Advertisement

ரயில், பஸ் வசதிகள்... மேம்பட வேண்டும்

சென்னை, தமிழகத்தின் தலைநகர் என்பது மட்டும் அல்ல; இங்குள்ள போக்குவரத்து வசதிகள் இன்னமும் மேம்பட, பல புதிய அணுகுமுறைகள் தேவை என்பதை, இங்கு பெருகி வரும் மக்கள் தொகை காட்டுகிறது.

அதிலும், அரசு பஸ் போக்குவரத்தின் நகர, புறநகர சர்வீஸ், புறநகர் ரயில் சர்வீஸ், மெட்ரோ ரயில் சர்வீஸ் என்று, பலவகை போக்குவரத்து சாதனங்கள் இருந்த போதும், அது இன்னமும் முழுவீச்சில் சர்வீஸ் தருவதாக கூற முடியாது.இதில் முக்கியமாக, அரசு பஸ் போக்குவரத்து கழகம் மற்றும் தென்னக ரயில்வே, மிக முக்கிய பங்காற்றுகிறது. இவை நடத்தும் சர்வீஸ்கள் குறித்த புள்ளி விவரங்கள், அடிக்கடி வருவது வழக்கம்.

இப்போது ரயில் சர்வீசில், பெட்டிகள் தயாரிக்கும், ஐ.சி.எப்., தொழிற்சாலை, சில புதிய அணுகுமுறைகளில், பெட்டிகளை வடிவமைக்கிறது. அதில், பெட்டிகள் துருப்பிடிக்காத, உருக்கு தகட்டில் அமைந்திருப்பது, அதன் எழிலை அதிகரிக்கிறது.அதிலும், இப்பெட்டிகளில் பயணிகளுக்கு, வசதிகள் சற்று அதிகம்.

இத்துடன், மதுரை நகருக்கு, 'தேஜஸ்' என்ற அதிவிரைவு, 'ஏசி' வண்டி விரைவில் அமலாகிறது. இது, ஏழு மணி நேரத்தில், சென்னை - மதுரை பயணத்தை நிறைவு செய்யும். அக்காலம் வரும் போது, விமானக் கட்டண உயர்வு பலரை பாதிக்காது.அதேசமயம், தாம்பரம் ஒரு முனையமாக செயல்படுவதால், அங்கிருந்து நெல்லை வரை எளிதாக, 'அந்த்யோதயா' போன்ற குறைந்த கட்டண இருக்கை வசதி சர்வீஸ், இப்போது அதிக பயனுக்கு வந்திருக்கிறது.

சென்னை - சேலம், சென்னை - கோவை ரயில் வசதிகள் ஓரளவு, பயணிகளால் அதிகம் பயன்படுத்தப்படுவதாகும். ஆனால், இப்போது, சென்னை - அரக்கோணம் மற்றும் திருப்பதி, காட்பாடி ஆகிய ஊர்களுக்கு செல்லும், மெயின் லைனில் உள்ள, 'எலக்டிரிக்கல் யூனிட்' ரயில் பெட்டிகள், கழிவறை வசதியுடன் அமையப் போகின்றன. இவை, மற்ற வண்டிகளில் காணப்படும், 'பயோ - டாய்லட்' என்ற நடைமுறைக்கு மாறப்போகிறது.

அதேசமயம், சென்னை - பீச்சில் இருந்து, செங்கல்பட்டு செல்லும் ரயில்கள் அனைத்தும், 'லோக்கல்' ரயில் என்று, எல்லா ஸ்டேஷன்களிலும் நின்று செல்பவையாக உள்ளன. முந்தைய காலக்கட்டத்தில், படிக்கட்டு பயணத்தால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை அடுத்து, இம்முறை அமலானது.ஆனால், சென்னை நகரத்தின் வளர்ச்சி, செங்கல்பட்டு பகுதி வரை அதிகரித்து வருகிறது. அதிக வீடுகள் இப்பகுதியில் உருவாகி வருகின்றன.

மேலும், செங்கல்பட்டு முதல், பீச் வரை, மிகக் குறைந்த கட்டணத்தில் பயணிக்கலாம். அரசு பஸ் போக்குவரத்தில், 'எக்ஸ்பிரஸ்' அல்லது 'டீலக்ஸ்' பஸ் கட்டணத்தில், மூன்றில் ஒரு பங்கு கூட கிடையாது. தவிரவும், காலை, 10:௦௦ மணி வரையிலும், மாலையில், 5:௦௦ முதல், இரவு, 9:௦௦ மணி வரை, இந்த ரயில்களில் கூட்டம் நிரம்பி வழியும்.இந்த புறநகர் சர்வீசஸ்களில், 'தானியங்கி கேட்' போடலாமா என்பது பற்றி விரைவில் பரிசீலிப்பதாக, ரயில்வே சார்பில், வழக்கு விசாரணை ஒன்றில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. முழுவதும், 'ஏசி' வசதி நிரம்பிய மெட்ரோ சர்வீஸ் உடன், புறநகர் சர்வீசை இணைத்து பார்ப்பது சிரமம்.

டிக்கெட் இல்லாத பயணிகள், குறைந்த வகுப்பு டிக்கெட் வாங்கி, முதல் வகுப்பில் பயணம் செய்வோர் ஆகியவற்றைத் தடுக்க முடியாததுடன், அதிக நெருக்கடி பயணம் என்பதை எளிதில் தீர்ப்பது சிரமம்.புறநகர் சர்வீஸ்களில், பிளாட்பாரம் ஓரளவு சுத்தமாக இருப்பது, குழாய்களில் பெரும்பாலான நேரங்களில் தண்ணீர் வசதி, பிளாட்பார கடைக்கோடிகளில் கட்டணக் கழிப்பிடம் ஆகியவை இப்போது, மாறுதலின் அடையாளம்.

இனி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருமால்பூர் வரையிலான சர்வீஸ்களில், சில விரைவு வண்டிகள் அறிமுகத்துடன், கூடுதல் ரயில் விட இருப்பதாக, ரயில்வே துறை அறிவித்துள்ளது. அதே சமயம், ரயிலில் இனி கட்டண உயர்வு என்பதோ, சுவிதா என்ற கட்டணத்தை மாற்றுவதோ, அந்தந்த கோட்ட தலைமை அதிகாரி பொறுப்பு என்பதால், புதிய அறிவுப்புகளில், சில மாற்றங்களும் சேர்ந்து வரலாம்.

அரசு பஸ் போக்குவரத்து , 'ஸ்டேஜ்' கட்டண நடைமுறையை புதிதாகப் பரிசீலிக்காமல், தற்போதைய நடைமுறைகளில் டிக்கெட் வசூலிப்பது, இந்த சர்வீசின் முக்கியத்துவத்தை குறைக்கும். புதிய பஸ்கள் வரத்து மட்டும் அல்ல, கட்டணம் மற்றும் ஸ்டேஜ் சீரமைப்பு, வசதிகள் ஆகியவற்றை இனி மறுபரிசீலனை செய்தால், மக்கள் அதிகம் பயனடைவர். தனியார் பஸ் போக்குவரத்தும் போட்டி அளிக்க முன்வரும் போது, அது அனைவருக்கும் சாதகமாகும்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement