Advertisement

பேச்சு, பேட்டி, அறிக்கை

மத்திய கப்பல் மற்றும் நெடுஞ்சாலை துறை இணை அமைச்சர், பொன்.ராதாகிருஷ்ணன், பூசி மெழுகும் வகையில், பேட்டி: மேகதாதுவில் அணை கட்ட, மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை. அது குறித்த ஆய்வுக்கு தான், அனுமதி அளித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக, தமிழக சட்டசபையில் எடுக்கும் நடவடிக்கைகள் நியாயமாக இருக்கும்பட்சத்தில், அதை ஆதரிப்பதில் தவறில்லை.


பா.ம.க., மாநில தலைவர், ஜி.கே.மணி பேட்டி: மேகதாதுவில் அணை கட்டும் ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள, மத்திய அரசு அனுமதி கொடுத்தது, கண்டனத்துக்குரியது. இச்செயல், தமிழகத்திற்கு இழைக்கும் மிகப்பெரிய அநீதி. தமிழக அரசு, சட்டசபை தீர்மானத்தோடு நின்று விடாமல், அனைத்துக் கட்சித் தலைவர்கள், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களோடு, பிரதமரை சந்திக்க வேண்டும்.


தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர், செல்ல ராஜாமணி பேட்டி: 'அரசே நேரடியாக குவாரிகளை இயக்கினால், இணையதளம் மூலம் குறைந்த விலைக்கு மணல் கிடைக்கும்' என, முதல்வர் பழனிசாமி அறிவித்தார். ஆனால், இரு மாதங்கள் மட்டுமே, இணையதளம் மூலம் மணல் வழங்கப்பட்டது. தனியார் குவாரி நடந்தபோது, தினமும், 20 ஆயிரம் லோடு வழங்கினர். தற்போது, நாமக்கல் மாவட்டம், குமரிபாளையத்தில், ஒரே ஒரு அரசு மணல் விற்பனை நிலையம் மட்டுமே செயல்படுகிறது. தமிழகத்திற்கு, 30 ஆயிரம் லோடு மணல் தேவை. இதனால், கட்டுமான பணிகள் முடங்கி உள்ளன.


புதுச்சேரி முதல்வர், நாராயண சாமி பேச்சு: இன்னும் நான்கு மாதங்களில், நாட்டில் மாற்றம் வரும். தற்போது, ஐந்து மாநிலங்களில் தேர்தல் நடக்க உள்ளது. இவற்றில், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், தெலுங்கானா மாநிலங்களில், காங்., ஆட்சியைப் பிடிக்கும்.


'நீங்க மட்டுமா சொன்னீங்க... எல்லா அரசியல்வாதிகளும் தான் சொல்லிட்டிருந்தாங்க... எல்லா விவகாரங்கள்லயும், நீங்களே பேர் தட்டிக்கணும்ன்னு பார்க்கிறீங்களே...' எனச் சொல்லத் தோன்றும் வகையில், ம.தி.மு.க., பொதுச் செயலர், வைகோ பேட்டி: 'மேகதாது அணையை, கர்நாடகா கட்டப் போகிறது' என, ஆறு ஆண்டுகளுக்கு முன்பே கூறினேன். அணை கட்டாமல் தடுக்க, உச்ச நீதிமன்றத்தால் மட்டுமே இயலும். ஆனால், உச்ச நீதிமன்ற தீர்ப்பை, கர்நாடகா மதிக்குமா என்பது கேள்விக்குறியே.


வடகிழக்கில், பா.ஜ., கூட்டணி யில் உள்ள, மிசோ தேசிய முன்னணி தலைவரும், மிசோரம் முன்னாள் முதல்வருமான, சோரம் தாங்கா பேட்டி: 'அடுத்த, 50 ஆண்டுகளுக்கு, மத்தியில், பா.ஜ., ஆட்சியில் இருக்கும்' என, பா.ஜ., தலைவர் அமித் ஷா கூறுகிறார். அப்படிச் சொல்வதற்கு, அவர் ஒன்றும் கடவுள் இல்லை. அரசியல் நிகழ்வுகளை யாராலும், எளிதில் கணிக்க முடியாது. 'மத்தியில், காங்., மீண்டும், எளிதில் ஆட்சிக்கு வர முடியாது' எனக் கூறுவது வேண்டுமானால், சரியான கணிப்பாக இருக்கலாம்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement