Advertisement

பேச்சு, பேட்டி, அறிக்கை

நடிகர் விஜய் சேதுபதி பேட்டி: மிக்சி, 'டிவி'யைப் பற்றி மட்டும் பேசுவது, அரசியல் அல்ல; ஒரு ஜாதியை துாக்கிப் பேசுவது, இன்னொரு ஜாதியை இழிவுப்படுத்துவது எல்லாமே அரசியல் தான். 'சென்சார்' முடிந்து வரும் படங்களை, அரசியல்வாதிகள் மிரட்டுவதை, ஏற்றுக் கொள்ள முடியாது. எங்கள் கருத்து தவறாக இருந்தால், அதை எதிர்த்து கேள்வி கேட்கலாம். ஆனால், எங்களை மிரட்டுவது, அவர்களின் வேலை இல்லை.


தமிழக பா.ஜ., தலைவர், தமிழிசை பேட்டி: 'புல் முளைக்காத இடத்தில், தாமரை எப்படி மலரும்' என, சிலர் பேசி வருகின்றனர். எங்கள் மீது வீசப்படும் சேற்றை வைத்து, தாமரையை மலர செய்வோம். சேற்றில் செந்தாமரை வளரும்; ஏன் தாமரை மலராதா... குளத்திலும் தாமரை மலரும்; களத்திலும் தாமரை வளரும்.


தமிழக தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர், பாண்டியராஜன் பேட்டி: 'தமிழகத்தில், ஐந்து ஆண்டுகளில், பூரண மதுவிலக்கு' என, மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாக்குறுதி அளித்திருந்தார். இதற்கான நடவடிக்கை, தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை, 2000 த்திற்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டுள்ளன. அடுத்த இரண்டரை ஆண்டுகளில், மீதமுள்ள கடைகளையும் மூட, நடவடிக்கை எடுக்கப்படும். என் தொகுதியான ஆவடியில், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்த அனைத்து மதுக்கடைகளும் மூடப்பட்டுள்ளன.

காங்., தலைவர் ராகுல், 'டுவிட்டர்' பக்கத்தில் கருத்து பதிவு: மோடியின் இந்தியாவில், ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், மர்மமான வேலைகளைச் செய்யும் ஆற்றலைப் பெற்றுள்ளன. ராஜஸ்தான், தெலுங்கானா மாநிலங்களில், தேர்தல் முடிந்துள்ள நிலையில், காங்., தொண்டர்கள், ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மீது, கவனத்துடன் இருக்க வேண்டும்.

இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலர், டி.ராஜா பேட்டி: சட்டசபை தேர்தல் முடிவுகளை பொறுத்தே, வரும் லோக்சபா தேர்தலுக்கு, அரசியல் கட்சிகளின் கூட்டணி நகர்வுகள் அமையும். லோக்சபா தேர்தலில், பிரதமர் மோடியை தோற்கடிக்க வேண்டும் என்பது தான், எங்கள் கட்சியின் நிலைப்பாடு. பா.ஜ., அரசு வீழ்த்தப்பட வேண்டும் என்பதே, பெரும்பாலான மாநில கட்சிகளின் எண்ணம். அதன் அடிப்படையில், மதச்சார்பற்ற, ஒருமித்த கருத்துள்ள கட்சிகளை ஒன்றிணைத்து, தேர்தலை சந்திக்க உள்ளோம்.


கட்சி சார்பற்ற, தமிழக விவசாயிகள் சங்கத்தினர் செயல் தலைவர், வெற்றி பேட்டி: மேகதாது அணை கட்டினால், தமிழகத்தில் விவசாயம் அழிந்து, அனைவரும் மாற்று தொழிலுக்கு மாற வேண்டியிருக்கும். அணை கட்டும் முயற்சியை, தமிழக அரசு தடுக்க வேண்டும். கர்நாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் சிவகுமார், காவிரி நீர் பங்கீட்டின்படி தமிழகத்திற்கு, 395 டி.எம்.சி., தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளதாக கூறுவது, பொய்யான தகவல். புதிய அணையால், தமிழகத்திற்கு துளியளவும் நன்மை கிடைக்காது.


'இதையே தான், ஒவ்வொரு தேர்தலின்போதும் சொல்றீங்க... கட்சி வளர்ந்திருக்காங்கறதும் சந்தேகமா இருக்கு... நீங்க பேசுறதை எந்த கோணத்துல எடுத்துக்கிறதுன்னும் தெரியலியே சார்...' எனச் சொல்லத் தோன்றும் வகையில், சமத்துவ மக்கள் கட்சி தலைவர், சரத்குமார் பேட்டி: வரும் லோக்சபா தேர்தலில், நாங்கள் உறுதியாக போட்டியிடுவோம். ஒரு தொகுதியா, இரு தொகுதியா அல்லது தனித்து நின்று, ௪௦ தொகுதிகளிலும் போட்டியிடுவோமா என்பதை, இப்போது சொல்ல முடியாது. ஆனால், நிச்சயமாக களமிறங்குவோம்; அதில் மாற்றமில்லை. ௧௨வது ஆண்டில் பயணிக்கும் நாங்கள், எங்கள் உழைப்பையும், முயற்சியையும், சோதனை செய்து பார்ப்பது அவசியம்.


'ஜிங் சாக்... ஜிங்ஜிங் சாக்...' என ஓங்கி, ஜால்ரா கொட்டுபவராய், பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினர், இல.கணேசன் பேட்டி: நடிகர் ரஜினி, விபரம் தெரிந்தவர்; மக்களின் உணர்வுகளை புரிந்தவர். அதனால் தான், மக்களுக்கு நல்லது செய்ய, பிரதமர் மோடி பாடுபடுவதாக தெரிவித்திருக்கிறார். இன்று, பா.ஜ.,வை ஆதரிப்பவர்கள், நாளை கூட்டணியில் இணையாமல் போகலாம்; இன்று விமர்சிப்பவர்கள், நாளை கூட்டணியில் இடம் பெற மாட்டார்கள் என, உறுதியாக கூற முடியாது.


தமிழக தொழில் துறை அமைச்சர், சம்பத் பேட்டி: தமிழகத்தில், ௨019, ஜன., 23, 24ல் நடக்கவுள்ள, தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டை, மிகப்பெரிய அளவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.இதற்காக, தென்கொரியா, பிரான்ஸ், லண்டன், சிங்கப்பூர், ஜப்பான் என, பல நாடுகளின், மிகப்பெரிய நிறுவனங்களின், இரண்டாம் கட்ட நிர்வாகிகளை சந்தித்து பேசியுள்ளோம். முதலீடு செய்ய வருவதாக, உறுதி அளித்து உள்ளனர். '

ஜால்ரா வகைகளில், இது, அதிக சத்தம் எழுப்பும், மிகப் பெரிய, வெண்கல ஜால்ரா' எனக் கூறத் தோன்றும் வகையில், அ.தி.மு.க., செய்தித் தொடர்பாளர், கோவை செல்வராஜ் பேச்சு: நாட்டின் இறையாண்மையையும், ஜனநாயக மரபையும் கட்டிக் காப்பாற்றுவதற்கு தான், முதல்வர், அமைச்சர்கள் பதவி ஏற்கும்போது, உறுதிமொழி எடுக்கின்றனர். அதன் அடிப்படையில், மத்திய அரசை, ஒரு மாநில அரசு கண்டிக்கக் கூடாது. மத்திய அரசின் எந்தத் துறை, மாநில அரசுக்கு எதிராக செயல்படுகிறதோ, அந்த துறையை தான் கண்டிக்க, வழக்கு தொடுக்க முடியும்.


மாநில, பா.ஜ., துணை தலைவர், அரசகுமார் பேட்டி: தமிழக முதல்வர், துணை முதல்வர் இருவரும், பா.ஜ., வோடு நெருக்கமாக இருந்து, மத்திய அரசை பாராட்டி வருகின்றனர். ஆனால், அமைச்சர் பதவி கிடைக்காததால், பா.ஜ.,வை விமர்சனம் செய்து வருகிறார் தம்பிதுரை. 'கரூர் தொகுதிக்கு நீங்கள் என்ன செய்தீர்கள்?' என, மக்கள் அவரிடம் கேள்வி கேட்கின்றனர். முதலில் அதற்கு அவர் பதில் சொல்லிவிட்டு, பின், பா.ஜ.,வை கேள்வி கேட்கட்டும்.


பா.ம.க., தலைவர், ஜி.கே.மணி பேட்டி: மேகதாதுவில், புதிய அணை கட்டுவதற்கு, ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள, மத்திய நீர்வள ஆணையம் அனுமதி கொடுத்தது, கண்டனத்துக்குரியது. இந்த விவகாரத்தில், தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியதை, பா.ம.க., வரவேற்கிறது. ஏற்கனேவே, இரண்டு முறை சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியும், அவற்றை கவனத்தில் கொள்ளாமல், ஆய்வுப் பணிக்கு, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த தீர்மானத்தையும், மத்திய அரசு மதித்து, நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கை இல்லை.


மத்திய கப்பல் மற்றும் நெடுஞ்சாலை துறை இணை அமைச்சர், பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி: காவிரி பிரச்னை, விவசாயிகள் பிரச்னை குறித்து பேசுவதற்கு, காங்., - தி.மு.க., கட்சியினருக்கு தகுதி இல்லை. இதுகுறித்து விவாதம் நடத்த, தயாராக உள்ளேன். ௧௫௦ ஆண்டு கால காவிரி பிரச்னைக்கு தீர்வு கண்டவர், பிரதமர் நரேந்திர மோடி தான்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement