Advertisement

இது உங்கள் இடம்

'பீனிக்ஸ்' பறவை போல் காங்., மீளும்!


கே.சிங்காரம், தலைவர், நகர காங்கிரஸ், நாமக்கல்லிலிருந்து எழுதுகிறார்: 'ராகுலை பிரதமராக, எந்த மாநில கட்சித் தலைவர்களும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்' என, இதே பகுதியில், வாசகர் ஒருவர் கடிதம் எழுதி இருந்தார். மேலும், 'லோக்சபா தேர்தலில், ௧௦௦ எம்.பி.,க்களை, காங்கிரஸ் பெற்றாலும், ராகுல், பிரதமர் ஆக முடியாது' என்றும் குறிப்பிட்டு இருந்தார்.அவருக்கு சில விளக்கங்களை அளிக்க விரும்புகிறேன்...நாடு சுதந்திரத்திற்கு பின், நேரு, சாஸ்திரி, இந்திரா, ராஜிவ், நரசிம்மராவ், மன்மோகன் சிங் தலைமையில், ௫௫ ஆண்டுகள், காங்கிரஸ் தலைமையிலான, ஆட்சி, மத்தியில் நடந்தது. காங்கிரசால், நாடு முன்னேற்றம் அடைந்ததை உலகமே அறியும்!நாட்டிற்காக, மகாத்மா காந்தி, இந்திரா, ராஜிவ் உயிரை தந்துள்ளனர். அவர்களையும், காங்கிரசையும், ஒரு போதும் மக்கள் மறக்க மாட்டார்கள். மத்தியில் நிலையான ஆட்சியை கொடுத்த கட்சி!ஆனால், ௨௦௧௪ல் '௨ஜி' ஊழல் என, பெரிய விளம்பரம், எதிர்க்கட்சியான, பா.ஜ.,வால் திட்டமிட்டு செய்யப்பட்டது. கூட்டணி கட்சியான, தி.மு.க.,வைச் சேர்ந்த, மத்திய அமைச்சர் ஒருவர் மீது தான் ஊழல் புகார் கூறப்பட்டது; அது, காங்கிரஸ் கட்சியையும் வெகுவாக பாதித்து விட்டது. அதனால், காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது.சமீப இடைத்தேர்தலில், ஐந்தில், நான்கு இடங்களை, காங்கிரஸ் கூட்டணி வென்றுள்ளது. இதே நிலை தான், ௨௦௧௯ல் நடைபெற உள்ள தேர்தல் முடிவுகளிலும் இருக்கும்; ராகுல் பிரதமர் ஆவது உறுதி.முன்னாள் பிரதமர், ராஜிவ் படுகொலை செய்யப்பட்ட போது நடந்த, சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வின் முன்னாள் தலைவர், கருணாநிதி மட்டும் சொற்ப ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அந்த கட்சி படுதோல்வி அடைந்தது. அடுத்து நடந்த சட்டசபை தேர்தலில், மாபெரும் வெற்றி பெற்று, ஆட்சியை, தி.மு.க., பிடித்தது.எனவே, காங்கிரஸ் வீழ்ந்து விட்டது என நினைக்க வேண்டாம். வரும் லோக்சபா தேர்தலில், 'பீனிக்ஸ்' பறவை போல் மீண்டு, மத்தியில், காங்., ஆட்சியை பிடிக்கும்!


சிலைகள் கலாசாரம்மத மோதலுக்குவழி வகுத்து விடும்!

ந.தேவதாஸ், சென்னையிலிருந்து எழுதுகிறார்: நாட்டின், வட மாநிலங்களில், மறைந்த தலைவர்களுக்கு, உயரமான சிலை வைக்கும் கலாசாரம் துவங்கியுள்ளது.நாட்டின் இரும்பு மனிதர் என புகழப்படும், சர்தார் வல்லபபாய் படேலின், 597 அடி உயர சிலையை, குஜராத் மாநிலம் நர்மதா மாவட்டத்தில், சமீபத்தில் திறந்து வைத்துள்ளார், பிரதமர் நரேந்திர மோடி.பீஹார் மாநில முதல்வர் நிதிஷ் குமார், அம்மாநிலத்தின் ராஜ்கிர் அருகேயுள்ள கோரா கடோரா ஏரியின் மையப் பகுதியில், 70 அடி உயர புத்தர் சிலையை திறந்து வைத்துள்ளார்.'உ.பி., மாநிலம், அயோத்தியில், 211 மீட்டர் உயர பிரமாண்ட ராமர் சிலையை நிறுவப் போகிறேன்' என, அம்மாநில முதல்வர், யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.'ஹிந்துக்களின் கடவுளாக வழிபடும் ராமர் சிலை கோவிலுக்குள் தான் இருக்க வேண்டும்; அவரது சிலை காட்சிப்பொருளாக ஆகக்கூடாது' என, சாதுக்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.மத்தியில் காங்கிரஸ் கட்சி தலைமையிலான, ஐ.மு., கூட்டணி அரசு ஆட்சி செய்த போது மறைந்த, பி.வி.நரசிம்மராவ் பிரதமராக இருந்தார். அப்போது தான் இஸ்லாமியர்களின் புராதன சின்னமான, பாபர் மசூதி இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. அந்நேரத்தில், காங்., அரசு கைகட்டி வேடிக்கை பார்த்தது.இச்சம்பவத்தின் போது, உலகில் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் கொதித்தெழுந்தன. அதன் பின் தான் நாட்டில் அமைதிப்பூங்காவாக விளங்கிய காஷ்மீர் போன்ற மாநிலங்களில் தீவிரவாதம் அதிகரித்ததுடன், இன்று வரை கலவர பூமியாக காட்சியளிக்கிறது.அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தை, ஹிந்து - முஸ்லிம் என, இருதரப்பினரும் உரிமை கோரி வரும் வழக்குகள், நீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளன. அங்கு பிரமாண்ட ராமர் சிலை அமைக்கும் திட்டம் என்பது, எரிகிற கொள்ளியில், எண்ணெய் வார்க்கும் செயலாகி விடும்.உ.பி.,யில், மதக்கலவரம் மூளும் பேராபத்தும் நிலவுகிறது. எனவே, இப்பிரச்னைக்கு மத்திய அரசு உடனடி தீர்வு காண வேண்டும்!

வயதானவர்களைநோகடிக்கும்ஸ்டேட் வங்கி!

கே.ஜான், கோவையிலிருந்து எழுதுகிறார்: கோவை, பாரத ஸ்டேட் வங்கி, பிரதான கிளையில், என் மகள் கொடுத்த காசோலையை கொடுத்து, ௩௧ ஆயிரம் ரூபாய் பெற சென்றேன். 'பணமாக, ௨௦ ஆயிரம் ரூபாய் தான் தருவோம். எஞ்சிய பணத்தை, உங்கள் கணக்கில் வரவு வைத்து, 'வித்டிராயல் சிலிப்' மூலம், கவுன்டரில் கொடுத்து பணம் பெறுங்கள்' என, ஊழியர்கள் கூறினர்.நானும், அவ்வாறே காசோலையை, 'டிபாசிட்' செய்தேன். உடனே, என் அக்கவுன்டில், பணம் வரவு வைக்கப்பட்டது. அதே கிளையில், எனக்கு வங்கி கணக்கு உள்ளது. கவுன்டர், ௪ல், 'வித்டிராயல் சிலிப்'பை கொடுத்தேன்.'பாஸ் புக் வேண்டும்' என, கவுன்டரில் இருந்த, பெண் ஊழியர் கூறினார். நான் காசோலை எடுத்து வந்ததால், பாஸ் புக் கொண்டு வரவில்லை.'என், ஏ.டி.எம்., கார்டு, ஆதார் அட்டையை பாருங்கள்' எனக் கூறியும், அவர் பிடிவாதமாக மறுத்து விட்டார். 'ஏ.டி.எம்.,மில் பணம் எடுங்கள்' என கூறினார். 'ஏ.டி.எம்.,மில், ௨௦ ஆயிரம் ரூபாய்க்கு மேல் வராது. எனக்கு, ௩௧ ஆயிரத்து, ௪௦௦ ரூபாய் அவசரமாக வேண்டும்' என, கெஞ்சிக் கேட்டும், ஊழியர் சம்மதிக்கவில்லை.பாஸ் புக் ஒரு வாடிக்கையாளரை, அடையாளம் காண்பதற்கு தான். தொகையோ மிகவும் குறைவு. நானும், அந்த கிளையின் வாடிக்கையாளர் தான். ஏ.டி.எம்., ஆதார் இவற்றை வைத்தும் அடையாளம் காணலாம். ஆனால், பெண் ஊழியருக்கு பணம் கொடுக்க மனசு இல்லை.பிற வங்கிகளான, கனரா, இந்தியன் போன்றவற்றில், ௧ லட்சம் ரூபாய் வரை காசோலைக்கு, கவுன்டரிலேயே சர்வ சாதாரணமாக பணம் கொடுக்கின்றனர். நாட்டின் மிகப் பெரிய வங்கியான, பாரத ஸ்டேட் வங்கியால், பாமரனுக்கு, எந்தவொரு பயனும் இல்லை.'கார்ப்பரேட்' நிறுவனங்களுக்கு, பல ஆயிரம் கோடி கடன் கொடுக்கிறது, ஸ்டேட் வங்கி. அந்த கடன்களையும் தள்ளுபடி செய்யவே மிகவும் ஆர்வர் காட்டுகிறது. ஆனால், முதியவரான, எனக்கு, கணக்கில் இருந்து பணத்தை எடுக்க, சட்ட விதிகளை பேசுகின்றனர்.ஸ்டேட் வங்கியில், வாடிக்கையாளர்கள் கவனிப்பு மிகவும் மோசமாக உள்ளது. ௭௦ வயதான எனக்கு, இச்சம்பவம் மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.ஸ்டேட் வங்கியின் மூத்த அதிகாரிகள் தலையிட்டு, வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் கஷ்டங்களை புரிந்து சரி செய்ய முன் வர வேண்டும்!

நேர்மை அதிகாரிகளை, 'டம்மி' ஆக்கும் அரசு!
ஜி.சண்முகம், பேராசிரியர், சென்னையிலிருந்து எழுதுகிறார்: தமிழகத்தில், கனிம வள சுரண்டல்கள் குறித்து ஆராய்ந்து, அறிக்கை சமர்ப்பிக்க, மாநில அரசால், நேர்மையான, ஐ.ஏ.எஸ்., அதிகாரி, சகாயம் நியமிக்கப்பட்டார். மிக திறமையாகவும், துணிச்சலுடனும் அதில் செயல்பட்ட அவர், தற்போது அறிவியல் நகரத்தின் தலைவராக செயல்பட்டு வருகிறார்.அதே போல், சிலை கடத்தல் வழக்குகளை திறம்பட விசாரித்து வந்தார், ஐ.ஜி.,யாக இருந்த பொன் மாணிக்கவேல். அவருக்கு, அரசு தரப்பில் பல்வேறு இடையூறுகள் வர துவங்கின.சென்னை உயர் நீதிமன்ற உத்தரவில், அவர் திறம்பட செயல்பட்டு, பல சிலைகளை மீட்டெடுத்தார். சிலை கடத்தல் வழக்குகளை, சி.பி.ஐ.,க்கு மாற்றி உத்தரவிட்டது, தமிழக அரசு. அதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.மனுவை விசாரித்த நீதிமன்றம், அரசின் உத்தரவுக்கு தடை விதித்ததுடன், 'பொன் மாணிக்கவேல் தலைமையில், இந்த வழக்குகளை தொடர்ந்து விசாரணை செய்ய வேண்டும்' என, உத்தரவிட்டது.நவ., ௩௦ம் தேதியுடன், பொன் மாணிக்க வேல் பணி ஓய்வு பெற இருந்தார். உயர் நீதிமன்ற உத்தரவால், ஓராண்டிற்கு, அவருக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. அதை எதிர்த்து, தமிழக அரசு சார்பில், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.நேர்மையான, திறமையாக செயல்படும், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகளை, தமிழக அரசு பந்தாடுவது நியாயம் அல்ல. சகாயம், உதயசந்திரன் போன்ற அதிகாரிகள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட துறைகளில், மிக நேர்மையாக நடந்ததால், ஊழல், லஞ்சம் குறைய துவங்கியது.மதுரை மாவட்டத்தில், அரசுக்கு வர வேண்டிய கோடிக்கணக்கான ரூபாய் வருவாய், தனியாருக்கு கல்குவாரிகள் மூலம் சென்றடைந்தது. அதை விசாரித்த சகாயம், முறைகேடாக செயல்பட்ட, பி.ஆர்.பி., என்ற நிறுவனத்திற்கு சொந்தமான, கிரஷர்களை மூட உத்தரவிட்டார்.அப்படி நேர்மையாக செயல்பட்ட அவருக்கு, தற்போது மிக சாதாரண பதவி வழங்கப்பட்டு, அவர் முடக்கப்பட்டு உள்ளார். சிலை கடத்தல் தடுப்பு பிரிவில், திறமையாக பணியாற்றி வரும், பொன் மாணிக்கவேலுக்கும், உயர் அதிகாரிகள் மூலம் நெருக்கடி தரப்படுகிறது.இந்நிலை, நேர்மையான, உயர் அதிகாரிகளுக்கு இனி தொடரக் கூடாது. அதிகாரிகள் மட்டத்தில் நேர்மை இருந்தால் மட்டுமே, கீழ் நிலை ஊழியர்கள் வரை, நேர்மையை எதிர்பார்க்க முடியும் என்பதை அரசு உணர்ந்தாக வேண்டும்!


சாஸ்திரத்திற்காககொஞ்சம்பட்டாசு போதும்!
ஆர்.ரமணன், திண்டுக்கல்லிலிருந்து எழுதுகிறார்: தீபாவளியன்று, நேரக் கட்டுப்பாட்டை மீறி, பட்டாசு வெடித்ததாக, தமிழகம் முழுவதும், 2,000க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், 'நேரம் குறைக்கப்பட்டதால், ஒலி, காற்று மாசு குறைந்துள்ளது' என்ற செய்தி சற்று ஆறுதல் அளிக்கிறது.'பூமி வெப்பமயமாதல், கடல் நீர்மட்டம் உயர்தல், 'ஓசோன்' படலத்தில் ஓட்டை விழுதல் போன்ற காரணங்களால், அதிக வறட்சி, அதிக மழைப்பொழிவு, பருவம் தவறி மழைப்பொழிவு போன்ற, இயற்கைக்கு மாறான செயல்கள் நடக்கின்றன' என, ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.'வாழும் போதே, எதிர்கால சந்ததியினருக்கும் நல்ல நிலையில் பூமியை விட்டுச் செல்ல வேண்டும்' என்ற எண்ணம், அனைவருக்கும் வர வேண்டும்; வனங்களை ஒரு போதும் அழிக்கக் கூடாது.ஒவ்வொரு ஆண்டும், அதிகரிக்கும் வாகனங்களின் புகை, புவியை கடும் மாசுபட வைத்துக் கொண்டிருக்கிறது. வாகனப் புகை, பட்டாசு புகை, எரிக்கப்படும் ரசாயன புகை, தொழிற்சாலை புகை, மனிதர்களின் நுரையீரலையும் பதம் பார்க்கிறது; புற்றுநோய் தாக்கத்தால், பலர் இறக்கின்றனர். உலகை காக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தாக வேண்டும்.எனவே, 'பசுமை பட்டாசு'க்கு மக்கள் மாற வேண்டும். 'தீபாவளியன்று, குறைந்த அளவே, பட்டாசுகளை பயன்படுத்துவோம்' என, ஒவ்வொருவரும் உறுதி எடுக்க வேண்டும். அடுத்த தீபாவளியன்று, இனிப்பு, புத்தாடையுடன் பண்டிகையை கொண்டாடுவோம். 'சாஸ்திரத்திற்காக, கொஞ்ச நேரம் மட்டும் பட்டாசு கொளுத்துவோம்' என, உறுதி பூணுவோம்!


சினிமாக்காரர்கள்தாயத்து வியாபாரிபோல் தந்திரவாதிகள்!

என்.ராமகிருஷ்ணன், பழநி, திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: திராவிட ஆட்சிக்கு முன், 'சென்சார் போர்டு' வேலை பார்க்காத மாதிரி, இதே பகுதியில், வாசகர் ஒருவர் கடிதம் எழுதி இருந்தார்; அது, முற்றிலும் தவறு!எம்.ஜி.ஆர்., நடித்த அன்பே வா படத்தில், 'புதிய வானம், புதிய பூமி...' என்ற பாடலில், 'உதயசூரியனின் பார்வையிலே...' என்ற வரியை மாற்றச் சொல்லி 'சென்சாரில்' கெடுபிடி செய்தனர். அதன் பின், 'புதிய சூரியனின் பார்வையிலே...' என, பாடல் வரி மாற்றி அமைக்கப்பட்டது.பெற்றால் தான் பிள்ளையா என்ற படத்தில், 'மேடையில் முழங்கு அறிஞர் அண்ணா போல்' என்ற வரியை மாற்றச் சொல்லி, 'சென்சார் போர்டு' ஆட்சேபம் தெரிவித்தது. அதன் பின், 'மேடையில் முழங்கு, திரு வி.க., போல்...' என, மாற்றி அமைத்தனர்.முன்னாள் தி.மு.க., தலைவர், கருணாநிதி கதை வசனம் எழுதிய, காஞ்சித் தலைவன் படத்தில், 'வெல்க காஞ்சி' என பாடலை எழுதியிருந்தார். 'காஞ்சி என்றால், அண்ணாதுரையை குறிக்கிறது. வரியை மாற்றுங்கள்' என, 'சென்சார் போர்டு' வற்புறுத்தியதால். 'வெல்க நாடு...' என, மாற்றினர். இவை எல்லாம் நடந்தது, காங்கிரஸ் ஆட்சியில் தான்!அரசியல் கலப்பே இல்லாமல், எம்.ஜி.ஆர்., தயாரித்த, உலகம் சுற்றும் வாலிபன் படத்தை வெளியிட விடாமல் முதல்வராக இருந்த, கருணாநிதி எத்தனை இடையூறுகளை செய்தார் என்பதை இந்த நாடு அறியும்.மெர்சல் படத்தை, பா.ஜ.,வினர் எதிர்த்ததால், அந்த படம், 'ஹிட்' ஆனது. இப்போது, சர்க்கார் படத்தை எதிர்த்து, அ.தி.மு.க.,வினர் போராடியதால் தான், சுமாராக போக வேண்டிய படம், வசூல் ரீதியாக வெற்றி அடைந்திருக்கிறது.முன்பு சாலையோரங்களில் பார்த்தால், 'பாம்புக்கும், கீரிக்கும் சண்டை நடக்கப் போகிறது' என, வித்தை காட்டுவர். உடனே மக்கள் கூட்டம் கூடும். பின் கடைசி வரை அந்த சண்டை நடக்காது. வித்தை வியாபாரி, சாமர்த்தியமாக தாயத்துக்களை விற்று விடுவார்!அது போல், ஆளும் கட்சியையோ அல்லது ஜாதி, மதங்களை சாடுவது போல், காட்சிகள் வைத்தால், போராட்டம் நடக்கும்; ஓடாத அந்த படத்தை, மக்களே பார்க்கும்படி, போராட்டக்காரர்கள் செய்து விடுவர் என நம்புகின்றனர், சினிமாக்காரர்கள்!

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (5)

 • Bhaskaran - Chennai,இந்தியா

  வருஷம் ஒருநாள்கூட பட்டாசுவெடிக்கக்கூடாது என்பார்கள் வீட்டுப்பிள்ளைகள் கிட்டேபோய் கேட்கணும்

 • Bhaskaran - Chennai,இந்தியா

  ராகுல் தன் நடவடிக்கைகளை மாற்றிக் கொள்ளாதவரை மக்களுக்கு எப்படி அவர் மேல் நம்பிக்கை ஏற்படும் போதாக்குறைக்கு 2g கூட்டணிவேறு

 • Bhaskaran - Chennai,இந்தியா

  ஸ்டேட் பேங்க் எப்போதும் அப்படித்தான் மயிலாப்பூரில் லஸ்கார்னெர் கிளையில் ஒரு கணக்கில் இருந்து பணம் எடுத்து in oru kanakil கட்டவேண்டியதிருந்தது அப்போது ரூபாய் நோட்டு சரியில்லை கள்ளநோட்டு போல் உள்ளது என்று வாங்க மறுத்தார் கவுண்டரில் இருந்த பெண்மணி கொஞ்சம் உரத்தக்குரலில் சண்டைபோட்டதும் வாயைமூடிக் கொண்டார் அங்கேயே எது குல்மால் வெளிநடக்கிறதோ இறைவனுக்குத்தான் வெளிச்சம் இதற்காகவே வீட்டின் அருகில் இருக்கும் கூட்டுறவுவாங்கியில் ஒரு கணக்குத்துவங்கினேன் சேவை மிகநன்றாக உள்ளது

 • Darmavan - Chennai,இந்தியா

  மாசு பற்றி பேசுபவர்கள் நாட்டின் பெரும் பகுதி மாசு மோட்டார் வகங்களினாலும் /தொழிற்சாலையினாலும் (தோல்,சாயம்)ஏற்படுகிறது.வருடத்திற்கு ஒரு நாள் வெடிக்கும் பட்டாசுகளால் ஏற்பட்ட மாசு பற்றி ஏதாவது உண்மையான விவரமிருக்கிறதா?பட்டாசு இந்து பண்டிகைகளில் குழந்தைகளின் சந்தோஷத்துக்காக நடத்தப்படுவது .இதை குற்றம் சொல்வது kandikkatha

 • Darmavan - Chennai,இந்தியா

  காங்கிரஸில் யாரும் நாட்டுக்காக உயிரை விடவில்லை.1 . இந்துக்களுக்கு எதிராக/ பாகிஸ்தானுக்கு முஸ்லிம்களுக்கு ஆதரவாக செயல்பட்டதற்க்காக காந்தி சுடப்பட்டது....இதுவரை கோட்ஸே குற்ற சாட்டுகளுக்கு பதில் .இல்லை.அதில் எவ்வளவு உண்மை உள்ளது என்பதில் தெரியும் .2 .தன் அரசியல் ஆதாயத்துக்காக அகாலி தளத்தை உடைக்க பிந்தரன்வாலேயை உண்டாக்கிய இந்திரா பேகம் அந்த தீவிரவாதியாலேயே பழி வாங்கப்பட்டாள்.இதில் தேச தியாகம் ஒன்றுமில்லை. அரசியல் சுய லாபம்.ஒன்றே.இலக்கை தமிழர்களை அமைதிப்படையால்/விடுதலை புலிகளை கொன்றதனால் போர் குற்றவாளி என்ற வகையில் ராஜிவ் காந்தி பழி வாங்கப்பட்டான்....இவை எதுவும் நாட்டுக்கான த்யாகமல்ல.மக்களை ஏமாற்றுவதற்காக பரப்பப்படும் புரட்டு செய்திகள்..

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement