்பட்டது.

இப்படியாக மருத்துவரான இவர் படிப்பை முடித்ததும் எடுத்துக்கொண்ட முதல் உறுதி யாரிடமும் வேலை பார்க்கக்கூடாது எளிய மக்களின் இருப்பிடத்திற்கே சென்று இலவசமாக வைத்தியம் பார்க்கவேண்டும் என்பதுதான்.

இதற்காகவே வடசென்னைக்கு சென்றார் அங்கு கிளினிக் வைக்க கையில் காசில்லை, தன்னுடன் படித்த நண்பரின் தந்தை கிளினிக் வைத்துக் கொடுத்து கூடவே ஒரு கண்டீசனும் போட்டார், இலவசமாக வைத்தியம் பார்த்தால் மரியாதை இருக்காது இரண்டு ரூபாயாவது வாங்குங்க என்றார்.

அதன்படி இரண்டு ரூபாய் வாங்கிக்கொண்டு வைத்தியம் பார்க்கத்துவங்கினர்..இரண்டு ரூபாய் வைத்தியர் என்ற பெயரில் இவர் பிரபலமானார்.சமீப காலமாகத்தான் மக்களே இரண்டு ரூபாய் சில்லரை கொடுக்க சிரமமாக இருக்கிறது ஐந்து ரூபாய் வாங்கிக் கொள்ளுங்கள் என்று சொல்லி ஐந்து ரூபாய் கொடுத்து இரண்டு ரூபாய் டாக்டரை ஐந்து ரூபாய் டாக்டராக்கிவிட்டனர்.மருந்து பிரதிநிதிகள் தரும் மருந்து மாத்திரைகள் மட்டுமின்றி இவரே மருந்து கம்பெனியிடம் குறைந்த விலைக்கு வாங்கி அந்த மருந்து மாத்திரைகளை நோயாளிகளுக்கு இலவசமாக கொடுத்துவந்தார்.

ஸ்கேன்,எக்ஸ்ரே எடுப்பது எலும்பு முறிவு இதய நோய் போன்ற கொஞ்சம் பெரிய பிரச்னை என்றால் சம்பந்தப்பட்ட மருத்துவர்களிடம் பேசி அப்பாயிண்மெண்ட் வாங்கி குணமாகும் வரை பார்த்துக் கொண்டார்.

இவரது ராசி காரணமாக எழை எளியவர்கள் மட்டுமின்ற வசதி படைத்த பலரும் இவரிடம் வைத்தியம் பார்த்து ஒரு சில நாளில் குணமாகிவிடுவர், அப்போது எங்களால் நிறைய பணம் கொடுக்கமுடியும் வாங்கிக்கொள்ளுங்கள் என்பார்கள் பதிலுக்கு இவர் 'அப்படியானால் நீங்கள் கொடுக்க விரும்பும் பணத்திற்கு பதிலாக மருந்து மாத்திரைகளாக வாங்கிக்கொடுத்துவிடுங்கள்,மருந்து மாத்திரை வாங்க முடியாத நோயாளிகளுக்கு நான் அவற்றை தந்துவிடுவேன் என்பார்'.அப்படி வாங்கிய மருந்து மாத்திரைகள் இலவசமாக ஏழை நோயாளிகளுக்கு கொடுத்துவிடுவார். மூன்று தலைமுறையாக இவரிடம் வைத்தியம் பார்த்தவர்கள் நிறையபேர்.

நான் உலகத்திலேயே அதிகம் நேசிப்பது என் மருத்துவ தொழிலைத்தான் இதன் மூலம் ஒரு உயிரை காப்பாற்ற முடியும் எனும் போது அதில் கிடைக்கும் ஆனந்தமும் மனதிருப்தியும் கோடி கோடியாய் கொடுத்தாலும் கிடைக்காது 'ஐ லவ் மை ஜாப்' என்று அவர் சொல்லும் போதே கண்களும் முகமும் அப்படி மலரும்.

காலையில் ஆறு மணிக்கு எல்லாம் அவசர நோயாளிகள் வந்து எழுப்பிவிடுவார்கள் , லுங்கி பனியனுடன் வைத்தியம் பார்க்க ஆரம்பிப்பவர் பிறகு சாப்பாட்டைக்கூட மறந்து அப்படியே வைத்தியம் பார்த்துக்கொண்டு இருப்பார்,வீட்டில் கூடியிருந்த பலர் அழுகையுடன் அவரைப்பற்றி பெருமையாகச் சொன்ன விஷயம் இது.

இது போக கணக்கு வழக்கு இல்லாமல் இலவச மருத்துவமுகாம் நடத்தியவர். ரத்ததானம் செய்ய ஒரு பெரிய தொண்டர் படையே வைத்திருந்தார்

இவரைப்பிடிக்காதவர்கள் என்று ஒருவரைக்கூட சொல்லமுடியாது வடசென்னை பகுதியில் யார் எந்த சமூக பணி செய்தாலும் அதில் இவரது பங்களிப்பு கொஞ்சமாவது இருக்கும் இவருக்காக எதையும் செய்யத்தயரான நண்பர்கள் நிறைய பேர் இவரைச் சுற்றியிருந்தனர் அவர்கள்தான் இவருக்கு ஷிப்ட் முறையில் வரும் நோயாளிகளுக்கு கம்பவுண்டர்களாக உதவியாளர்களாக இருந்தும் செயல்பட்டனர்.

தமிழ் ஆர்வலர் 'மகப்பேறும் மாறாத இளமையும்,'குழந்தை நலம் உங்கள் கையில்','தாய்ப்பால் ஊட்டுதலின் மகத்துவம்','உடல் பருமன் தீமைகளும் தீர்வுகளும்' என்பது போன்ற நுால்களை எளிய தமிழில் எழுதியுள்ளார்.

தன்னை நம்பி வந்த நோயாளியை எப்படி தேற்றுவது என்பதற்கு பதிலாக தன்னிடம் வந்துவிட்ட நோயாளியிடம் இருந்து எவ்வளவு தேற்றுவது என்ற அளவிற்கு மலினப்பட்டுவிட்ட மருத்துவர்கள் உலகில் மருத்துவம் என்பது மக்களுக்கு தொண்டு செய்யக்கிடைத்த மகத்தான பணி என்று கருதி செயல்பட்ட மாமனிதரான டாக்டர் ஜெயச்சந்திரன் தனது 68 வயதி்ல் இறந்துவிட்டார்.

ஒய்வு ஒழிச்சலின்றி எந்த நேரமும் நோயாளிகளுக்கு வைத்தியம் பார்ப்பதிலேயே கவனமாக இருந்ததால் இவரது உடம்பைக் கவனிக்க தவறிவிட்டார்.மூச்சுத்திணறல் மற்றும் ஆஸ்த்துமா காரணமாக சிரமப்பட்டார்.இவருக்கு வைத்தியம் பார்த்த டாக்டர்கள் கட்டாயம் நிறைய ஒய்வு எடுக்கவேண்டும் என்று சொல்லியிருந்தனர் ஆனால் தன்னை நம்பிவரும் நோயாளிகளை தவிர்க்கமுடியாமல் தன்னை ரொம்பவே வருத்திக்கொண்டார்.

யாரும் எதிர்பாரதவிதமாக இன்று காலை இறந்துவி்ட்டார் நாளை காலை அவரது உடல் அடக்கம் நடைபெறுகிறது.மக்களுக்காக வாழ்ந்து மக்கள் நல மருத்துவர் என்ற பெயரெடுத்த டாக்டர் ஜெயச்சந்திரன் மக்கள் மனதில் என்றும் வாழ்வார்.

-எல்.முருகராஜ்

murugaraj@dinamalar.in

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (3)

  • sivakumar - Qin Huang Dao,சீனா

    டாக்டர் ஐயாவை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், வட சென்னை மக்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள். இவரல்லவோ மனிதரில் மாணிக்கம்.

  • senthil kumar kasinathan - mannargudi,இந்தியா

    நானும் ஒரு முறை இவரிடம் வைத்தியம் பார்த்துள்ளேன் கடுமையான காய்ச்சல் ஒரு ஊசியில் சரியானது நாம் மருத்துவரை இழக்கவில்லை ஏழைகளின் கடவுளை இழந்து விட்டோம்.

  • ramanathan - Ramanathapuram,இந்தியா

    கனத்த இதயத்தோடு எனது ஆழ்ந்த இரங்கலை பதிவிடுகிறேன். ஐயா மறையவில்லை. நம்மோடு தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement