Advertisement

சுமுக உறவு

தமிழகத்திற்கும், கர்நாடகத்திற்கும் இடையே, சுமுக உறவு ஏற்பட வழியில்லை என்ற வகையில், மேகதாது அணை கட்டும் கர்நாடகாவின் வரைவு செயல் திட்டம் அமைந்திருக்கிறது.தமிழக சட்டசபையில், மேகதாது திட்டத்தை அனுமதிக்கக் கூடாது என்ற, ஒற்றுமைத் தீர்மானம் நிறைவேறியது, காவிரியின் மீது நாம் காட்டும் அபார நம்பிக்கையின் அளவுகோலாகும்.காவிரி ஆறு, தமிழகத்தின் டெல்டா மாவட்டம் மட்டும் அல்ல, வேறு சில மாவட்டங்களுக்கும், குடிநீர் தரும் ஆதாரமாக இருக்கிறது. காவிரியும், தாமிரபரணியும், தமிழக வளத்திற்கு அதிகம் உதவும் நதிகள்.நம் மாநிலத்தில் தண்ணீர் என்பது, நதிகள் மூலம் கிடைப்பது குறைவு. நிலத்தடி நீர் அதிகம் குறைவதும், கடல் நீரைக் குடிநீர் ஆக்குவதும், அதிக செலவினம் என்ற நிலையில், நச்சுக்கழிவுகள் இல்லாத நீரைத் தரும் நதிகள் ஆதாரத்தை, ஒருக்காலும் இழக்க முடியாது.மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் தீர்மானம், அந்த நீர், தமிழகத்திற்கு வர வேண்டிய நீர் வரத்தை, மேலும் குறைக்கும் என்ற அச்சம் நியாயமானது. ஏனெனில், கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் சிவகுமார், கூட்டணி அரசில் உள்ள காங்கிரஸ் பிரமுகர்.அவர், 'மழை காரணமாக, அதிக தண்ணீர் வரும் போது, அது மேட்டூரில் இருந்து வெளியேறி, கடலுக்கு செல்லும் வாய்ப்பைக் குறைக்கும்' எனக் கூறிய கருத்து ஏற்கத்தக்கதல்ல. இரு அரசுகளும்ம் இணைந்து கட்டினால், அதை ஏற்கிறோம் என்பது அர்த்தமற்றது.ஏனெனில், கர்நாடக மாநில முதல்வராக இருந்த தேவகவுடா தொடங்கி, நேற்றைய சித்தராமய்யா வரை செய்த குழப்பங்கள் ஏராளம். மத்தியில், நீண்ட காலம் காங்கிரஸ் அரசாண்ட போது, அக்காலங்களில், தி.மு.க., அரசு இது குறித்து, சில முயற்சிகளை மேற்கொண்ட போதும், நிரந்தர தீர்வு பெரிய அளவில் வரவில்லை.அந்தக் காலங்களில், ஜூன், ஜூலை மாதங்களில், மேட்டூர் அணை நிரம்புகிறதா என்ற கருத்து, அதிகம் பேசப்பட்டது. வாஜ்பாய் அரசு வந்த பின், இப்பிரச்னையில் அணுகுமுறை மாறியது. அது, தி.மு.க., வைத்திருந்த அரசியல் உறவு எனக் கூறலாம்.ஆனால், தொடர்ந்து முதல்வர் ஜெயலலிதா, இப்பிரச்னையை வழக்காக்கி, கடைசியில் நடுவர் மன்றம், மாநிலங்களுக்கு தண்ணீர் தரும் அளவு என்று, பல முடிவுகள் வந்தன. இதற்கு, அதிக விளக்கம் தேவையில்லை.ஆனால், தற்போது காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவராக, மத்திய நீர்வளத்துறை செயலர் தொடர்வது ஏன் என்பதற்கு விடை காண, பொறுத்திருக்க வேண்டும். காரணம், அந்த அமைப்பு எடுக்கும் முடிவு, தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகியவற்றை கட்டுப்படுத்தும்.காவிரி நீர், பிலிகுண்டுலுவில் நுழைந்த பின், அதுகுறித்த நீர் மேலாண்மை, மற்ற விஷயங்கள், தமிழகத்தைச் சார்ந்தது. ஒரு வாழும் நதி என்பது, அது பிறந்த மாநிலத்திற்கே சொந்தம் என்ற அடிப்படையில் பேசுவது தவறு. அப்படி எனில், அதிக வெள்ளம் வரும் போது, அவர்களே அதை வைத்துக் கொள்ள இயலுமா?காவிரி நதி நீர் பிரச்னையில், 1924ம் ஆண்டுக்குப் பின் ஏற்பட்ட அடுத்தடுத்த ஒப்பந்தங்கள் மற்றும் கர்நாடகமும், தமிழகமும், காவிரி பாயும் பகுதியில், அதிக பாசனப்பரப்பு ஏற்பட்டது என்பது உண்மை.தவிரவும், இன்று கர்நாடக கூட்டணியில் உள்ள, காங்கிரஸ் அமைச்சர், மேகதாது திட்டத்தை அவசரமாக பார்வையிடுவதும், அதற்கு, 6,600 கோடி ரூபாய் செலவழிக்கப் போவதாக தீர்மானம் இயற்றுவதையும் தடுக்க, காங்கிரஸ் கூட்டணி தலைவர்கள் முயன்றிருக்க வேண்டும்.காவிரியின் குறுக்கே அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து, தமிழக அரசின் வழக்கு இன்னமும் சுப்ரீம் கோர்ட்டில் இருப்பதை, அந்த அரசு அறியும்.ஆகவே, இந்த விஷயத்தில், தமிழக அரசின் தீர்மானத்தில், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, தெளிவான முடிவு எடுக்கிறாரா என்பதே இன்றைய கேள்வி. அதற்கான பதில் வரும் போது, காவிரி மேலாண்மை ஆணைய தீர்ப்பு அமலாக்கம், அதிக நீர் வரத்து இல்லாத போது எப்படி அமையும்என்ற கேள்வி எழும்.இன்றைய நிலையில், கர்நாடகத்தை ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசுடன், தமிழகத்தில் அக்கூட்டணியுடன் நெருங்கிய கட்சிகள், இயல்பாக பேசி, பிரச்னையை ஊதிப் பெரிதாக்காமல் தடுக்கலாம்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement