Advertisement

தேசத்தை வளர்த்தெடுக்க உதவும் விளையாட்டு

Share

நாட்டின் வளர்ச்சிக்கு விளையாட்டு எப்படி உதவும்? ஈஷா கிராமப் புத்துணர்வு இயக்கம் தனது திட்டங்களில் விளையாட்டுகளை அறிமுகம் செய்ததன் மூலம் கிராமங்களில் நிலவிய ஜாதி, சமூக அடையாளங்களைக் கடந்து மக்கள் எப்படி உற்சாகத்துடன் வெளிவந்தார்கள் என்பதை நம்மிடம் பகிர்ந்து கொள்வதுடன், நமக்கு வலுவான தேசம் வேண்டுமா? முதலில் ஆரோக்கியமான, உறுதியான மனிதர்களை உருவாக்க வேண்டும் என்பதை விளக்குகிறார் சத்குரு.

கேள்வி: நமஸ்காரம் சத்குரு. கிராமப்புற மக்களின் நலனுக்கான திட்டங்களில் நீங்கள் விளையாட்டுகளை ஒரு பகுதியாக வைத்திருப்பதை கேட்கும்போதே ஆர்வமாக இருக்கிறது. கிராமப்புற மக்களின் வாழ்வில் ஈஷா அறக்கட்டளை விளையாட்டுகளை எப்போது, எப்படி பயன்படுத்தத் துவங்கியது.?

சத்குரு: பலவருடங்களுக்கு முன் முதன்முதலாக கிராமப் புத்துணர்வு இயக்கத்தை நாம் துவங்கியபோது நடந்தது இது. கிராம மக்களுக்கு ஒரு தியான செயல்முறையை வழங்க நாம் விரும்பினோம். முதல் நாள் வகுப்புக்கு ஒரு நூறு பேருக்கு மேல் வந்திருந்தார்கள். மூன்றாவது நாள் நாம் அனைவருக்கும் மதிய உணவு பரிமாறினோம். ஆனால் நான்காவது நாள் பார்த்தால் பாதிப் பேர் வகுப்புக்கே வரவில்லை. ஏன் என்று நாம் விசாரித்தபோது, ஒரு தரப்பினர் அவர்களை வரவேண்டாம் என்று சொல்லி விட்டதாக தெரியவந்தது. ஏனென்றால் அவர்களுடன் சரிசமமாக அமர்ந்து உணவு உண்பதை இந்த தரப்பு ஜாதியினர் விரும்பவில்லை. இதுதான் பிரச்சினை என்றால் இதற்கு மேல் வகுப்பை தொடர்வதில்லை என முடிவு செய்தேன். வகுப்பை அப்படியே பாதியில் நிறுத்தினோம்.

ஆனால் சற்றே கவனித்துப் பார்த்தபோது, இது சில ஆயிரம் ஆண்டுகளாகவே தொடர்ந்து வரும் ஒரு பிரச்சினை என்பதையும் பார்த்தோம். இதை ஒரேநாளில் தீர்க்க முடியாது. எல்லோரும் சேர்ந்து உணவருந்தும்படி நாம் சொன்னது இப்போது ஒரு சர்ச்சையை உருவாக்கி இருக்கிறது. எல்லோரும் சேர்ந்து உணவருந்துவதுதானே அவர்களுக்கு பிரச்சினையாக இருக்கிறது. எனவே எல்லோரும் சேர்ந்து விளையாடும் வகையில் நிகழ்ச்சியை மாற்றியமைத்து விடுவது என முடிவு செய்தோம்.

எல்லோரும் ஒன்றாக சேர்ந்து விளையாடுவதில் அவர்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. இந்த ஒரு அம்சம், கிராமப் புத்துணர்வு இயக்கத்தின் ஒட்டுமொத்த பரிமாணத்தையே மாற்றியமைத்தது. சேர்ந்து விளையாடும்போது அவர்களைப் பற்றி அவர்கள் வைத்திருந்த மொத்த அடையாளங்களையும் மறந்தார்கள். விளையாட்டின் அழகே இதுதான் - நீங்கள் களத்தில் குதித்ததும் எழும் தன்னை மறந்த உணர்வில், தானாகவே உங்களின் அடையாளங்கள் நொறுங்குகிறது.

எப்போதுமே, உலகம் முழுவதிலும் நடக்கும் நம் நிகழ்ச்சிகள் அனைத்திலும் நாம் விளையாட்டுகளைப் பயன்படுத்துகிறோம். எந்த ஒரு தியான செயல்முறையை கற்றுக்கொடுப்பதற்கும் முன்பாக, அதற்கான தீட்சை வழங்கும் முன் அனைவரும் எளிதாக கலந்துகொண்டு விளையாடும் விளையாட்டுப் போட்டிகள் ஏதாவது நடக்கும். கூச்சலும், ஓடியாடி விளையாடுவதுமாக, அனைவரும் மீண்டும் குழந்தைகள் ஆகிவிடுவார்கள். அந்த சுதந்திரமான உணர்வு இல்லை என்றால், மனம்விட்டு சிரிக்கவோ, கூச்சலிடவோ, ஓடியாடவோ அவர்கள் தயங்கினால் அவர்களால் நிச்சயமாக தியானம் செய்ய முடியாது.

அனைவருக்கும் சமவாய்ப்பு வழங்கும் ஆடுகளம்
ஜாதி மற்றும் பல பாரபட்சங்கள் தலைமுறை தலைமுறையாக தொடர்ந்து இருந்து வருகிறது. ஆனால் நாம் ஒன்றை கவனித்தோம். கிராம அளவிலான அணிகள் உருவாக்கப்பட்டு, மற்ற கிராமங்களுடன் மாநில அளவில் நடக்கும் போட்டிகளில் அவர்கள் விளையாடத் துவங்கியதும், யாரெல்லாம் நன்றாக விளையாடுகிறார்களோ அவர்கள் அவரவர் கிராமத்தின் ஹீரோவாக மாறி இருந்தார்கள். இவர் எந்த ஜாதி என்று யாருமே பார்க்கவில்லை - அவர்களது கிராமத்து அணியின் வெற்றி நாயகன் என்பதுதான் மிக முக்கியமானதாக இருந்தது. முழுமையாக இல்லை என்றாலும், விளையாட்டுகள் ஓரளவிற்கு ஜாதி முறையை சமன்படுத்தி இருக்கிறது. பரஸ்பர ஏற்றத்தாழ்வுகளை சீரமைக்க ஒரு பாலமாக இருக்கிறது.

இப்போதும் கூட அவர்களது கிராம அணி போட்டியில் கலந்துகொள்ளும்போது எல்லா ஜாதி பிரிவினரும் வருவார்கள். அவர்களுக்கிடையே இருந்த அடையாளம் மெல்லமெல்ல கரைந்து வருகிறது. போட்டி துவங்கும்முன் அவரவர் மக்களுடன் குழுவாக நின்றுகொண்டு இருப்பார்கள். விளையாட்டு சூடு பிடித்ததும் பார்வையாளர்களும் அந்த வேகத்தில் அனைவருடனும் கலந்து விடுவார்கள். ஒருவரை ஒருவர் தோளிலும் முதுகிலும் தட்டிக்கொண்டு உற்சாகமும் ஆரவாரமுமாக யார் எவர் என்பதையே மறந்திருப்பார்கள். இங்கேதான் விளையாட்டின் அழகு வெளிப்படுகிறது. ஈடுபாடு இல்லாமல் உங்களால் விளையாட முடியாது. எந்த விளையாட்டாக இருந்தாலும், ஈடுபாடுதானே அதன் உயிர்துடிப்பாக இருக்கிறது. ஈடுபாடு இல்லை என்றால் அங்கே எந்த விளையாட்டும் இருக்காது. விளையாட்டு உருவாக்கும் இந்த ஈடுபாடு இன்னும் பெரிதான அம்சங்களுக்கு அவர்களை தயார் செய்கிறது. விளையாட்டுகளை பயன்படுத்தி கிராமங்களில் உள்ள மக்களை அசைவற்று தியானத்தில் ஈடுபடவும் வாய்ப்பு ஏற்படுத்தி இருக்கிறோம். இது அவர்கள் வாழ்வில் சாத்தியம் என்பதே அவர்களால் கற்பனை செய்து பார்க்காத ஒன்று. இதனால்தான் விவேகானந்தர், பிரார்த்தனை செய்யும்போது இருப்பதைவிட, ஒரு பந்தை உதைக்கும்போது கடவுளுக்கு இன்னும் நெருக்கமாக இருப்பீர்கள் என்றார்.

விளையாட்டும் இந்தியாவின் எதிர்காலமும்
கேள்வி : ஒரு நாடாக, நமக்கு முன் ஏகப்பட்ட பிரச்சினைகள் இருக்கிறது. உங்கள் பார்வையில், ஒரு நாடாக இந்தியா வளர, விளையாட்டிற்கு என்ன பங்கு இருக்கிறது என்று நினைக்கிறீர்கள்?
சத்குரு : இப்போது நம் நாட்டில் 100 கோடி மக்கள் இருக்கிறோம். ஆனால் போதுமான விளையாட்டு இல்லை. நம்மிடம் இருக்கும் இந்த 100 கோடி மக்களை வைத்து இந்நேரம் இந்த பூமியில் இருக்கும் எல்லா விளையாட்டுகளுக்கும் நாம் ஒரு அணியை உருவாக்கி இருக்க வேண்டும். கோஸ்டா ரிக்கா கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? 50 இலட்சம் மக்கள் வசிக்கும் நாடு, உலகக்கோப்பை கால்பந்தாட்டத்திற்கு தங்கள் அணியை அனுப்புகிறது. 125 கோடி மக்கள் இருந்தும் நம்மால் ஏன் ஒரு அணியை உருவாக்க முடியவில்லை?
விளையாட்டை ஒரு முக்கியமான அம்சமாக நம் வாழ்க்கையில் எப்போதுமே கொண்டு வராமல் இருப்பதே இதற்கு காரணம். பலவிதங்களிலும் நமது விளையாட்டு சுபாவத்தை நம் தேசத்தில் இருந்து தொலைத்துவிட்டோம். இதற்காக பெரும் விலையையும் நாம் கொடுத்துக்கொண்டு இருக்கிறோம். அனைத்து தரப்பிலும் விளையாட்டுகளை மீண்டும் கொண்டு வரவேண்டிய நேரம் வந்துவிட்டது.

பள்ளிகளில் குறைந்தது 15 முதல் 20 சதவீத நேரத்தை குழந்தைகளிடம் விளையாட்டு சுபாவத்தை கொண்டு வருவதற்காக விளையாட்டுகளில் செலவிட வேண்டும். குழந்தையை ஒரு மூலையில் நாள் முழுவதும் உட்காரவைத்து சொல்லி கொடுப்பதை விட அவர்கள் துடிப்பாக விளையாடும்போது இன்னும் பல மடங்கு கற்றுத்தர முடியும். குழந்தைகளின் உடலும் மூளையும் நன்றாக வளர்ந்து எப்போதும் எதற்கும் தயாரான நிலையில் இருக்க வேண்டும். உங்கள் உடலும் மூளையுமே கூர்மையாக இல்லாமல் இருந்தால், நீங்கள் அந்தக் குழந்தைக்கு என்ன சொல்லி கொடுக்க முடியும்?

மற்றவர்களுடன் உடலளவில் போட்டியிடும் விளையாட்டு மட்டுமே விளையாட வேண்டும் என்றில்லை. வேடிக்கையானதாக இருந்தாலும் சரி. ஏதாவது ஒரு வகையில் மக்கள் விளையாட வேண்டும். இந்த உடலும் மூளையும் வளர இது முக்கியம். அப்போதுதான் ஆற்றல் மிகுந்த ஒரு மனித சமுதாயத்தை நம்மால் உருவாக்க முடியும். ஒருவரின் இளம் வயதிலேயே இதைக் கொண்டு வராமல் விட்டால், பிறகு நாட்டில் பெரும்பாலான மக்கள் முழு ஆற்றலோடு இருக்க மாட்டார்கள்.


உயிர் வாழ தகுதி
சில நாட்களுக்கு முன், தொழிலதிபர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் மத்தியில் பேசும்போது, வாழ்க்கைக்கு தகுதியான விதத்தில் அவர்களில் யாருமே இல்லை என்றேன். நாங்கள் எல்லோரும் நன்றாகத்தானே இருக்கிறோம். ஏன் இப்படிச் சொல்கிறீர்கள் என்றார்கள். அதற்கு இப்படி பதிலளித்தோம்: ஒருவேளை நாளை காலை நீங்கள் தெருவில் நடந்து செல்லும்போது ஒரு புலி வருகிறது என்று வைத்துக் கொள்வோம். உங்களில் எத்தனை பேரால் அருகில் இருக்கும் மரத்தின் மீது ஏறி உயிர் பிழைக்க முடியும்? ஒருவரால் கூட இதைச் செய்ய முடியாது. தெருவில் குனிந்து நிமிர்ந்து சுத்தம் செய்கிறாரே, அவர் வேண்டுமானால் மரத்தில் ஏறி தன்னை காப்பாற்றிக் கொள்ள முடியும். நீங்கள் எல்லோரும் - வெற்றியாளர்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கும் நீங்கள் எல்லோரும் புலியின் காலை உணவாக மாறி விடுவீர்கள்.
பொதுவாகவே இந்தியாவில் கச்சிதமாக உடலை வைத்துக் கொள்வது என்பது குறைவாகவே இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளில் சமூகத்தின் ஒரு குறிப்பிட்ட பிரிவில் மட்டுமே இதில் கொஞ்சம் ஆர்வம் வந்துள்ளது.

இது நாடு முழுவதும் பரவவேண்டும்
வலுவான தேசத்தை கட்டமைக்க முதலில் நமக்கு ஆரோக்கியமான, உறுதியான மக்கள் தேவை. இதை நிகழச்செய்வதில் விளையாட்டுகள் முக்கிய இடம் பெறமுடியும். ஒவ்வொரு தனி மனிதரையும் சரியான ஊட்டச்சத்தான உணவு, ஆரோக்கியம், கூர்மையான புத்திசாலித்தனம் இல்லாமல் வைத்துக்கொண்டு எப்படி ஒரு வலுவான தேசத்தை உருவாக்க முடியும். தேசம் என்று ஒன்றே இல்லை; மக்கள் மட்டுமே இருக்கிறார்கள். மக்கள் நல்வாழ்வில் விளையாட்டுக்கு மிகவும் முக்கியமான பங்கு இருக்கிறது.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement